
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையை 2 – 1 (4) என்ற கணக்கில் இழந்த ஆஸ்திரேலியா 3வது போட்டியில் வென்று ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்து தங்களது நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கும் தகுதி பெற்றது. அதைத்தொடர்ந்து அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்கிய அந்த அணி முதல் போட்டியில் பேட்டிங்கில் சொதப்பி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
அதனால் இத்தொடரை வெல்ல நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் மார்ச் 19ஆம் தேதியன்று விசாகப்பட்டினத்தில் மதியம் 1.30 மணிக்கு துவங்கிய 2வது போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. நேற்றிரவு அங்கு மழை பெய்ததால் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டிருந்த பிட்ச் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதை கணித்த அந்த அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்தியாவுக்கு பெரிய சவாலை கொடுத்தது. குறிப்பாக முதல் ஓவரிலேயே சுப்மன் கில்லை டக் அவுட்டாக்கிய மிட்சேல் ஸ்டார்க் அடுத்த சில ஓவர்களில் ரோஹித் சர்மா 13, சூரியகுமார் யாதவ் 0, கடந்த போட்டியின் நாயகன் கேஎல் ராகுல் 9 என முக்கிய பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் காலி செய்து மிரட்டலை கொடுத்தார்.
உலக சாதனை வெற்றி:
போதாகுறைக்கு ஹர்டிக் பாண்டியா 1 ரன்னில் அவுட்டாகி சென்றதால் 49/5 என சரிந்த இந்தியாவை காப்பாற்ற போராடிய விராட் கோலியும் 4 பவுண்டரியுடன் அதிகபட்சமாக 31 (35) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த நிலையில் அச்சர் படேல் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 29* (29) ரன்கள் எடுத்து போராடியும் ரவீந்திர ஜடேஜா 16, குல்தீப் யாதவ் 4 என எதிர்ப்புறம் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி சென்றனர். அதனால் வெறும் 26 ஓவரிலேயே இந்தியாவை 117 ரன்களுக்கு சுருட்டிய ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளையும் சீன் அபோட் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
அதை தொடர்ந்து 118 என்ற சுலபமான இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு அதே பிட்ச்சில் இந்திய பவுலர்களை பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி சரமாரியாக அடித்து நொறுக்கிய ஆஸ்திரேலியா வெறும் 11 ஓவரிலேயே 121/0 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது. அந்த அணிக்கு டிராவிஸ் ஹெட் 10 பவுண்டரியுடன் 51* (30) ரன்களும் மிட்சேல் மார்ஷ் 6 பவுண்டரி 6 சிக்சருடன் 66* (36) ரன்களும் எடுத்து சூப்பர் பினிஷிங் கொடுத்தனர். அப்படி சொந்த மண்ணில் வலுவான அணியாகவும் உலகில் நம்பர் ஒன் அணியாகவும் திகழும் இந்தியாவை அசால்டாக தோற்கடித்த ஆஸ்திரேலியா 1 – 1* (3) என்ற கணக்கில் இத்தொடரை சமன் செய்து தக்க பதிலடி கொடுத்துள்ளது.
அதை விட 11 ஓவரிலேயே வெற்றிகரமாக சேசிங் செய்து 234 பந்துகள் மீதம் வைத்து இந்த போட்டியில் எளிதாக வென்ற ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக அதிக பந்துகளை மீதம் வைத்து பந்துகள் அடிப்படையில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த அணி என்ற நியூசிலாந்தின் சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. ஆஸ்திரேலியா : 234 பந்துகள், விசாகப்பட்டினம், 2023*
2. நியூசிலாந்து : 212 பந்துகள், ஹமில்டன், 2019
3. இலங்கை : 209 பந்துகள், தம்புலா, 2010
4. இலங்கை : 181 பந்துகள், ஹம்பன்தோட்டா, 2012
5. இலங்கை : 176 பந்துகள், தரம்சாலா, 2017
மறுபுறம் பேட்டிங்கில் மொத்தமாக சொதப்பி படுதோல்வியை சந்தித்த இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் பந்துகள் அடிப்படையில் வரலாற்றின் மிகப்பெரிய தோல்வியை பதிவு செய்து அவமானத்தை சந்தித்துள்ளது. குறிப்பாக ஸ்விங் பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலைகளில் தரமான இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் பேட்டிங்கில் சொதப்பியதே இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இதையும் படிங்க: IND vs AUS : இவர் அதுக்கு சரிப்பட மாட்டார் பேசாமா ட்ராப் பண்ணுங்க – மோசமான சாதனை படைத்த சூரியகுமார், ரசிகர்கள் ஏமாற்றம்
அத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் குறைந்தபட்ச ஸ்கோரையும் (117 ஆல் அவுட்) பதிவு செய்து இந்தியா பரிதாப சாதனை படைத்துள்ளது. முந்தைய சாதனை : 148 ஆல் அவுட், வதோதரா, 2007. இதனால் சொந்த மண்ணில் இத்தொடரை வென்று தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கும் இந்தியா தள்ளப்பட்டுள்ளது.