ஆசிய கோப்பை 2022 : இந்தியாவின் போட்டிகள் நடைபெறும் துபாய் மைதானம் எப்படி? பிட்ச் ரிப்போர்ட் இதோ

Dubai
- Advertisement -

ஆசிய கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் சுமார் ஒரு வருடம் கழித்து ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று மோதுகின்றன. 15வது முறையாக ஐக்கிய அரபு நாடுகளில் துவங்கியுள்ள 2022 ஆசிய கோப்பையில் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள இவ்விரு அணிகளும் துபாயில் நடைபெறும் தங்களுக்கு முதல் லீக் போட்டியில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. கடைசியாக இதே மைதானத்தில் கடந்த 2021 டி20 உலக கோப்பையில் இவ்விரு அணிகளும் மோதிய போது இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் மண்ணைக் கவ்வ வைத்தது. அதனால் உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தானிடம் தோல்வியை சந்தித்த இந்தியா இம்முறை 5 ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன்ஷிப் அனுபவம் நிறைந்த ரோகித் சர்மா தலைமையில் பதிலடி கொடுக்க களமிறங்குகிறது.

வரலாற்றில் 2 முறை மட்டும் ஆசிய கோப்பையை வென்றுள்ள பாகிஸ்தானை 7 கோப்பைகளை வென்று கடைசியாக 2018இல் இதே துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பையை வென்று நடப்பு சாம்பியனாக களமிறங்கும் இந்தியா நிச்சயம் தோற்கடிக்கும் என இந்திய ரசிகர்கள் நம்புகின்றனர். அதற்கேற்றார் போல் கடந்த உலகக்கோப்பைக்கு பின் பங்கேற்ற அத்தனை டி20 தொடர்களிலும் தோல்வியடையாமல் வெற்றி நடை போட்டு வரும் இந்தியாவுக்கு கடந்த முறை தோல்வியை பரிசளித்த ஷாஹீன் அப்ரிடி இம்முறை பாகிஸ்தான் அணியில் காயத்தால் விலகியுள்ளார்.

- Advertisement -

துபாய் மைதானம்:
கிரிக்கெட்டை வெறும் போட்டியாக பார்க்காமல் கௌரவமாக கருதுவதால் வெல்வதற்காக இரு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் முழுத் திறமையை வெளிப்படுத்தி மோதிக் கொள்வார்கள் என்பதால் இப்போட்டியில் அனல் பறக்கும் என உறுதியாக நம்பலாம். இதுபோக ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டி உட்பட ஆசிய கோப்பையில் இந்தியாவின் முக்கியமான போட்டிகள் இந்த துபாய் மைதானத்தில் நடைபெறுவதால் அதைப்பற்றிய விவரங்களை பார்ப்போம்.

1. ஐக்கிய அரபு நாடுகளில் மிகவும் பழமை வாய்ந்த ஷார்ஜா மைதானத்துக்கு நிகராக நவீன வசதிகளுடன் 2010இல் தோற்றுவிக்கப்பட்ட இந்த மைதானம் 25000 ரசிகர்கள் நேரடியாக அமர்ந்து பார்க்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

2. வரலாற்றில் ஐக்கிய அரபு நாடுகளில் நிறைய ஆசிய கோப்பைகள் நடைபெற்றுள்ள நிலையில் முதல் முறையாக இப்போதுதான் 20 ஓவர் ஆசிய கோப்பை நடைபெறுகிறது. இம்முறை மொத்தம் நடைபெறும் 13 போட்டிகளில் பைனல் உட்பட 10 போட்டிகள் இந்த துபாய் மைதானத்தில் தான் நடைபெறுகிறது.

3. அந்த நிலையில் வரலாற்றில் இந்த மைதானத்தில் இதுவரை 75 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 36 போட்டிகளிலும் சேஸிங் செய்த அணிகள் 39 போட்டிகளிலும் வென்றுள்ளன.

- Advertisement -

4. இம்மைதானத்தில் வரலாற்றில் 4 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 2 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது.

5. மறுபுறம் தங்களது இரண்டாவது வீடாக 28 போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் 16 வெற்றிகளையும் 11 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. அந்த வகையில் இம்மைதானம் பாகிஸ்தானுக்கு ராசியானது என சொல்ல முடியாது.

- Advertisement -

அதிக ரன்கள், விக்கெட்கள்:
இந்த மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேனாக கேஎல் ராகுல் (125 ரன்கள்) முதலிடத்தில் உள்ளார். அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பந்துவீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 6 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளனர். இந்த மைதானத்தில் இதுவரை எந்த இந்திய வீரரும் சதம் அடித்ததில்லை. அதேபோல் ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளும் எடுத்ததில்லை.

பிட்ச் ரிப்போர்ட்:
பாலைவனமான துபாய் நகரில் மழைக்கான வாய்ப்பே கிடையாது என்ற நிலைமையில் டி20 கிரிக்கெட்க்கு ஏற்ற மிகச் சிறந்த மைதானமாக துபாய் திகழ்கிறது. வரலாற்றில் இங்கு நடைபெறும் பெரும்பாலான போட்டிகளில் 150க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்தால் கூட அதை சேசிங் செய்யும் அணிகள் எளிதாக எட்டிப்பிடித்து விடுகின்றன. கடந்த வருடம் ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை இழந்த போராடி இந்தியா நிர்ணயித்த 152 ரன்களை பாகிஸ்தான் எளிதாக எட்டிப்பிடித்து வென்றதை எடுத்துக்காட்டாக கூறலாம்.

அந்த வகையில் இம்மைதானம் பேட்டிங்க்கு சாதகமானது என்று வெளிப்படையாக சொல்லலாம். அதேபோல் ஷாஹீன் அப்ரிடி போன்ற முழு திறமையை வெளிப்படுத்தும் ஃபாஸ்ட் பவுலர்களுக்கு விக்கெட்டுகள் நிச்சயமாக கிடைக்கும். மிடில் ஓவர்களில் தரமான சுழல் பந்துவீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்துபவர்களாக இருப்பார்கள்.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை 2022 : வெல்லப்போவது இந்தியாவா பாகிஸ்தானா, வரலாற்று புள்ளிவிவரம் – முழுலிஸ்ட் இதோ

இம்மைதானத்தின் சராசரி முதல் இன்னிங்ஸ் 143 ரன்களாக இருக்கும் நிலையில் வரலாற்றில் இங்கு சேசிங் செய்த அணிகள் அதிக போட்டிகளில் வென்றுள்ளன. எனவே டாஸ் செல்லும் கேப்டன்கள் யோசிக்காமல் சேசிங் செய்ய தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம். அதை 2021 ஐபிஎல் தொடரில் நாம் பார்த்தோம். ஒருவேளை முதலில் பேட்டிங் செய்தால் 200 குவித்தால் வெற்றி உறுதியாகும்.

Advertisement