இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி துவங்கியது. அந்த தொடரின் முதல் போட்டி பெர்த் நகரில் இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு துவங்கியது. அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை அடுத்து விளையாடும் இந்தியா முதல் நாள் உணவு இடைவெளியில் 67-5 என தடுமாறி வருகிறது.
முன்னதாக அந்தப் போட்டியில் தற்காலிக கேப்டன் பும்ரா மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோர் இந்திய அணியில் அதிரடியான மாற்றங்களை செய்தார்கள். குறிப்பாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரையுமே அவர்கள் கழற்றி விட்டது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது. அவர்களுக்கு பதிலாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை மட்டும் அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.
கவாஸ்கர் விளாசல்:
அதே போல அனுபவமற்ற நிதீஷ் ரெட்டி மற்றும் ஹர்ஷித் ராணாவுக்கு அவர்கள் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை கொடுத்துள்ளனர். இந்நிலையில் இந்தப் போட்டியில் அஸ்வின் மற்றும் ஜடேஜாவை கழற்றி விட்டதற்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “டெஸ்ட் கிரிக்கெட்டில் 900 விக்கெட்டுகளை ஜோடியாக எடுத்த அஸ்வின் மற்றும் ஜடேஜா விளையாடாதது உண்மையாக ஆச்சரியம்”
“அவர்கள் இந்தியா அல்லது துணை கண்டத்தில் மட்டும் விளையாடக்கூடிய பவுலர்கள் கிடையாது. அனைத்து சூழ்நிலைகளிலும் அசத்தக்கூடிய சாதுரியமான அனுபவமிக்க பவுலர்கள். ஒருவேளை விக்கெட்டுகள் எடுக்கவில்லை என்றால் கூட எதிரணியினர் ரன்கள் குவிக்கும் வேகத்தை அவர்களால் கட்டுப்படுத்த முடியும். ஆஸ்திரேலியாவில் பெரிய பவுண்டரிகள் உள்ள மைதானங்கள் இருப்பதால் அவர்கள் இருவரும் விளையாடுவார்கள் என்று நான் நினைத்தேன்”
தடுமாறும் இந்தியா:
“ஆனால் புதிய இந்திய அணி புதிதாக சிந்திக்கிறது. அவர்கள் நம்பிக்கையை தரக்கூடிய நித்திஷ் ரெட்டியை தேர்ந்தெடுத்துள்ளார்கள். அதில் தவறு இல்லை. ஆனால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு தயாராக இருக்கிறாரா? ஏனெனில் உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அதிகமாக விளையாடியதில்லை”
இதையும் படிங்க: இந்தியா 51/4 என திணறல்.. ராகுலுக்கு வழங்கப்பட்ட தவறான அநியாய தீர்ப்பு.. ஹைடன் விமர்சனம்
“தற்போதைய நிலைமையில் இந்திய ரசிகர்களைப் போலவே நித்திஷ் ரெட்டியும் நன்றாக செயல்பட வேண்டும் என்று நம்புகிறேன்” எனக் கூறினார். மொத்தத்தில் அனுபவமற்ற இளம் வீரர்களுடன் இந்த போட்டியில் இந்தியா களமிறங்கியுள்ளது. அந்த முடிவு கடைசியில் இந்தியாவுக்கு தோல்வியை கொடுக்கிறதா அல்லது வெற்றியை கொடுக்கிறதா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.



