வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணியானது இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. அதனை தொடர்ந்து ஜூலை 20-ஆம் தேதி டிரினிடாட் நகரில் இரண்டாவது டெஸ்ட் போட்டியானது துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 438 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களது முதல் இன்னிங்சில் 255 ரன்களையும் குவித்தது. இதன் காரணமாக 183 ரன்கள் முன்னிலையுடன் தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி தங்களது இரண்டாவது இன்னிங்சில் 181 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 364 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்றைய நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்கள் குவித்துள்ளது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் அஸ்வின் எடுத்த இரண்டு விக்கெட்டுகள் மூலம் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு புதிய வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளனர். அந்த சாதனை யாதெனில் :
இந்த டெஸ்ட் தொடரில் ஏற்கனவே அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் முதல் போட்டியில் 17 விக்கெட்டுகளை ஜோடியாக எடுத்திருந்தனர். அதேபோன்று இந்த இரண்டாவது போட்டியில் இதுவரை எடுத்துள்ள ஐந்து விக்கெட்டுகளுடன் சேர்த்து அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரது ஜோடி ஒன்றாக சேர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை ஜோடியாக கைப்பற்றி வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
இதற்கு முன்பாக இந்திய அணியை சேர்ந்த முன்னாள் வீரர்கள் அணில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியாரது ஜோடி மட்டும் தான் சுழற்பந்து வீச்சாளர்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோடி சேர்ந்து 501 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். இந்நிலையில் தற்போது சுழற்பந்து வீச்சாளர்களாக அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் இணைந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை ஜோடியாக சேர்ந்து கைப்பற்றியுள்ளனர்.
இதையும் படிங்க : நீங்க என்ன அவ்ளோ பெரியாளா? சீக்கிரமா தண்டனை கொடுங்க – ஹர்மன்ப்ரீத்தை விளாசிய இந்திய ஜாம்பவான், பிசிசிஐக்கு கோரிக்கை
மேலும் இன்னும் இரண்டு விக்கெட்டுகளை அவர்கள் கைப்பற்றினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோடியாக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய சுழற்பந்து வீச்சாளர்கள் ஜோடி என்ற சாதனையை அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் படைப்பார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோடியாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களான கிளென் மெக்ராத் மற்றும் ஷேன் வார்னே ஆகியோர் உள்ளனர். அவர்கள் இருவரும் 104 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றாக விளையாடி 980 விக்கெட்டுகளை ஜோடியாக கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.