
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 38-வது லீக் போட்டியானது வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதிவருகின்றன. பெரும்பலம் வாய்ந்த இவ்விரு அணிகளுக்கு இடையேயான இந்த போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
அந்த வகையில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து தற்போது சிஎஸ்கே அணி முதலில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது சென்னை அணியில் பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அணியில் ஒரு முக்கிய மாற்றத்தை கேப்டன் தோனி நிகழ்த்தி இருந்தார். அந்த வகையில் கடந்த சில போட்டிகளாகவே மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வந்த ராகுல் திரிப்பாதி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக 17 வயதான ஆயுஷ் மாத்ரே என்ற வீரருக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது.
தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பில் இன்றைய போட்டியில் மூன்றாவது வீரராக களமிறங்கிய ஆயுஷ் மாத்ரே 15 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 32 ரன்கள் குவித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய பின்னர் தீபக் சாகரின் பந்துவீச்சில் சான்ட்னரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலம் அவர் சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.
அந்த வகையில் அவர் படைத்த சாதனை யாதனையில் : இதுவரை சிஎஸ்கே அணிக்காக இளம் வயதில் அறிமுகமான வீரர் என்ற சாதனையை தமிழக வீரர் அபினவ் முகுந்த் வைத்திருந்தார். கடந்து 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது அபினவ் முகுந்த் சென்னை அணிக்காக 18 வயது 139 நாட்களில் அறிமுகமாகி இருந்தார்.
இதையும் படிங்க : என்னைவிட ஆட்டநாயகன் விருதினை அவருக்கு குடுக்குறது தான் சரியா இருக்கும் – பெருந்தன்மையாக பேசிய விராட் கோலி
இந்நிலையில் அவரது இந்த சாதனையை முறியடித்துள்ள ஆயுஷ் மாத்ரே இன்று தனது 17-வது வயது 278 நாளில் சென்னை அணிக்காக அறிமுகமாகி மிக இளம் வயதில் சென்னை அணிக்காக அறிமுகமான வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்த போட்டியில் அவரது ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்ததால் இனியும் தொடர்ச்சியாக அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.