ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக தங்களுடைய கடைசி சூப்பர் 8 போட்டியில் ஆஸ்திரேலியாவை 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அப்போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக 92 (41) ரன்கள் விளாசி இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.
அதனால் ஜூன் 27ஆம் நடைபெறும் செமி ஃபைனலில் இங்கிலாந்துடன் மோதுவதற்கு இந்தியாவை தகுதி பெற வைத்த அவர் 2023 உலகக் கோப்பை ஃபைனல் தோல்விக்காக ஆஸ்திரேலியாவை கொஞ்சமாக பழி வாங்கினார் என்றும் சொல்லலாம்.
இப்போட்டியில் அவர் படைத்த சாதனைகளின் பட்டியல்:
1. முதலாவதாக இப்போட்டியில் அடித்த 8 சிக்சர்களையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 200 சிக்ர்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை ரோகித் படைத்தார்.
2. அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையையும் ரோகித் சர்மா படைத்துள்ளார். இதுவரை அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டும் 132* சிக்சர்கள் அடித்து இந்த சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் இங்கிலாந்துக்கு எதிராக கிறிஸ் கெயில் 130 சிக்ஸர்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.
3. அத்துடன் முதல் 10 ஓவர்கள் முடிவதற்குள்ளேயே ரோஹித் 92 ரன்கள் அடித்தார். இதன் வாயிலாக ஒரு டி20 உலகக் போட்டியில் முதல் 10 ஓவரில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த வீரர் என்ற உலக சாதனையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் இதே உலகக் கோப்பையில் அமெரிக்காவுக்கு எதிராக முதல் 10 ஓவருக்குள் ஜோஸ் பட்லர் 83 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.
4. டி20 உலகக் கோப்பையில் அதிகபட்ச ஸ்கோர் (92) பதிவு செய்த இந்திய கேப்டன் என்ற சாதனையையும் ரோஹித் சர்மா இப்போட்டியில் படைத்துள்ளார். இதற்கு முன் 2021 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி இந்தியாவின் கேப்டனாக 57 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.
5. அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பாபர் அசாம் சாதனையை உடைத்த ரோஹித் புதிய உலக சாதனை படைத்துள்ளார். தற்சமயத்தில் ரோஹித் சர்மா 4165*, பாபர் அசாம் 4145, விராட் கோலி 4103 ரன்களுடன் டாப் 3 இடங்களில் உள்ளனர்.
6. டி20 உலக கோப்பையில் அதிக பவுண்டரிகள் (107 ஃபோர்ஸ் மற்றும் 48 சிக்ஸ் என மொத்தம் 155 பவுண்டரிகள்) அடித்த வீரர் என்ற உலக சாதனையும் ரோஹித் படைத்துள்ளார். இதற்கு முன் டேவிட் வார்னர் 143 பவுண்டரிகள் அடித்ததே முந்தைய சாதனை.
7. 19 பந்துகளில் 50 ரன்கள் தொட்ட அவர் இந்த உலகக் கோப்பையில் அதிவேகமாக அரை சதமடித்த வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.
இதையும் படிங்க: சுயநலமின்றி இந்தியாவுக்காக ஆஸியை வெளுத்த ரோஹித்.. யுவராஜின் 17 வருட சாதனையை உடைத்து 2 சாதனை
8. மேலும் டி20 உலகக் கோப்பையில் சுரேஷ் ரெய்னாவுக்கு பின் (101) 2வது அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரர் என்ற சாதனையும் ரோகித் படைத்துள்ளார்.
9. அத்துடன் டி20 உலகக் கோப்பையில் ஆட்டநாயகன் விருது வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற வரலாற்றையும் ரோகித் சர்மா நிகழ்த்தியுள்ளார்.



