
நடைபெற்று வரும் 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த மாபெரும் தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடிய வேளையில் குரூப் சுற்று போட்டிகளின் முடிவில் அடுத்த சுற்று தகுதி பெற்ற 8 அணிகள் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.
இந்த சூப்பர் 8 சுற்றில் இடம் பிடித்துள்ள எட்டு அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் குரூப் ஒன்றில் இடம் பிடித்துள்ள ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நேற்று கிங்ஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 அவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களை குவித்தது.
பின்னர் 149 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி ஆஸ்திரேலியா அணியானது ஆப்கானிஸ்தான அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 19.2 ஓவர்களில் 127 ரன்களுக்கு சுருண்டது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.
இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு சற்று கடினமாகவே மாறி உள்ளது. ஏனெனில் அடுத்ததாக ஆப்கானிஸ்தான் அணி வங்கதேச அணியை வீழ்த்தும் பட்சத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளே அரையிறுதி சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க : ஆப்கானிஸ்தானிடம் தோற்க இதான் காரணம்.. அடுத்த போட்டியில் இந்தியாவை விட நல்ல டீம் சிக்காது.. மார்ஷ் பேட்டி
மேலும் இந்தியஅணிக்கெதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோற்றால் அரையிறுதி சுற்றுக்கு கொஞ்சமும் வாய்ப்பு இல்லாமல் போகும் என்பது குறிப்பிடத்தக்கது.