பாண்டிங், தோனியை மிஞ்சிய லென்னிங் புதிய உலக சாதனை – டபுள் ஹாட்ரிக் கோப்பை வென்று வரலாறு படைத்த ஆஸி மகளிரணி

- Advertisement -

சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் 8வது முறையாக தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. நடப்பு சாம்பியன், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இந்தியா உள்ளிட்ட உலகின் டாப் 16 கிரிக்கெட் அணிகள் பங்கேற்ற இத்தொடர் கடந்த பிப்ரவரி 11ஆம் தேதியன்று துவங்கியது. அதில் ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையில் முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய இந்தியா லீக் சுற்றில் அசத்தினாலும் வழக்கம் போல நாக் அவுட் சுற்றில் ஆஸ்திரேலியாவிடம் அடிவாங்கி பரிதாபமாக வெளியேறியது. மறுபுறம் சொந்த மண்ணில் ஆரம்பம் முதலே சீரான செயல்பாடுகளை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்கா அரையிறுதியில் வலுவான இங்கிலாந்தை தோற்கடித்து வரலாற்றில் முதல் முறையாக தங்களது ஆடவர் அணியை மிஞ்சி ஐசிசி உலகக் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெற்ற புதிய சரித்திரம் படைத்தது.

அதனால் காலம் காலமாக பெற்று வரும் சோக்கர் என்ற பெயரை தென்னாபிரிக்கா உடைக்கும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் பிப்ரவரி 26ஆம் தேதியன்று நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் பைனலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 20 ஒவர்களில் 156/6 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அலிசா ஹீலி 18 (20), அஸ்லே கார்ட்னர் 29 (21), ஹாரீஸ் 10 (9), கேப்டன் மெக் லென்னிங் 10 (11), எலிஸ் பெரி 7 (5) என முக்கிய வீராங்கனைகளை சொற்ப ரன்களில் அவுட்டாக்கி தென் ஆப்பிரிக்கா போராடியது.

- Advertisement -

நிறுத்த முடியாத ஆஸ்திரேலியா:
ஆனால் தொடக்க வீரராக களமிறங்கி சீரான வேகத்தில் அதிரடியாக செயல்பட்ட பெத் மூனி 9 பவுண்டரி 1 சிக்ருடன் கடைசி வரை அவுட்டாகாமல் 74* (53) ரன்கள் குவித்து சூப்பர் பினிஷிங் கொடுத்தார். தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக இஸ்மாயில் மற்றும் கேம்ப் ஆகியோர் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர். அதை தொடர்ந்து 157 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு பிரிட்ஸ் 10 (17), கேம்ப் 11 (11), கேப்டன் லஸ் 2 (5) என முக்கிய வீராங்கனைகளை அதிரடி காட்ட விடாமல் ஆரம்பத்திலேயே அவுட்டாக்கி ஆஸ்திரேலியா அழுத்தம் கொடுத்தது.

இருப்பினும் அதை ஓரளவு சமாளித்த தொடக்க வீராங்கனை லாரா வோல்வர்ட் 5 பவுண்டரி 3 சிக்சருடன் போராடி 61 (48) ரன்கள் குவித்து 17வது ஓவரில் முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்ததால் போட்டி அப்படியே ஆஸ்திரேலியாவின் பக்கம் மாறியது. இறுதி வரை எவ்வளவோ போராடியும் 20 ஓவர்களில் 137/6 ரன்கள் மட்டுமே எடுத்த தென்னாபிரிக்கா சொந்த மண்ணில் முதல் முறையாக ஒரு ஐசிசி கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டு 19 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. மறுபுறம் நடப்பு சாம்பியன் என்பதற்கு எடுத்துக்காட்டான செயல்பாடுகளை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியா 6வது டி20 உலக கோப்பையை வென்று சரித்திரம் படைத்துள்ளது.

- Advertisement -

குறிப்பாக கடந்த 2009 முதல் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலக கோப்பையில் இதுவரை நடைபெற்ற 8 தொடர்களில் 6 கோப்பைகளை வென்றுள்ள ஆஸ்திரேலிய மகளிரணி தங்கள் நாட்டின் ஆடவர் அணிக்கு நிகராக செயல்பட்டு வருவது ஒட்டுமொத்த உலக ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக 2009இல் இங்கிலாந்து, 2016இல் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் வென்றதை தவிர்த்து 2010, 2012, 2014 ஆகிய அடுத்தடுத்த 3 உலக கோப்பைகளை ஏற்கனவே வென்று ஹாட்ரிக் சாதனை படைத்த அந்த அணி 2018, 2020, 2023* என தற்போது மீண்டும் 2வது முறையாக ஹாட்ரிக் கோப்பையை வென்றுள்ளது.

அதன் வாயிலாக ஆடவர் அல்லது மகளிர் என அனைத்து வகையான உலகக்கோப்பை வரலாற்றில் டபுள் ஹாட்ரிக் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள முதல் அணியாகவும் சரித்திரம் படைத்துள்ள ஆஸ்திரேலியா எங்களை யாராலும் நிறுத்த முடியாது என்று உலகிற்கே சவால் விடுகிறது என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க:டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடும் இங்கிலாந்து அணியை எச்சரித்த – தமிழக வீரர் அஷ்வின்

அத்துடன் இந்த 6இல் 4 டி20 உலக கோப்பை மற்றும் 1 ஒரு 50 ஓவர் உலககோப்பை வென்று கொடுத்துள்ள ஆஸ்திரேலிய மகளிரணி கேப்டன் மெக் லென்னிங் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஐசிசி கோப்பைகளை வென்ற கேப்டன் என்ற ரிக்கி பாண்டிங் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. மெக் லென்னிங் (ஆஸ்திரேலியா) : 5*
2. ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) : 4
3. எம்எஸ் தோனி (இந்தியா) : 3

Advertisement