பிஎஸ்எல் 2023 : கிறிஸ் கெயில் உலக சாதனையை உடைத்த பாபர் அசாம் – விராட் கோலியையும் மிஞ்சி கிண்டல்களுக்கு பதிலடி

Advertisement

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பிஎஸ்எல் தொடரின் 2023 சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்று வரும் அந்த தொடரில் முதலில் நடைபெற்ற 30 லீக் போட்டிகளில் பாகிஸ்தானின் கேப்டன் பாபர் அசாம் தலைமையிலான பெஷாவர் ஜால்மி அணி பங்கேற்ற 10 போட்டிகளில் 5 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பதிவு செய்து 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 4வது இடத்தை பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த நிலையில் மார்ச் 16ஆம் தேதியன்று கடாஃபி மைதானத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் இஸ்லாமாபாத் அணியை பெஷாவர் எதிர்கொண்டது.

Babar-Azam

அதில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பெஷாவர் அணிக்கு 60 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த சாய்ம் ஆயுப் 23 (16) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த ஹசீபுல்லா கான் 15 (11) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் மறுபுறம் அதிரடியாக செயல்பட்ட கேப்டன் பாபர் அசாம் 10 பவுண்டரியுடன் 64 (39) ரன்கள் குவித்து முக்கிய நேரத்தில் அவுட்டானார்.

- Advertisement -

கிண்டல்களுக்கு பதிலடி:
அவருக்கு பின் முகமது ஹாரிஸ் 34 (17) ஓமர்சாய் 10 (6) என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியான ரன்களை எடுத்ததால் 20 ஓவர்களில் பெஷாவர் 183/8 ரன்கள் எடுக்க இஸ்லாமாபாத் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் சடாப் கான் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 184 ரன்களை துரத்திய இஸ்லாமாபாத் அணிக்கு ரஹ்மதுல்லா குர்பாஸ் 10 ரன்னில் அவுட்ராகி சென்றாலும் 2வது விக்கெட்டுக்கு 115 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய அலெக்ஸ் ஹேல்ஸ் 57 (37) ரன்களும் ஷான் மசூட் 60 (48) ரன்களும் எடுத்து முக்கிய நேரத்தில் அவுட்டானார்கள்.

ஆனால் டெத் ஓவர்களில் மிகச் சிறப்பாக செயல்பட்ட பெஷாவர் பவுலர்கள் கோலின் முண்ரோ 4, அஸ்ரப் 5, அசாம் கான் 2 என முக்கிய பேட்ஸ்மேன்களை ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக்கியதால் இறுதியில் சடாப் கான் 26* (12) ரன்கள் எடுத்தும் 20 ஓவர்களில் இஸ்லாமாபாத் 171/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 12 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெஷாவர் இன்று நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் லாகூர் அணியை எதிர்கொண்டு வெற்றி கண்டு நாளை நடைபெறும் ஃபைனலுக்கு தகுதி பெற போராட உள்ளது.

- Advertisement -

முன்னதாக 2019 வாக்கில் விராட் கோலியை மிஞ்சும் அளவுக்கு மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறிய பாபர் அசாம் சமீப காலங்களாகவே தனது இடத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக குறைவான ஸ்டிரைக் ரேட்டில் பெரிய ரன்களை குவிக்க வேண்டும் என்ற சூழ்நிலை எண்ணத்துடன் விளையாடுவதாக நிறைய விமர்சனங்கள் காணப்படுகின்றன. அதனால் இவர் ஜிம்பாப்வே போன்ற கத்துக்குட்டிகளுக்கு எதிராக மட்டுமே அடிப்பவர் என்று ரசிகர்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.

போதாக்குறைக்கு அவரது தலைமையில் கடந்த வருடம் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெறாத பாகிஸ்தான் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் ஃபைனல் வரை சென்று தோற்றது. அதனால் கேப்டன்ஷிப் ரீதியாகவும் கடுமையான விமர்சனங்களை சந்தித்த அவர் எதற்கும் செவி சாய்க்காமல் தொடர்ந்து தம்மால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு தனது அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்று இதுவரை 9 போட்டிகளில் 416* ரன்களை குவித்து 2023 பிஎஸ்எல் தொடரில் அதிக ரன்கள் எடுத்த 2வது வீரராக அசத்தி வருகிறார்.

- Advertisement -

அதை விட இப்போட்டியில் 64 ரன்கள் எடுத்த அவர் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 9000 ரன்களை குவித்த வீரர் என்ற கிறிஸ் கெயில் சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்து விராட் கோலி, டேவிட் வார்னர் போன்றவர்களையும் மிஞ்சியுள்ளார். அந்த பட்டியல்:
1. பாபர் அசாம் : 245* இன்னிங்ஸ்
2. கிறிஸ் கெயில் : 249 இன்னிங்ஸ்
3. விராட் கோலி : 271 இன்னிங்ஸ்
4. டேவிட் வார்னர் : 273 இன்னிங்ஸ்
5. ஆரோன் பின்ச் : 281 இன்னிங்ஸ்

இதையும் படிங்க: ஸ்லெட்ஜிங் செய்த என்னை சச்சின் அன்பால் சாய்த்ததை நெனச்சா கடுப்பாகுது – 1997 பின்னணியை பகிரும் சக்லைன் முஷ்டக்

அத்துடன் டி20 கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் 9000 ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையும் படைத்துள்ள அவர் ஏற்கனவே அதிக சதங்கள் அடித்த ஆசிய பேட்ஸ்மேனாக (9) மகத்தான சாதனையும் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement