
லக்னோ அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நான்காவது லீக் போட்டியில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது போட்டியின் கடைசி ஓவரில் ஒரு விக்கெட்டை மீதம் வைத்து 210 ரன்கள் என்கிற பிரம்மாண்ட இலக்கினை சேசிங் செய்து அசத்தலான வெற்றியினை பெற்றது. அவர்கள் பெற்ற இந்த வெற்றி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பாராட்டினை பெற்றிருந்தது.
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 209 ரன்களை குவிக்க அடுத்ததாக 210 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணியானது 19.3 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் குவித்து 1 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது ஒரு கட்டத்தில் டெல்லி அணி 65 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது ஏழாவது வீரராக களமிறங்கிய அஷுதோஷ் சர்மா ஸ்டப்ஸ் மற்றும் விப்ராஜ் நிகம் ஆகியோருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து வெகு சிறப்பாக இன்னிங்சை கட்டமைத்தார். பின்னர் அவர்கள் இருவரும் ஆட்டமிழந்த பின்னர் கடைநிலை பௌலர்களை வைத்துக்கொண்டு அவர் இறுதி வரை போராடி 31 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 66 ரன்கள் குவித்து அந்த அணியை அசத்தலான வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இந்நிலையில் கடைசி நேரத்தில் தன்னால் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்து கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை தன்னிடம் இருந்ததாக அவர் போட்டி முடிந்து வெளிப்படையாக சில கருத்துக்களை பகிர்ந்திருந்தார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : கடைசி ஓவரின் போது நான் பதட்டமாக இருந்தேன். ஆனாலும் என்னால் அணியை வெற்றிக்கு அழைத்து செல்ல முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.
மோகித் சர்மா ஒரு ரன் எடுத்து எனக்கு ஸ்ட்ரைக் கொடுத்தால் நிச்சயம் போட்டியை சிக்சருடன் முடிக்க முடியும் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். அந்த வகையிலே சிங்கிலும் கிடைத்தது அதற்கு அடுத்த பந்தில் நான் சிக்ஸருடன் போட்டியை முடித்தேன். இந்த போட்டியின் கடைசி ஓவரில் என்னால் இந்த போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.
இதையும் படிங்க : பர்ஸ்ட் கஷ்டமாதான் இருந்தது.. அப்புறம்.. சாம்பியன்ஸ் டிராபி நீக்கம் குறித்து மனம்திறந்த – முகமது சிராஜ்
என்னுடைய விளையாட்டை நான் ரசித்து விளையாடுகிறேன். என்னுடைய கடின உழைப்பிற்கு பலனாக இந்த வெற்றி கிடைத்துள்ளது. அதோடு இந்த இன்னிங்ஸை நான் என்னுடைய குருவான ஷிகர் தவானுக்கு அர்ப்பணிக்கிறேன் என அஷுதோஷ் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.