IND vs AUS : இவர் அதுக்கு சரிப்பட மாட்டார் பேசாமா ட்ராப் பண்ணுங்க – மோசமான சாதனை படைத்த சூரியகுமார், ரசிகர்கள் ஏமாற்றம்

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதலில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்று டெஸ்ட் சாம்பியன்சிப் ஃபைனலுக்கு முன்னேறிய இந்தியா அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரில் மும்பை நடைபெற்ற முதல் போட்டியில் கடுமையாக போராடி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று அசத்தியது. அந்த நிலையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டி மார்ச் 19ஆம் தேதியன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மதியம் 1.30 மணிக்கு துவங்கியது.

நேற்று அங்கே கனமழை கொட்டி தீர்த்ததால் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டிருந்த பிட்ச் பவுலிங்க்கு சாதகமாக இருக்கும் என்று ஆரம்பத்திலேயே கணித்த ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ஆஸ்திரேலியாவின் அற்புதமான ஸ்விங் வேகப்பந்து வீச்சில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து வெறும் 26 ஓவர்களில் 117 ரன்களுக்குத் சுருண்டது. சுப்மன் கில் 0, ரோகித் சர்மா 13, சூரியகுமார் யாதவ் 0, கேஎல் ராகுல் 9, ஹர்திக் பாண்டியா 1, ரவீந்திர ஜடேஜா 16 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி சென்ற நிலையில் அதிகபட்சமாக விராட் கோலி 31 ரன்களும் அக்சர் பட்டேல் 29* ரன்களும் எடுத்தனர்.

- Advertisement -

செட்டாக மாட்டார்:
ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். முன்னதாக மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சூரியகுமார் யாதவ் பல வருடமாக போராடி தாமதமாக 30 வயதில் கடந்த 2021இல் அறிமுகமாகி டி20 கிரிக்கெட்டில் சரவெடியாக செயல்பட்டு குறுகிய காலத்திலேயே உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி சாதனை படைத்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்து வருகிறார். குறிப்பாக எதிரணி எப்படி பந்து வீசினாலும் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் கற்பனை செய்ய முடியாத புதுபுது ஷாட்டுகளால் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்க விட்டு வரும் அவர் டி20 கிரிக்கெட்டில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தி லேட்டஸ்ட் மிஸ்டர் 360 பேட்ஸ்மேனாக ரசிகர்களாலும் முன்னாள் கொண்டாடப்படுகிறார்.

ஆனால் சற்று நிதானம் காட்ட வேண்டிய ஒருநாள் கிரிக்கெட்டில் ஆரம்பம் முதலே தடுமாறி வரும் அவர் இதுவரை 22 போட்டிகளில் 433 ரன்களை 25.47 என்ற மோசமான சராசரியில் ஒரு சதம் கூட அடிக்காமல் சுமாராகவே செயல்பட்டு வருகிறார். குறிப்பாக தற்சமயத்தில் டி20 போட்டிகளில் உச்சகட்ட பார்மில் இருக்கும் அவர் கடந்த 10 ஒருநாள் போட்டிகளில் முறையே 0, 0, 14, 31, 4, 6, 34*, 4, 8, 9 என ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சொதப்பி வருகிறார். அதிலும் குறிப்பாக கடைசி ஒருநாள் 12 இன்னிங்ஸில் 12.63 என்ற மோசமான சராசரியில் பேட்டிங் செய்து வரும் அவர் அதே கடைசி 12 டி20 இன்னிங்ஸில் 70.50 என்ற மிரட்டலான பேட்டிங் சராசரியில் பெரிய ரன்களை குவித்து வருகிறார்.

- Advertisement -

இதிலிருந்தே இவர் நிதானமும் நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாட வேண்டிய ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட முடியாமல் தடுமாறுவது தெளிவாக தெரிகிறது. அதை விட இத்தொடரின் முதல் போட்டியில் மிட்சேல் ஸ்டார்க்கிடம் எல்பிடபிள்யூ முறையில் கோல்டன் டக் அவுட்டான அவர் இந்த போட்டியிலும் கொஞ்சம் கூட மாறாமல் மீண்டும் அதே போல எம்பிடபுள்யூ முறையில் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி சென்றார்.

இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் கோல்டன் டக் அவுட்டான முதல் இந்திய வீரர் என்ற மோசமான சாதனையும் சூரியகுமார் யாதவ் படைத்துள்ளார். இதற்கு முன் நிறைய இந்திய வீரர்கள் கோல்டன் டக் அவுட்டானாலும் இவரைப் போல ஒரு தொடரின் அடுத்தடுத்த போட்டிகளில் கோல்டன் அவுட்டானதில்லை.

இதையும் படிங்க: IND vs AUS : மிட்சேல் ஸ்டார்க் வேகத்தில் பெட்டி பாம்பாக அடங்கிய இந்தியா – சொந்த மண்ணில் ஆஸிக்கு எதிராக மோசமான சாதனை

இதனால் ஏமாற்றத்தை சந்தித்துள்ள ரசிகர்கள் இவர் டி20 போட்டிகளுக்கு மட்டுமே பொருந்துவார் ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்று விமர்சிப்பதுடன் சஞ்சு சாம்சன் போன்ற வேறு வீரர்களுக்கு வாய்ப்பளிக்குமாறு கோரிக்கை வைக்கிறார்கள்.

Advertisement