
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நவம்பர் 30ஆம் துவங்குகிறது. அதற்கு முன்னதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்காவிடம் சொந்த மண்ணில் 25 வருடங்கள் கழித்து இந்தியா தோல்வியைச் சந்தித்தது. குறிப்பாக 2வது போட்டியில் 408 ரன்கள் வித்யாசத்தில் தோற்ற இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது.
கடந்த வருடம் நியூசிலாந்திடம் சந்தித்த ஒயிட்வாஷ் தோல்வியின் காயம் முழுமையாக ஆறுவதற்குள் தற்போது தென்னாப்பிரிக்க அணியிடம் இந்தியா தோற்றது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது. இருப்பினும் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் இந்தியா நம்பர் ஒன் அணியாக திகழ்கிறது. அத்துடன் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் மீண்டும் திரும்பியுள்ளது இந்திய அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.
எனவே அவர்களுடைய அனுபவத்தை வைத்து இந்திய அணி ஒருநாள் தொடரில் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் விராட், ரோஹித்தை போல குவிண்டன் டீ காக் வந்துள்ளது தங்களுக்கு பலம் என்று தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங் பயிற்சியாளர் அஸ்வெல் பிரின்ஸ் தெரிவித்துள்ளார். தரமான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அறியப்படும் டீ காக் 2023 உலகக் கோப்பையுடன் திடீரென ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இருப்பினும் சமீபத்தில் ஓய்வு முடிவை திரும்பப் பெற்ற அவர் கடந்த மாதம் பாகிஸ்தானில் நடைபெற்ற தொடரில் 3 போட்டிகளில் 239 ரன்கள் அசத்தார். அதனால் தொடர்நாயகன் விருதை வென்ற அவர் இத்தொடரில் இந்தியாவை தோற்கடிக்க தங்களுக்கு உதவுவார் என்று பிரின்ஸ் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“குவிண்டன் பெரியத் திறமையுடையவர், ரோஹித், விராட் வந்துள்ளது இந்தியாவை பலப்படுத்துவது போல குவிண்டன் வந்தது எங்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். அவர் தன்னுடைய அனுபவம் மற்றும் தரத்தை பாகிஸ்தானில் காண்பித்தது எங்களுடைய அணிக்கு ஊக்கத்தை சேர்த்தது. அவரைப் போலவே எங்களிடம் சில இளம் இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளார்கள்”
இதையும் படிங்க: இதுல மட்டும் உங்க கவனத்தை செலுத்துங்க.. அடுத்த உ.கோ தொடரில் விளையாட ரோஹித் சர்மாவுக்கு – பி.சி.சி.ஐ அறிவுரை
“அவர்கள் அவரிடம் உட்கார்ந்து பேசி ஆலோசனைகளைப் பெற்று, களத்தில் அவருடன் இணைந்து விளையாடுவது நிறைய வளர்ச்சியைக் கொடுக்கும். அவர் எங்களுடைய அணியில் மிகப்பெரிய தாக்கத்தைக் கொடுப்பார்” என்று கூறினார். அந்த வகையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தொடரின் முதலில் போட்டி நவம்பர் 30ஆம் தேதி முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.