இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையை வென்ற கையோடு டி20 வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பிறகு இந்த ஆண்டு மே மாதம் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இப்படி டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதாக அறிவித்திருந்தார்.
அடுத்த உலகக்கோப்பையில் விளையாட ரோஹித் என்ன செய்யவேண்டும்? :
அதோடு எதிர்வரும் 2027-ஆம் ஆண்டும் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரை விளையாட விரும்புவதாகவும் ரோஹித் சர்மா விருப்பம் தெரிவித்து இருந்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடைசியாக நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியிருந்த அவர் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் நாயகன் விருதையும் வென்று அசத்தியிருந்தார்.
ஆனாலும் அடுத்த 2027 உலக கோப்பை தொடருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருப்பதாலும் அதற்குள் அவர் 40 வயதை எட்டி விடுவார் என்பதனாலும் அடுத்த உலக கோப்பை தொடரில் அவரால் விளையாட முடியுமா? என்று கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரத்திற்கு பதிலளிக்கும் வகையில் தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கு முன்னதாக ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ள பிசிசிஐ அதில் குறிப்பிட்டதாவது : ரோகித் சர்மா தற்போதைக்கு உடற்தகுதி மற்றும் அவருடைய செயல்பாடுகளில் மட்டுமே கவனம் செலுத்த கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
அவர் ஒருநாள் போட்டியில் விளையாடுவதை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் தெரிவிக்கின்றோம். ரோகித் சர்மா நல்ல உடற்தகுதியுடனும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தும் பட்சத்தில் நிச்சயம் அவர் அடுத்த உலக கோப்பை தொடரில் பங்கேற்பார் என்று குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க : அவங்க 2 பேரும் எங்க கூட இருக்குறதால எங்களுக்கு ரொம்ப நம்பிக்கையா இருக்கு – கே.எல் ராகுல் பேட்டி
அதோடு ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக செயல்பட்ட அவர் தென்னாப்பிரிக்க தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு இளம் வீரர்களுக்கு உத்வேகத்தை அளிக்க வேண்டும் என்றும் பி.சி.சி.ஐ கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



