15 வருடம் ஐபிஎல் விளையாடி என்ன பயன், நீங்க வெளிநாடுகளில் பூனை தான் – ஆஸி வீரரை ஆதங்கத்துடன் விமர்சித்த கம்பீர்

Gambhir
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பை ஏற்கனவே உறுதி செய்துள்ள ஆஸ்திரேலியா 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் சொந்த மண்ணில் சந்தித்த தோல்விக்கு இம்முறை இந்தியாவை அவர்களது சொந்த மண்ணில் தோற்கடிக்கும் முனைப்புடன் களமிறங்கினாலும் நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் சுமாராக செயல்பட்டு இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது. அதைத்தொடர்ந்து டெல்லியில் நடைபெற்று வரும் 2வது போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 81 ரன்களும் பீட்டர் ஹேண்ட்ஸ்கோப் 72* ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து இந்தியா விளையாடி வரும் நிலையில் முதல் நாளன்று ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் வார்னர் தலையில் காயத்தை சந்தித்ததால் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவீன கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் மிகச்சிறந்த அதிரடி தொடக்க வீரரான அவர் 35 வயதை கடந்து விட்டதால் சமீப காலங்களாகவே அதிரடியாக செயல்பட முடியாமல் விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

கம்பீர் விமர்சனம்:
அதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய அவர் 1, 10, 15 என இத்தொடரின் 3 இன்னிங்களிலும் சொற்ப ரன்களில் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றத்தை கொடுத்தார். அதனால் ஏற்கனவே அணியிலிருந்து நீக்குமாறு விமர்சனங்கள் எழுந்த அவரை தற்போது இந்த காயத்தை காரணமாக வைத்து ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் கழற்றி வைத்துள்ளது. முன்னதாக வெற்றிகரமான தொடக்க வீரர்களில் ஒருவராக கருதப்படும் டேவிட் வார்னர் இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை விளையாடிய 19 இன்னிங்ஸில் வெறும் 414 ரன்களை 21.78 என்ற சுமாரான சராசரியிலேயே எடுத்துள்ளார்.

David-Warner

இத்தனைக்கும் ஆரம்பத்தில் தடுமாறினாலும் கடந்த 15 வருடங்களாக ஐபிஎல் தொடரில் விளையாடி இந்திய சூழ்நிலைகளை பற்றி நன்கு தெரிந்துள்ள அவர் அந்த அனுபவத்தை பயன்படுத்தாமல் இப்போதும் சொதப்புவது இந்தியாவில் இருக்கும் அவரது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. இந்நிலையில் 15 வருடங்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி இந்திய சூழ்நிலைகளைப் பற்றி தெரிந்தும் இந்திய மண்ணில் டேவிட் வார்னர் சொதப்புவது தமக்கு ஏமாற்றத்தை கொடுப்பதாக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அத்துடன் அவர் ஆஸ்திரேலிய சூழ்நிலைகளில் மட்டுமே அசத்தக்கூடியவர் என்று வெளிப்படையாக விமர்சித்துள்ள கம்பீர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “இந்த இன்னிங்ஸை பார்த்த போது டேவிட் வார்னர் தடுமாறுகிறார் என்பதை உங்களால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். குறிப்பாக அஸ்வினுக்கு மட்டுமல்லாமல் முகமது சிராஜ், முகமது ஷமி ஆகியோருக்கு எதிராகவும் அவர் தடுமாறுகிறார்”

gambhir

“ஆனால் கடந்த 15 வருடங்களாக ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ள உங்களுக்கு இது 3வது இந்திய சுற்றுப்பயணமாகும். அதற்காக இங்குள்ள சூழ்நிலைகள் வித்தியாசமானது என்று சொல்ல முடியாது. மேலும் இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு டெஸ்ட் தொடர் துவங்கும் 15 நாட்கள் முன்பாக சென்று ஒரு பயிற்சி போட்டியில் விளையாடி அசத்துகிறார்கள். ஆனால் நீங்கள் இந்தியாவில் நிறைய விளையாடியும் இவ்வளவு சுமாராக செயல்பட்டுள்ளீர்கள். பொதுவாக இந்திய வீரர்களின் தரத்தை நாம் ஆஸ்திரேலியாவில் வெளிப்படுத்தும் செயல்பாடுகளை வைத்து மதிப்பிடுவோம்”

இதையும் படிங்க: வீடியோ : குருவை மிஞ்சிய கேப்டன், டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய அதிரடி உலக சாதனை படைத்த பென் ஸ்டோக்ஸ் – ரசிகர்கள் பாராட்டு

“அதே போல் டேவிட் வார்னரையும் நீங்கள் மதிப்பிட்டால் அவர் இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் அதிகமாக தடுமாறியுள்ளார். அவர் இந்தியா மற்றும் இங்கிலாந்தில் எப்போதும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மகிழ்ச்சியுடன் விளையாடுவதில்லை. எனவே அவர் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்று நாம் சொல்ல முடியாது. அவர் ஆஸ்திரேலியா சூழ்நிலைகளில் அபாரமான பேட்ஸ்மேன். ஆனால் வெளிநாட்டு சூழ்நிலைகளில் சுமாரானவர்” என்று கூறினார். முன்னதாக 2024 டி20 உலக கோப்பையுடன் ஏற்கனவே ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள வார்னருக்கு இதுவே இந்திய மண்ணில் விளையாடிய கடைசி டெஸ்ட் தொடர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement