இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ வீரரும், தமிழக சுழற்பந்து வீச்சாளருமான ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடிய முதல் லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று விளையாடி இருந்தார். அதன் பின்னர் தற்போது இந்திய அணி விளையாடியுள்ள ஒன்பது போட்டிகளிலும் இடம்பெறாத அஸ்வின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் பங்கேற்பாரா? என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.
ஏனெனில் ஆஸ்திரேலிய அணி சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இந்த உலகக் கோப்பை தொடரில் தடுமாறி வருவதாலும் ஏற்கனவே நடைபெற்ற லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அஸ்வின் சிறப்பாக பந்துவீசி இருந்ததாலும் அவர் இறுதிப் போட்டிக்கான அணியில் இடம் பெறுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் என்னதான் அனுபவ வீரராக இருந்தாலும் அஸ்வினுக்கு இந்த இறுதி போட்டியில் நிச்சயம் வாய்ப்பு கிடைக்காது என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது. ஏனெனில் ஏற்கனவே இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா தெரிவித்துள்ள ஒரு கருத்தில் : தற்போதைக்கு இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாகவும், இந்த செட்டிலான அணியில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய விரும்பவில்லை என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதுமட்டும் இன்றி தற்போது தொடர்ச்சியாக இந்திய அணி 10 வெற்றிகளை பெற்றுள்ள வேளையில் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறது. இவ்வேளையில் விளையாடும் வீரர்களின் பிளேயிங் லெவனில் ஏதாவது ஒரு மாற்றம் ஏற்படுத்தினால் அது அணிக்கு சற்று பாதகமாக கூட அமையலாம்.
எனவே அஸ்வினை இந்திய அணியில் இணைக்க மாட்டார்கள் என்றே தெரிகிறது. அதுமட்டும் இன்றி தற்போதைய இந்திய அணியில் பும்ரா, முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் என மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும், ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் என இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் என 5 முதன்மை பவுலர்களுமே அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இதையும் படிங்க : விராட், ரோஹித் இல்ல.. அவர் தான் ஃபைனலில் இந்தியாவுக்கு டாப் ஸ்கோர் அடிப்பாரு.. ஹர்பஜன் கணிப்பு
இதன் காரணமாக பந்துவீச்சு துறையில் எந்த மாற்றத்தையும் இந்திய அணி மேற்கொள்ளாது என்றே தெரிகிறது. அதோடு ஒருவேளை இந்திய அணி ஆறாவது பவுலராக அஸ்வினை அணியில் இணைத்தால் சூரியகுமார் யாதவ் அணியிலிருந்து வெளியேற வேண்டியிருக்கும். அப்படி ஒரு ரிஸ்கை இந்திய அணி நிச்சயம் கையில் எடுக்காது. எனவே தற்போதைக்கு அஸ்வின் அணியில் இடம்பெற்று இருந்தாலும் நிச்சயமாக பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காது என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.