
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை இறுதிக்கட்டத்தை தொட்டுள்ளது. அதில் இந்தியா நடப்புச் சாம்பியன், இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகள் சூப்பர் 8 சுற்றில் தேவையான வெற்றிகளை பெற்று செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி லீக் சுற்றில் அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்காவை தோற்கடித்தது.
அதைத் தொடர்ந்து சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றது. முன்னதாக இத்தொடரின் லீக் சுற்றில் இங்கிலாந்துக்கு நிகராக ஸ்காட்லாந்தும் வெற்றி பெற்றது. அதனால் தங்களுடைய கடைசிப் போட்டியில் ஸ்காட்லாந்தை ஆஸ்திரேலியா வீழ்த்தினால் மட்டுமே இங்கிலாந்து சூப்பர் 8 சுற்றுக்கு நிலை ஏற்பட்டது.
ஆஸியின் கொட்டம்:
அப்போது தங்களுடைய பரம எதிரியான இங்கிலாந்தை லீக் சுற்றுடன் வீட்டுக்கு அனுப்புவதற்கான வேலையை ஸ்காட்லாந்து போட்டியில் செய்வோம் என்று ஆஸ்திரேலியாவின் ஜோஸ் ஹேசல்வுட் தெரிவித்தார். அதற்கேற்றார் போல் ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் 6 கேட்ச்களை தவற விட்டனர். அதையும் தாண்டி கடைசி நேரத்தில் ஸ்காட்லாந்து சொதப்பியதால் அப்போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
அதன் காரணமாக இங்கிலாந்து அணியும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. இது ஒருபுறமிருக்க இத்தொடர் துவங்குவதற்கு முன்பாகவே 2024 டி20 உலகக் கோப்பையில் செமி ஃபைனலுக்கு தகுதி பெறப்போகும் 4 அணிகள் எவை? என்று பட் கமின்ஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு “கண்டிப்பாக ஆஸ்திரேலியா இருக்கும். எஞ்சிய 3 அணிகளை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்” என்று பட் கமின்ஸ் அதீத தன்னம்பிக்கையுடன் பதிலளித்தார்.
ஆனால் இத்தொடரில் ஆரம்பத்தில் வலுவாக செயல்பட்ட ஆஸ்திரேலியாவை முக்கியமான சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தான் தோற்கடித்தது. அதே வேகத்தில் இந்திய அணியும் 24 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. அதன் காரணமாக இந்த உலக கோப்பையில் இருந்து ஆஸ்திரேலியா சூப்பர் 8 சுற்றுடன் பரிதாபமாக வீட்டுக்கு கிளம்பியது. அந்த வகையில் அதீத தன்னம்பிக்கையுடன் கொஞ்சம் திமிராகவே பேசிய ஆஸ்திரேலிய அணியின் கொட்டத்தை அடக்கிய இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் ஒன்றாக சேர்ந்து நாக் அவுட் செய்துள்ளது.
இதையும் படிங்க: வெ.இ மண்ணில் அவர் முக்கியம்.. செமி ஃபைனலில் அதைப் பற்றி நினைக்காதீங்க.. இந்திய அணிக்கு ரோஹித் அறிவுரை
அதனால் இங்கிலாந்து செமி ஃபைனலில் விளையாட உள்ளது. ஆனால் இங்கிலாந்தை நாக் அவுட் செய்வோம் என்று சொன்ன ஆஸ்திரேலியா வெளியேறியுள்ளது. இந்த தோல்வியால் ஏகப்பட்ட உலகக் கோப்பைகளை வென்றுள்ள ஆஸ்திரேலியா ஒன்றும் குறைந்து போகப்போவதில்லை. இருப்பினும் அனைத்து நேரங்களிலும் எதிரணியை துச்சமாகவே மதிக்கும் ஆஸ்திரேலியாவுக்கு இம்முறை இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் நல்ல பாடத்தை புகட்டியுள்ளது.