கொஞ்சம் கேப் விட்டு அடிங்கடா! பாகிஸ்தானை மீண்டும் மண்ணை கவ்வ வைத்த ஆஸ்திரேலியா – நடந்தது என்ன?

Pak Vs Aus 2022
Advertisement

பாகிஸ்தானுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று லாகூரில் துவங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் ஆரோன் பின்ச் ஆகியோர் ஆரம்பத்திலேயே பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடினார்கள்.

aus vs pak

முதல் விக்கெட்டுக்கு 110 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆரம்பத்திலேயே பாகிஸ்தானுக்கு தொல்லை கொடுத்த இந்த ஜோடியில் கேப்டன் ஆரோன் பின்ச் 23 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த பென் மெக்டெர்மோட் தன் பங்கிற்கு 70 பந்துகளில் அரைசதம் அடித்து 55 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

மிரட்டிய டிராவிஸ் ஹெட்:
அதை தொடர்ந்து களமிறங்கிய மார்னஸ் லபுஸ்ஷேன் 25 ரன்களும் மார்கஸ் ஸ்டோனிஸ் 26 ரன்களும் எடுத்து முக்கியமான நேரத்தில் ஆட்டமிழந்த போது அலெஸ் கேரி 4 ரன்களில் நடையை கட்டினார். ஆனால் மறுபுறம் ஆரம்பத்தில் களமிறங்கிய தொடக்க வீரர் ட்ராவில் ஹெட் தொடர்ந்து நங்கூரமாக களத்தில் நின்று பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து அவுட்டாகாமல் அடம் பிடித்தார்.

Travis Head 101

ஆரம்பம் முதலே அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய அவர் வெறும் 72 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட சதமடித்து 101 ரன்கள் குவித்து இந்த ஒருநாள் போட்டியில் ஒரு டி20 இன்னிங்ஸ் விளையாடி ஆட்டமிழந்தார். இதனால் தொடர்ந்து சீராக ரன்களை எடுத்து வந்த ஆஸ்திரேலியாவுக்கு கடைசி நேரத்தில் கேமரூன் கிரீன் வெறும் 30 பந்துகளில் அதிரடியாக 40* ரன்கள் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்தார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா 313/7 என்ற மிகப்பெரிய ரன்களை குவித்தது. பாகிஸ்தான் சார்பில் பந்துவீச்சில் கலக்கிய ஹரிஷ் ராவ்ப் மற்றும் முகமூத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

- Advertisement -

பாகிஸ்தான் மீண்டும் பரிதாப தோல்வி:
அதை தொடர்ந்து 314 என்ற மிகப்பெரிய இலக்கை துரத்திய பாகிஸ்தானுக்கு தொடக்க வீரர் பக்கர் ஜமான் 18 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். இதனால் சரிந்த அந்த அணியை மற்றொரு தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் உடன் இணைந்து மீட்டெடுக்க போராடிய கேப்டன் பாபர் அசாம் 2-வது விக்கெட்டுக்கு முக்கியமான 96 பார்ட்னர்ஷிப் ரன்களை சேர்த்தார். இருப்பினும் 72 பந்துகளில் அரைசதம் அடித்து 57 ரன்கள் எடுத்த அவர் முக்கியமான நேரத்தில் அவுட்டானார். அதைப் பயன்படுத்தி ஆஸ்திரேலியா பவுலர்கள் அடுத்து வந்த ஷகீல் 3, முஹம்மது ரிஸ்வான் 10, அஹமத் 2 என 3 முக்கியமான வீரர்களை அடுத்தடுத்து அவுட் செய்து மிடில் ஆர்டரை காலி செய்தனர்.

aus vs pak

இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக நிலைத்து நின்று விளையாடிய தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் 96 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட சதமடித்து பாகிஸ்தானின் வெற்றிக்கு போராடிய நிலையில் 103 ரன்கள் எடுத்திருந்த போது முக்கியமான நேரத்தில் ஆட்டமிழந்தார். அதை மீண்டும் பயன்படுத்திய ஆஸ்திரேலியா பவுலர்கள் அப்போது 204/6 என தடுமாறிய பாகிஸ்தானை அடுத்தடுத்து அவுட் செய்து வெறும் 225 ரன்களுக்கு சுருட்டினர்.

- Advertisement -

கேப் விடாமல் அடிக்கும் ஆஸ்திரேலியா:
ஆஸ்திரேலியா சார்பில் அசத்திய சுழல் பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் வாயிலாக 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா “ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தான் மண்ணில் அதிக ரன்கள் வித்தியாசத்திலான மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து புதிய சாதனை படைத்தது”. இந்த அபார வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1 – 0* என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையும் பெற்றுள்ளது.

இந்த அதிரடியான வெற்றிக்கு சதமடித்து 101 ரன்களும் 2 விக்கெட்டுகளையும் சாய்த்து ஆல்-ரவுண்டராக அசத்திய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். மறுபுறம் சொந்த மண்ணில் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியிலேயே மண்ணை கவ்விய பாகிஸ்தான் மீண்டும் பரிதாப தோல்வி அடைந்தது.

- Advertisement -

ஏனெனில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் டிரா செய்த அந்த அணி கடைசி போட்டியின் கடைசி 2 நாட்களில் வெற்றியை கோட்டை விட்டு 1 – 0 என்ற கணக்கில் தொடரை இழந்தது. அந்த மாபெரும் அவமானத்திற்கும் தோல்விக்கும் அடுத்ததாக நடைபெறும் ஒருநாள் தொடரில் பழிதீர்க்க நினைத்த பாகிஸ்தான் முதல் போட்டியிலேயே மீண்டும் மண்ணை கவ்வியது அந்த நாட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

இதையும் படிங்க : வார்னர் சாபம்! கழற்றி விட்டிங்கள்ல, நல்லா அனுபவிங்க – மோசமான தோல்வியால் வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

மேலும் டெஸ்ட் தொடரில் அபாரமாக செயல்பட்டு கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா தற்போது ஒருநாள் தொடரிலும் வெற்றியை பெற்று கேப் விடாமல் பாகிஸ்தானை அடிக்க தொடங்கியுள்ளது.

Advertisement