வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இறுதிக்கட்டத்தை தொட்டுள்ள 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக ஜூன் 24ஆம் தேதி நடைபெற்ற தங்களது கடைசி சூப்பர் 8 போட்டியில் ஆஸ்திரேலியாவை 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 206 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இந்தியாவுக்கு அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 92 ரன்கள் எடுத்தார். அதைத்தொடர்ந்து சேசிங் செய்த ஆஸ்திரேலியா முடிந்தளவுக்கு போராடியும் 20 ஓவரில் 181/7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 76 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.
ரோஹித் அறிவுரை:
இதன் காரணமாக ஜூன் 27ஆம் தேதி நடைபெறும் 2வது செமி ஃபைனலில் இங்கிலாந்தை எதிர்கொள்வதற்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் பும்ரா போன்ற மற்ற பவுலர்களை விட குல்தீப் யாதவ் மிகவும் முக்கியவர் என்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். அத்துடன் செமி ஃபைனலில் என்ன நடக்கும் என்பதையும் வெற்றியை பற்றி கவலைப்படாமலும் விளையாடுமாறு இந்திய அணியினருக்கு அவர் அறிவுரையும் வழங்கியுள்ளார்.
இது பற்றி ஆஸ்திரேலியா போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த வெற்றியால் திருப்தி. எதிரணி (ஆஸ்திரேலியா) யார் என்பதையும் அவர்கள் என்ன அச்சுறுத்தலை கொண்டு வருவார்கள் என்பதும் எங்களுக்கு தெரியும். அணியாக நாங்கள் நன்றாக செயல்பட்டோம். எங்களுக்கு தேவையானவற்றை தொடர்ந்து இப்படியே நாங்கள் செய்ய வேண்டும். இந்த வெற்றி அணியாக எங்களுக்கு நல்ல தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது”
“200 நல்ல ஸ்கோர். ஆனால் இங்கே நீங்கள் விளையாடும் போது காற்று முக்கிய பங்காற்றுவதால் எது வேண்டுமானாலும் நடக்கலாம். இருப்பினும் நாங்கள் சூழ்நிலைகளை சரியாக பயன்படுத்திக் கொண்டதாக நினைக்கிறேன். அது சரியான நேரத்தில் விக்கெட்டுகளை எடுத்து தனிநபர் வீரர்கள் தங்களுடைய வேலையை செய்வதை பொறுத்ததாகும். குல்தீப் யாதவ் பலம் எங்களுக்கு தெரியும்”
இதையும் படிங்க: 2023 தோல்விக்கு ஆஸியை கொஞ்சமாக பழிதீர்த்த ஹிட்மேன்.. படைத்த ஒன்றல்ல இரண்டல்ல 9 சாதனைகளின் லிஸ்ட்
“தேவையான நேரத்தில் அவரை பயன்படுத்துவது முக்கியம். அமெரிக்காவில் வேகத்துக்கு சாதகமான மைதானங்கள் இருந்தது. ஆனால் அவர் இங்கே மிகப்பெரிய வேலையை செய்வார். செமி ஃபைனலில் நாங்கள் எதையும் வித்தியாசமாக செய்ய விரும்பவில்லை. ஒவ்வொரு வீரரும் என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்துள்ளோம். என்ன நடக்கப்போகிறது என்பதை நினைக்காமல் எதிரணியை பற்றி சிந்திக்காமல் சுதந்திரமாக விளையாடுங்கள். இப்போது தொடர்ச்சியாக அசத்தி வருவதை தொடர வேண்டும். இங்கிலாந்துக்கு எதிராக நல்ல போட்டி இருக்கும். ஆனால் அணியாக எங்களில் மாற்றம் ஏற்படாது” என்று கூறினார்.



