IND vs AUS : மிட்சேல் ஸ்டார்க் வேகத்தில் பெட்டி பாம்பாக அடங்கிய இந்தியா – சொந்த மண்ணில் ஆஸிக்கு எதிராக மோசமான சாதனை

MItchell Starc IND vs AUS
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கும் தகுதி பெற்ற இந்தியா அடுத்ததாக அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்கியுள்ளது. மும்பையில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையில் பந்து வீச்சில் அசத்திய இந்தியா 189 ரன்களை துரத்தும் போது ஆரம்பத்திலேயே மடமடவென விக்கெட்டுகளை இழந்தும் கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரது உதவியால் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.

மறுபுறம் பின்னடைவை சந்தித்த ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்ய மார்ச் 19ஆம் தேதியன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் துவங்கிய 2வது போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. முன்னதாக இப்போட்டி நடைபெறும் விசாகப்பட்டினத்தில் நேற்று இரவு முழுவதும் மழை கொட்டி தீர்த்ததால் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டிருந்த பிட்ச் எதிர்பார்க்கப்பட்டது போலவே இப்போட்டியில் பந்து வீச்சு சாதகமாக இருந்தது.

- Advertisement -

சொதப்பிய இந்தியா:
அதைக் கச்சிதமாக கணித்து முதலில் பந்து வீச தீர்மானித்த ஆஸ்திரேலியாவுக்கு முதல் ஓவரிலேயே சுப்மன் கில்லை டக் அவுட்டாக்கிய நம்பிக்கை நட்சத்திரம் மிட்சேல் ஸ்டார்க் அடுத்த சில ஓவர்களில் கேப்டன் ரோகித் சர்மாவையும் 13 (15) ரன்களில் காலி செய்தார். போதாக்குறைக்கு அடுத்து வந்த சூரியகுமார் யாதவை கோல்டன் டக் அவுட்டாக்கிய அவர் கடந்த போட்டியின் நாயகன் கேஎல் ராகுலையும் 9 (12) ரன்களில் அவுட்டாக்கி ஆரம்பத்திலேயே இந்திய பேட்டிங்கை உடைத்தார்.

அந்த நிலையில் வந்த ஹர்திக் பாண்டியா 1 ரன்னில் அவுட்டாகி சென்றதால் 49/5 என சரிந்த இந்தியாவை காப்பாற்ற போராடிய விராட் கோலியும் பவுண்டரியுடன் 31 (35) ரன்களில் ஆட்டமிழந்து சென்றார். அதனால் 100 ரன்களையாவது இந்தியா தாண்டுமா என்று ரசிகர்கள் கவலையடைந்த போது பொறுப்புடன் விளையாட முயன்ற ரவீந்திர ஜடேஜா 16 ரன்களில் அவுட்டாகியும் மறுபுறம் போராடிய அக்சர் படேல் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 29* (29) ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

ஆனாலும் அவருக்கு டெயில் எண்டர்கள் கை கொடுக்கத் தவறியதால் 26 ஓவரிலேயே 117 ரன்களுக்கு இந்தியாவை சுருட்டிய ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளையும் சீன் அபோட் 3 விக்கெட்டுகளையும் நாதன் எலிஸ் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். குறிப்பாக லேசான மேகமூட்டம் இருந்ததை பயன்படுத்தி அற்புதமாக ஸ்விங் செய்து அதிரடியான வேகத்தில் பந்து வீசிய மிட்சேல் ஸ்டார்க் உலகின் நம்பர் ஒன் அணியான இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வெறும் 117 ரன்களுக்கு பெட்டி பாம்பாக அடக்கி கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்துள்ளார் என்றே சொல்லலாம்.

அதை விட இப்போட்டியில் வெறும் 117 ரன்களுக்கு அவுட்டான இந்தியா ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து மோசமான பரிதாப சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 2007ஆம் ஆண்டு வதோதரா மைதானத்தில் நடைபெற்ற 5வது ஒருநாள் போட்டியில் தோனி தலைமையிலான இந்தியா 5 விக்கெட்களை எடுத்த மிட்சேல் ஜான்சன் மிரட்டலில் 39.4 ஓவரில் 148 ரன்களுக்கு சுருண்டதே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: IND vs AUS : மிட்சேல் ஸ்டார்க் வேகத்தில் பெட்டி பாம்பாக அடங்கிய இந்தியா – சொந்த மண்ணில் ஆஸிக்கு எதிராக மோசமான சாதனை

அப்போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது போல் இந்த போட்டியில் வெறும் 118 ரன்களை துரத்தி எளிதாக வென்று 1 – 1* (3) என்ற கணக்கில் இத்தொடரை சமன் செய்து இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுக்க ஆஸ்திரேலியா தயாராகியுள்ளது. இருப்பினும் பந்து வீச்சில் ஏதாவது மேஜிக் நிகழ்த்தி வெற்றி பெறுவதற்கு இந்தியா போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement