கபில் தேவாக உருவாக நினைத்து அஷ்வின் ஆரம்பகாலத்தில் என்ன செய்தார் தெரியுமா? – ருசிகர பின்னணி

Ashwin
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. மொகாலியில் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இலங்கையை பந்தாடிய இந்தியா 1 – 0* என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது. அந்த போட்டியில் பேட்டிங்கில் 175* ரன்களை விளாசியதுடன் பந்துவீச்சில் 9 விக்கெட்டுகளை சாய்த்து சாதனை படைத்த ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

அவருடன் ரிஷப் பண்ட், ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட பல இந்திய வீரர்களும் அபாரமாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார்கள். இந்த வெற்றியின் வாயிலாக புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா தலைமையில் வெற்றியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா தனது புதிய பயணத்தை துவங்கியுள்ளது.

கபில் தேவை முந்திய அஷ்வின்:
முன்னதாக மொகாலியில் நடந்த முதல் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 6 விக்கெட்டுகள் சாய்த்த ரவிச்சந்திரன் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்த 2வது இந்திய பந்து வீச்சாளர் என்ற ஜாம்பவான் கபில் தேவ் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தார். 80களில் இந்தியாவிற்காக உலகக்கோப்பையை வாங்கிக் கொடுத்து மகத்தான வேகப்பந்து வீச்சாளராக விளையாடிய ஜாம்பவான் கபில் தேவ் 131 போட்டிகளில் 434 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்திருந்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்தது. தற்போது 85 போட்டிகளில் 436 விக்கெட்டுகளை எடுத்துள்ள அஷ்வின் அவரை முந்தி இந்த புதிய சாதனையை படைத்துள்ளார்.

ashwin 1

இது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களின் பட்டியலில் டாப் 10க்குள் நுழைந்துள்ள அவர் தற்போது 9வது இடத்தில் உள்ளார். தற்போது 35 வயதை கடந்துள்ள அவர் இன்னும் குறைந்தது 3 – 4 வருடங்கள் விளையாடுவார் என்பதால் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பந்து வீச்சாளராக சாதனை படைத்துள்ள அனில் கும்ப்ளேவின் சாதனையை (619 விக்கெட்கள்) தொடுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

கனவிலும் நினைக்கவில்லை:
இந்நிலையில் ஜாம்பவான் கபில்தேவ் சாதனையை முறியடிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை என ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் மனம் திறந்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த தருணம் மிகவும் பெருமையாக உள்ளது. 28 ஆண்டுகளுக்கு முன்பு சர் ரிச்சர்ட் ஹாட்லீயின் சாதனையை கபில் தேவ் உடைத்தபோது அதை நான் எனது தந்தையுடன் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தேன். சொல்லப்போனால் எனது கனவிலும் கூட அவரின் இந்த சாதனையை தொடுவேன் என்று நினைக்கவில்லை.

kapil dev

ஏனெனில் 8 வயதில் எனது கேரியரை தொடங்கியபோது பேட்ஸ்மேனாக உருவாக வேண்டும் என நான் நினைத்தேன். 1994ஆம் ஆண்டு நான் கிரிக்கெட் விளையாட துவங்கிய போது பேட்ஸ்மேனாக வரவேண்டும் என்பதே எனது ஆசையாக இருந்தது. ஏனென்றால் அந்த சமயத்தில் சச்சின் டெண்டுல்கர் ஒரு வளரும் வீரராக இருந்தார். அதேபோல் எதிரணி பந்துகளை தெறிக்கவிடும் பேட்ஸ்மேனாக கபில்தேவ் ஜொலித்தார்” என கூறினார்.

- Advertisement -

இந்தியா மட்டுமல்ல உலக அளவில் ஒரு மிரட்டலான மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக விளங்கிய கபில்தேவ் சாதனையை முறியடிப்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை என ரவிச்சந்திரன் அஸ்வின் பெருமையுடன் கூறினார். மேலும் ஆரம்ப காலத்தில் கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர் போன்றவர்கள் எதிரணிகளை பந்தாடியதைப் பார்த்து ஒரு பேட்ஸ்மேனாக உருவாக வேண்டும் என ஆசைப்பட்டதாக அவர் கூறினார். இப்போதும் கூட தமிழக அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையயாடும் போது டாப் ஆர்டர் பேட்டிங் வரிசையில் அவர் களமிறங்குவதை காண முடிகிறது.

kapil dev 1

பாஸ்ட் பவுலராக நினைத்த அஷ்வின்:
“இன்னும் சொல்ல வேண்டுமானால் எனது தந்தையின் அறிவுரைப்படி அடுத்த கபில் தேவாக வரவேண்டும் என்பதற்காக எனது ஆரம்ப காலத்தில் மித வேகப்பந்து வீச்சாளராக பயிற்சியை தொடங்கினேன். ஆனால் அதன்பின் ஒரு சுழல் பந்து வீச்சாளராக உருவாகி இந்தியாவுக்காக இவ்வளவு வருடங்கள் விளையாடி வருகிறேன்.

- Advertisement -

ஒரு காலத்தில் இந்தியாவுக்காக விளையாடுவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. இந்த சாதனைக்காக மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்” என இது பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் மேலும் கூறினார். வளரத் துவங்கிய ஆரம்ப காலங்களில் கபில் தேவ் போல ஒரு அதிரடியான பேட்ஸ்மேனாகவும் அற்புதமான வேகப்பந்து வீச்சாளராகவும் உருவாகி இந்திய அணிக்கு அடுத்த கபில் தேவாக விளையாட நினைத்ததாக ருசிகரமான பின்னணியை ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது கூறியுள்ளார்.

இதையும் படிங்க : அஸ்வின் – ஹர்பஜன் இருவரில் யார் நல்ல ஸ்பின்னர்? கெளதம் கம்பீரின் பதில் இதோ (இதே வேலையா போச்சி)

ஆனால் அதன்பின் காலத்தின் கட்டாயத்தால் சுழல் பந்து வீச்சாளராக மாறி இந்தியாவுக்காக விளையாடி தற்போது தனது ஹீரோவாக விளங்கும் கபில்தேவ் சாதனையையே முறியடிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை என அவர் பெருமையுடன் கூறினார்.

Advertisement