
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது இன்று நவம்பர் 22-ஆம் தேதி பெர்த் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் பும்ரா முதலில் இந்திய அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தார். மேலும் இந்திய அணிக்காக இந்த முதலாவது போட்டியில் ஹர்ஷித் ராணா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் இந்திய அணிக்காக அறிமுகமாகின்றனர் என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும் ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளராக வாஷிங்டன் சுந்தர் மட்டுமே விளையாடுவார் என்று பும்ரா அறிவித்திருந்தார். அதன்படி நடைபெற்று வரும் இந்த போட்டியில் தற்போது இந்திய அணி ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் தங்களது முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு சுருண்டுள்ளது.
போட்டியின் முதல் நாளான இன்றே இந்திய அணி இப்படி முதல் இன்னிங்க்ஸை இழந்தது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் அனுபவ சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது அனைவரது மத்தியிலும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது.
ஏனெனில் இதுவரை ஐந்து முறை பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்காக ஆஸ்திரேலிய நாட்டிற்கு பயணத்துள்ள அஸ்வின் குறிப்பிட்ட இந்த மைதானத்தில் ஒரு முறை கூட பிளேயிங் லெவனில் இடம் பிடிக்கவில்லை. அவருக்கு பதிலாக அண்மையில் இந்திய அணியில் இணைந்த வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இப்படி அனுபவம் வாய்ந்த அஸ்வினை வெளியில் அமர்த்தி விட்டு இளம் வீரரான வாஷிங்டன் சுந்தரை அணியில் சேர்த்தது தவறு என்று ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் ஆஸ்திரேலிய அணியில் தற்போது நான்கு இடதுகை பேட்ஸ்மேன்கள் இருக்கும் வேளையில் அவர்களுக்கு எதிராக அஸ்வின் நிச்சயம் இடம்பிடித்திருக்க வேண்டும் என்றும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : அவர் தகுதியானவரா? 900 விக்கெட்ஸ் எடுத்த அஸ்வின், ஜடேஜாவை ஏன் எடுக்கல.. கம்பீர், பும்ராவை விளாசிய கவாஸ்கர்
போட்டியின் முதல் நாளான இன்றே 50 ஓவர்களுக்குள் இந்திய அணி சுருண்டதால் முதல் நாள் பாதியிலேயே தற்போது ஆஸ்திரேலிய அணி தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.