ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரில் நவம்பர் 16ஆம் தேதி கொல்கத்தாவில் இருக்கும் புகழ்பெற்ற ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 2 மணிக்கு நடைபெற்ற 2வது செமி ஃபைனலில் புள்ளி பட்டியலில் 2, 3வது இடங்களை பிடித்த தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ததாக அறிவித்தது.
அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு ஆரம்பத்திலேயே கேப்டன் பவுமா டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அப்போது அதிரடியாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட டீ காக் 3, வேன் டெர் டுஷன் 6, ஐடன் மார்க்ரம் 10 ரன்களில் அவுட்டாகி மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியதால் 24/4 என ஆரம்பத்திலேயே தென்னாபிரிக்கா திண்டாடியது.
த்ரில் வெற்றி:
அந்த சூழ்நிலையில் டேவிட் மில்லருடன் ஜோடி சேர்ந்து 5வது விக்கெட்டுக்கு 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த 47 ரன்களில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் தனி ஒருவனாக ஆஸ்திரேலியாவுக்கு சவால் கொடுத்த டேவிட் மில்லர் அபாரமாக விளையாடி சதமடித்து 8 பவுண்டரி 5 சிக்சருடன் 101 ரன்கள் குவித்தார். ஆனாலும் 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென்னாப்பிரிக்கா 212 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக பட் கமின்ஸ், மிட்சேல் ஸ்டார்க் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
அதை தொடர்ந்து 213 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு அதிரடியாக 60 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கம் கொடுத்த டேவிட் வார்னர் 29 (18) ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்ததாக வந்த மிட்சேல் மார்ஷ் டக் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அடுத்த சில அவர்களின் மறுபுறம் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 62 (48) ரன்களில் கேசவ் மகாராஜ் சுழலில் சிக்கினார்.
ஆனால் அடுத்ததாக வந்த மார்னஸ் லபுஸ்ஷேனை 18 ரன்களில் அவுட்டாக்கிய சம்சி அடுத்து வந்த கிளன் மேக்ஸ்வெலையும் 1 ரன்களில் க்ளீன் போல்ட்டாக்கி திருப்பு முனையை ஏற்படுத்தினார். போதாகுறைக்கு ஸ்டீவ் ஸ்மித்தும் 30 ரன்களில் அவுட்டானதால் 174/6 என சரிந்த ஆஸ்திரேலியா அழுத்தத்திற்குள்ளானது. அப்போது ஜோஸ் இங்லீஷ் நிதானமாக விளையாடிய நிலையில் அடுத்து வந்த மிட்சேல் ஸ்டார்க் தம்முடைய பங்கிற்கு கை கொடுத்தார்.
அதனால் ஆஸ்திரேலியா வெற்றி நெருங்கிய நிலையில் இங்லிஷ் 28 ரன்களில் அவுட்டானது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் அப்போது நிதானத்தை காட்டிய ஸ்டார்க் 16* ரன்களும் கேப்டன் கமின்ஸ் 14* ரன்களும் எடுத்ததால் 47.2 ஓவரிலேயே 215/7 ரன்களை எடுத்த ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் ஃபைனலில் இந்தியாவுடன் மோதுவதற்கு தகுதி பெற்றது. தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக கோட்சி மற்றும் சம்ஸி தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை.
இப்போட்டியில் 24/4 என ஆரம்பத்திலேயே தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று சொதப்பியதே தோல்விக்கு காரணமானது. மறுபுறம் பவர்ப்ளேவை பயன்படுத்தி 60/0 என்ற அதிரடியான துவக்கத்தை ஆஸ்திரேலியா பெற்றது வெற்றியில் வித்தியாசத்தை ஏற்படுத்தியது. அந்த வகையில் இத்தொடர் முழுவதும் அதிரடியாக விளையாடிய போதிலும் 1999 உலகக்கோப்பை செமி ஃபைனல் தோல்விக்கு ஆஸ்திரேலியாவை பழி தீர்க்கும் வாய்ப்பை தவற விட்ட தென்னாபிரிக்கா சோக்கர் என்ற பட்டத்துடன் மீண்டும் ஏமாற்றமாக நாடு திரும்பியது.
இதையும் படிங்க: 8வது முறை.. இந்தியாவை மிரட்ட வரும் ஆஸி.. அனல் பறந்த செமி ஃபைனலில் முக்கிய தவறால் மீண்டும் சோக்கரான தெ.ஆ
மறுபுறம் அழுத்தத்தில் அசத்திய ஆஸ்திரேலியா 6வது கோப்பையை வெல்வதற்காக வருகிறோம் என்று இந்தியாவுக்கு இப்போதே எச்சரிக்கை கொடுக்கும் செயல்பாட்டை வெளிப்படுத்தி அசத்தியுள்ளது. குறிப்பாக வரலாற்றில் தங்களின் 8வது முறையாக உலகக்கோப்பை ஃபைனலில் அந்த அணி இந்தியாவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்ள உள்ளது.