
ஐசிசி 2025 மகளிர் உலகக்கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி தங்களது சொந்த மண்ணில் முதல் முறையாக வென்று சாதனை படைத்தது. அத்தொடரில் ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையில் முதல் பகுதியில் தடுமாறிய இந்தியா லீக் சுற்றுடன் வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் நியூசிலாந்துக்கு எதிரான வாழ்வா – சாவா போட்டியில் அபாரமாக விளையாடிய இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றது.
அங்கே அசுரன் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்திய அணி 339 ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. அதன் வாயிலாக ஒரு ஐசிசி உலகக்கோப்பை நாக் அவுட் போட்டியில் 300+ ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்த முதல் அணி என்ற உலக சாதனையையும் இந்திய மகளிரணி படைத்தது. அதே வேகத்தில் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்த இந்தியா கோப்பையை வென்று புதிய சரித்திரம் படைத்தது.
இதைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்திய மகளிரணி அங்கு 3 டி20, 3 ஒருநாள், 1 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் மகளிர் கிரிக்கெட்டில் அடுத்த 5 – 10 வருடங்களுக்கு இந்தியாவை எளிதாக தோற்கடிப்பது கடினமான அணியாக இருக்கும் என்று ஆஸ்திரேலியா வீராங்கனை ஆஸ்லே கார்ட்னர் தெரிவித்துள்ளார்.
அந்தளவுக்கு இந்திய மகளிரணிக்கு திறமையான வீராங்கனைகள் கிடைத்து வருவதாக அவர் பாராட்டியுள்ளார். மறுபுறம் இந்தியாவிடம் செமி ஃபைனலில் தோற்றாலும் 7 முறை உலகக் கோப்பைகள் வென்ற ஆஸ்திரேலியா தற்போதும் உலகின் சிறந்த அணி என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி ஆஸ்லே பேசியது பின்வருமாறு. “அடுத்த 5 – 10 வருடங்களுக்கு இந்தியா தோற்கடிப்பதற்கு மிகவும் கடினமாக இருக்கக்கூடிய அணிகளில் ஒன்றாக இருக்கும்”
“அது சுவாரசியமான வாய்ப்பாகும். ஒரு ஆஸ்திரேலியராக அது பயத்தைக் கொடுக்கக் கூடியதாகவும் இருக்கிறது. ஆனால் நமது விளையாட்டு மிகவும் வேகமாக வளர்ந்து வருவதைப் பார்ப்பது அற்புதமாக இருக்கிறது. அதே சமயம் உலகக்கோப்பை முடிந்ததிலிருந்து இப்போதும் நாங்கள் உலகின் சிறந்த அணி என்பதை மறுக்கவில்லை என்று நான் சொல்லி வருகிறேன்”
இதையும் படிங்க: யுவ்ராஜிடம் 6 சிக்ஸ் கொடுக்க இதான் காரணம்.. ஆனா அதுவே என்னோட கேரியராய் உருவாக்குச்சு.. ஸ்டுவர்ட் ப்ராட்
“உலகக் கோப்பைகள் என்பது அதிக அழுத்தமான நேரங்களில் உங்களுடைய வெற்றிகரமான திறமைகளைக் காட்டுகிறது. எந்த அணிக்கு எதிராகவும் தொடர்ச்சியாக 10 போட்டிகளில் விளையாடினால் எங்களால் 8 – 9 வெற்றிகளைப் பெற முடியும் என்பது எங்களுக்குத் தெரியும். அது அதீத தன்னம்பிக்கை போல் தெரிந்தாலும் நாங்கள் எங்களை உலகின் சிறந்த அணியாக கருதுகிறோம். இந்தியா எங்களுக்கு எவ்வளவு பாதிப்பையும் சவாலையும் கொடுப்பார்கள் என்பதும் தெரியும்” என்று கூறினார்.