
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை மழைக்கு மத்தியில் 2 – 2 என்ற கணக்கில் சமன் செய்த டாம் லாதம் தலைமையிலான இளம் நியூசிலாந்து அணி கோப்பையை பகிர்ந்து கொண்டது. அதனால் ஏற்கனவே கடந்த வருடம் சொந்த மண்ணில் ஒரு தொடரை கூட வெல்லாமல் இருந்த பாகிஸ்தான் மீண்டும் விமர்சனங்களையும் கிண்டல்களையும் சந்தித்தது. அந்த நிலைமையில் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் இவ்விரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்கின.
ஆனால் அத்தொடரின் 3 போட்டிகளிலுமே டார்ல் மிட்சேல் 2 சதங்கள் அடித்தது தவிர ஏனைய வீரர்கள் சுமாராக செயல்பட்டதால் நியூசிலாந்தை தெறிக்க விட்ட பாகிஸ்தான் ஹாட்ரிக் வெற்றிகளை பதிவு செய்து 3 – 0* என்ற கணக்கில் முன்னிலை பெற்று ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றி தங்கள் மீதான விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்தது. அந்த நிலைமையில் இத்தொடரின் சம்பிரதாய 4வது போட்டி மே 5ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு கராச்சியில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு ஆரம்பத்திலேயே பகார் ஜமான் 14 (17) ரன்களில் அவுட்டானார்.
பாபர் உலக சாதனை:
இருப்பினும் அடுத்து களமிறங்கிய கேப்டன் பாபர் அசாமுடன் இணைந்த மற்றொரு தொடக்க வீரர் ஷான் மசூட் நிதானமாக விளையாட முயற்சித்து 7 பவுண்டரியுடன் 44 (55) ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் களமிறங்கிய முகமது ரிஸ்வான் அவசரப்பட்டு 24 (28) ரன்களில் ரன் அவுட்டானார். அடுத்து வந்த ஆகா சல்மான் கேப்டன் பாபர் அசாமுடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டு 4வது விக்கெட்டுக்கு 117 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய நிலையில் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 58 (46) ரன்களில் ஆட்டமிழந்தார்.
இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக செயல்பட்ட பாபர் அசாம் 10 பவுண்டரியுடன் சதமடித்து 107 (117) ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் அவுட்டானார். அவருடன் இப்திகார் அகமது 28 (22), முகமத் ஹரிஸ் 17* (8) ஷாஹீன் அப்ரிடி 23* (7) என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் அதிரடியான ரன்களை எடுத்ததால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் பாகிஸ்தான் 334/ ரன்கள் குவித்தது. நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக மார் ஹென்றி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அதைவிட இந்த போட்டியில் எடுத்த 107 ரன்களையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 5000 ரன்களை அடித்த வீரர் என்ற தென்னாப்பிரிக்காவின் ஹாசிம் அம்லா நீண்ட காலமாக வைத்திருந்த சாதனையை உடைத்த பாபர் அசாம் புதிய உலக சாதனை படைத்தார். குறிப்பாக விவ் ரிச்சர்ட்ஸ், விராட் கோலி ஆகியோரையும் மிஞ்சிய அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 100 இன்னிங்ஸ்களுக்குள் 5000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற அற்புதமான சாதனையை படைத்தார். அந்த பட்டியல்:
1. பாபர் அசாம் : 97 இன்னிங்ஸ்*
2. ஹாசிம் அம்லா : 101 இன்னிங்ஸ்
3. விவியன் ரிச்சர்ட்ஸ்/விராட் கோலி : தலா 114 இன்னிங்ஸ்
4. டேவிட் வார்னர் : 115 இன்னிங்ஸ்
அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 18 சதங்களை அடித்த வீரர் என்ற சாதனையும் பாபர் அசாம் (97 இன்னிங்ஸ்) படைத்தார். இதற்கு முன் ஹாசிம் அம்லா 102 இன்னிங்ஸில் 18 சதங்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். அதை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு வில் எங் 15, டாம் ப்ளன்டல் 23, டார்ல் மிட்சேல் 34, மார்க் சேப்மேன் 46, கேப்டன் டாம் லாதம் 60 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவருமே பாகிஸ்தானின் தரமான பந்து வீச்சில் சீரான இடைவெளிகளில் பெரிய ரன்களை எடுக்க தவறி ஆட்டமிழந்தனர்.
இதையும் படிங்க:RR vs GT : வெற்றியை தலைகீழாக மாற்றிய சஞ்சு சாம்சனின் தவறு – ராஜஸ்தானை ஆல் ஏரியாவிலும் குஜராத் ஊதி தள்ளியது எப்படி
அடுத்து வந்த வீரர்களும் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பியதால் 43.4 ஓவரிலேயே நியூசிலாந்தை 232 ரன்களுக்கு சுருட்டி 102 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான் 4 – 0* (5) என்ற கணக்கில் இத்தொடரில் வலுவான முன்னிலை பெற்றுள்ளது. அந்த அணிக்கு அதிகபட்சமாக உசாமா மிர் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.