
இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 7ஆம் தேதி துவங்கிய 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப் போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியாவை தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா எதிர்கொண்டது. அதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 469 ரன்கள் குவித்து ஆரம்பத்திலேயே வலுவான துவக்கத்தை பெற்றது.
அதிகபட்ச டிராவிஸ் ஹெட் 163, ஸ்டீவ் ஸ்மித் 121 என முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுத்த நிலையில் சுமாராக பந்து வீசிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்களை எடுத்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் கேப்டன் ரோஹித் சர்மா 15, கில் 13, புஜாரா 14, விராட் கோலி 14 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்ததால் 71/4 என ஆரம்பத்திலேயே சரிந்தது.
ஆஸ்திரேலியா சாம்பியன்:
இருப்பினும் ரவீந்திர ஜடேஜா 48, ரகானே 89, சர்துல் தாகூர் 51 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் முக்கிய ரன்களை எடுத்து ஃபாலோ ஆன் அவமானத்திலிருந்து காப்பாற்றிய நிலையில் ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் கமின்ஸ் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து 173 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 270/8 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 66* ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
அதை தொடர்ந்து 444 என்ற வரலாற்றில் எட்டப்படாத மெகா இலக்கை துரத்திய இந்தியாவுக்கு 47 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த கில் 18 ரன்களில் சர்ச்சைக்குரிய தீர்ப்பால் பெவிலியன் திரும்பிய நிலையில் ரோஹித் சர்மா 43, புஜாரா 18 முக்கிய பேட்ஸ்மேன்கள் நன்கு செட்டிலாகியும் சுமாரான ஷாட்டை அடித்து பெரிய ரன்களை எடுக்காமல் பெவிலியன் திரும்பினர். இருப்பினும் விராட் கோலி மற்றும் ரகானே ஆகியோர் நங்கூரமாக நின்று போராடியதால் இன்று நடைபெற்ற கடைசி நாளில் இந்தியாவின் வெற்றிக்கு 280 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது 4வது விக்கெட்டுக்கு 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததால் காப்பாற்றுவார் என்று கருதப்பட்ட விராட் கோலி மீண்டும் 49 ரன்களில் கவர் டிரைவ் அடிக்கும் முயற்சித்து அவுட்டாகி இந்திய ரசிகர்களின் நெஞ்சங்களை உடைக்க அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். போதாக்குறைக்கு மறுபுறம் போராடிய ரகானேவும் 46 ரன்களிலும் கேஎஸ் பரத் 13 ரன்களிலும் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.
இறுதியில் தாக்கூரும் டக் அவுட்டானதால் இந்தியாவின் கோப்பை கனவு சுக்குநூறாக மீண்டும் உடைந்தது. மறுபுறம் இந்தியாவை 234 ரன்களுக்கு சுருட்டி 209 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்று டெஸ்ட் கிரிக்கெட்டின் 2வது சாம்பியனாக சாதனை படைத்த ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக நேதன் லயன் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
முன்னதாக கடந்த 2021 ஃபைனலில் 5 நாட்களும் மேகமூட்டத்துடன் கூடிய மழை பெய்யும் ஈரமான வானிலை நிலவியதால் 2 ஸ்பின்னர்களுடன் விளையாடியது தோல்விக்கு காரணமாக அமைந்தது. ஆனால் அதற்காக அதையே இம்முறயும் அதே திட்டமாக கையிலெடுத்த ரோகித் சர்மா – ராகுல் டிராவிட் ஆகியோர் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து பெரிய ஸ்கோர் குவித்து அழுத்தத்தை எதிரணி பக்கம் திருப்பும் அதிர்ஷ்டத்தை விட்டது தோல்வியை கொடுத்தது.
அதை விட தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் அஸ்வின் ஏற்கனவே அதிக இடது கை பேட்ஸ்மேன் அவுட் செய்தவராக உலக சாதனை படைத்துள்ளார். அந்த நிலையில் ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையில் 5 இடது கை பேட்ஸ்மேன்கள் இருந்தும் அவரை கழற்றி விட்டது டிராவிஸ் ஹெட் 163 ரன்கள் அடிக்கும் அளவுக்கு சென்று தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அது போக ரோகித் சர்மா, விராட் கோலி, புஜாரா போன்ற ஜாம்பவான்களாக கருதப்படும் நட்சத்திர வீரர்கள் ஒருவர் கூட அரை சதடிக்காமல் போராடாமல் மோசமாக பேட்டிங் செய்ததும் தோல்வியை கொடுத்தது.
இதையும் படிங்க:WTC Final : இந்தியாவை பெட்டிப் பாம்பாக அடக்கி டெஸ்ட் சாம்பியனாக சாதனை படைத்த ஆஸி – தோல்விக்கான காரணம் இதோ
அது மட்டுமன்றி ஐபிஎல் தொடரில் விளையாடிய சோர்வால் இந்த ஃபைனலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சொதப்பியதும் வெற்றியை கொடுக்கவில்லை. அதனால் அடுத்தடுத்த ஃபைனல்களுக்கு தகுதி பெற்றும் 2வது முறையாக கோப்பையை முத்தமிடும் வாய்ப்பை கோட்டை விட்ட இந்தியா 2013க்குப்பின் ஐசிசி தொடரில் மீண்டும் தோற்றுள்ளது ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.