
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் இந்தியா தோற்றது. அடுத்ததாக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் மழையால் ரத்து செய்யப்பட்டது. 2வது போட்டி அக்டோபர் 31ஆம் தேதி புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.45 மணிக்கு துவங்கியது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு திணறலாக விளையாடிய சுப்மன் கில் 5 (10) ரன்களில் ஹேசல்வுட் வேகத்தில் அவுட்டானார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 2 ரன்னில் நடையைக் கட்டினார். அடுத்தாக வந்த கேப்டன் சூரியகுமாரை 1 ரன்னில் காலி செய்த ஹேசல்வுட் அடுத்ததாக வந்த திலக் வர்மாவை டக் அவுட்டாக்கி இந்தியாவை சரித்தார்.
அதனால் 32/4 என திணறிய இந்தியாவுக்கு மறுபுறம் மற்றொரு துவக்க வீரர் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் அக்சர் பட்டேல் 7 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தார். அடுத்ததாக கௌதம் கம்பீரின் ஆஸ்தான பேட்ஸ்மேன் ஹர்ஷித் ராணா அதிரடியாக விளையாட முயற்சித்த போதிலும் 35 (33) ரன்கள் மட்டுமே எடுத்தார்.
அடுத்து வந்த சிவம் துபேவும் 4 ரன்னில் அவுட்டானார். மறுபுறம் தொடர்ந்து அரை சதத்தை அடித்து போராடிய அபிஷேக் சர்மா 8 பௌண்டரி 2 சிக்சருடன் 68 (37) ரன்களில் அவுட்டானார். இறுதியில் 18.4 ஓவரில் இந்தியாவை 125 ரன்களுக்கு சுருட்டிய ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக சேவியர் பார்லெட் 2, நாதன் எலிஸ் 2, ஜோஸ் ஹேசல்வுட் 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.
குறிப்பாக அடித்து நொறுக்கக்கூடிய நம்பர் ஒன் அணி என்று கருதப்படும் இந்தியாவை 150 ரன்களை கூட தொடாமல் ஆஸ்திரேலியா சுருட்டி வீசியது. அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா 13.2 ஓவரிலேயே 126/6 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. அதிகபட்சமாக கேப்டன் மார்ஷ் 46 (26), டிராவிஸ் ஹெட் 28 (15), ஜோஸ் இங்லிஸ் 20, மிட்சேல் ஓவன் 14 ரன்கள் எடுத்து 1 – 0* (5) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற உதவினர்கள்.
இதையும் படிங்க: ஐ.பி.எல் அணிக்கு பயிற்சியாளராக வரப்போகும் யுவ்ராஜ் சிங்.. எந்த அணிக்கு தெரியுமா? – விவரம் இதோ
மறுபுறம் ஜஸ்ப்ரித் பும்ரா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் இந்தியா 41 பந்துகள் மீதமிருக்க தோல்வியை சந்தித்தது. இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் பந்துகள் அடிப்படையில் இந்தியா 2வது மிகப்பெரிய தோல்வியை சந்தித்து மோசமான சாதனை படைத்தது. இதற்கு முன் 2021 கொழும்பு போட்டியில் இலங்கையிடம் 33 பந்துகள் மீதம் வைத்து தோற்றதே முந்தைய சாதனை.