வீடியோ : சிக்ஸர்களால் மிரட்டிய அக்சர் படேல், அபார பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றிய அஷ்வின் – ஆஸிக்கு இந்தியா பதிலடி

Axar Patel Ashwin
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் குறைந்தது 3 போட்டிகளை வென்று லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் முனைப்புடன் இந்தியா விளையாடி வருகிறது. அதில் நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா ஆரம்பத்திலே முன்னிலை பெற்ற நிலையில் பிப்ரவரி 17ஆம் தேதியன்று டெல்லியில் துவங்கிய 2வது போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 263 ரன்கள் குவித்தது. ஸ்டீவ் ஸ்மித் 0, மார்னஸ் லபுஸ்ஷேன் 18 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் உஸ்மான் கவாஜா 81 ரன்களும் பீட்டர் ஹேண்ட்ஸ்கோப் 72 ரன்களும் எடுத்து ஓரளவு காப்பாற்றினர்.

இந்தியா சார்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளும் அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு 46 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் தடுமாற்றமாக செயல்பட்ட ராகுல் 17 ரன்களிலும் ஓரளவு சிறப்பாக செயல்பட்ட ரோகித் சர்மா 32 ரன்களிலும் நேதன் லயன் சுழலில் சிக்கினார்கள். போதாக்குறைக்கு 100வது போட்டியில் விளையாடிய புஜாரா 0, ஸ்ரேயாஸ் ஐயர் 4 என முக்கிய வீரர்களை மீண்டும் சாய்த்த நேதன் லயன் மிகப்பெரிய சவால் கொடுத்தார்.

- Advertisement -

காப்பாற்றிய பார்ட்னர்ஷிப்:
அதனால் 66/4 என சரிந்த இந்தியாவை 5வது விக்கெட்டுக்கு 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு காப்பாற்றிய ரவீந்திர ஜடேஜா 26 ரன்களில் அவுட்டான நிலையில் விராட் கோலி 44 ரன்களில் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தார். போதாகுறைக்கு விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் 6 ரன்களில் பொறுப்பின்றி அவுட்டானதால் 139/7 என தடுமாறிய இந்தியா மேலும் சரிந்ததால் இந்திய ரசிகர்கள் கலக்கமடைந்தனர்.

குறிப்பாக சுழலுக்கு சாதகமான இந்த மைதானத்தில் ஆஸ்திரேலியா 100 ரன்கள் முன்னிலை பெற்று விட்டால் தோல்வி உறுதியாகி விடும் என்று இந்திய ரசிகர்கள் கவலையடைந்த போது நாங்கள் இருக்கும் வரை அது நடக்காது என்ற வகையில் அக்சர் பட்டேல் – ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். தரமான ஸ்பின்னர்களான இவர்கள் பிட்ச் எப்படி இருக்கிறது என்பதை ஏற்கனவே முதல் இன்னிங்ஸில் தெரிந்து வைத்த காரணத்தாலும் அதற்கேற்றார் போல் எதிரணி எப்படி வீசுவார்கள் என்று தெரிந்த காரணத்தாலும் அதற்கு தகுந்தார் போல் நங்கூரமாக நின்று பேட்டிங் செய்தார்கள்.

- Advertisement -

அதில் ஒருபுறம் அஸ்வின் நிலையாக பேட்டிங் செய்ய மறுபுறம் அக்சர் பட்டேல் சற்று நிதானமாகவும் அதிரடியான வேகத்திலும் ரன்களை சேர்த்தார். குறிப்பாக அறிமுக ஸ்பின்னர் மேத்யூ குனேமான் வீசிய 60வது ஓவரின் முதலிரண்டு பந்துகளில் அடுத்தடுத்த சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் இந்தியா மீதிருந்த அழுத்தத்தை ரிலீஸ் செய்தார். அந்த வகையில் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆஸ்திரேலியாவுக்கு தொல்லை கொடுத்த இந்த ஜோடியில் அக்சர் படேல் அரை சதம் கடந்து அசத்தலாக பேட்டிங் செய்தார்.

அவருக்கு சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்த ரவிச்சந்திரன் அஸ்வின் 8வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 5 பவுண்டரியுடன் வெற்றியை தீர்மானிக்கக்கூடிய 37 ரன்களை அடித்து அவுட்டானார். அடுத்த சில ஓவர்களிலேயே மறுபுறம் அற்புதமாக பேட்டிங் செய்த அக்சர் படேல் 9 பவுண்டரி 3 சிக்சருடன் 74 ரன்கள் குவித்து அவுட்டானார். அவர்களது பொறுப்பான ஆட்டத்தால் 1 கட்டத்தில் 200 ரன்களை தாண்டுமா என்று கருதப்பட்ட இந்தியா முதல் இன்னிங்சில் 262 ரன்கள் குவித்து கம்பேக் கொடுத்தது.

- Advertisement -

முதல் போட்டியை விட சிறப்பாக பந்து வீசி 1 ரன் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக நேதன் லயன் 5 விக்கெட்டுகள் சாய்த்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு உஸ்மான் கவாஜா 6 ரன்களில் அவுட்டானாலும் டிராவிஸ் ஹெட் அதிரடியாக 39* (40) ரன்களும் மார்னஸ் லபுஸ்ஷேன் 16* (19) ரன்களும் எடுத்தனர்.

இதையும் படிங்க: 15 வருடம் ஐபிஎல் விளையாடி என்ன பயன், நீங்க வெளிநாடுகளில் பூனை தான் – ஆஸி வீரரை ஆதங்கத்துடன் விமர்சித்த கம்பீர்

அதனால் 2வது நாள் முடிவில் 61 ரன்கள் எடுத்துள்ள அந்த அணி 62 ரன்கள் முன்னிலை பெற்று விளையாடி வருகிறது. தற்சமயத்தில் இரு தரப்புக்கும் வெற்றி சமமாக இருப்பதால் வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

Advertisement