
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கு முன்னதாக ஏற்கனவே கே.எல் ராகுல், அக்சர் பட்டேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் காயம் காரணமாக வெளியேறிய நிலையில் அடுத்ததாக கே.எல் ராகுல் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் வெளியேறினர்.
இதோடு இந்த கதை நிற்காமல் மேலும் அணியின் முன்னணி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவும் அணியில் இருந்து வெளியேறினார். இப்படி பல வீரர்கள் காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறிய நிலையில் மூத்த வீரர்களான பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் இந்த டி20 தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டனர்.
அதன்படி இந்திய அணியானது இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இந்த டி20 தொடரில் பும்ரா விளையாடுவது தனக்கு வியப்பாக இருக்கிறது. அவரை ஏன் அணியில் தேர்வு செய்தீர்கள்? என்று தனது கருத்தை வெளிப்படையாக இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இலங்கை அணிக்கு எதிரான இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பும்ரா விளையாடுவது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. எந்த ஒரு வீரரும் அணியில் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று தான் விரும்புவார்கள். அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.
ஆனால் டி20 தொடரை தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன. இன்னும் நிறைய போட்டிகள் இந்திய அணிக்கு எதிர்வரும் நாட்களில் உள்ளன. அதனால் பும்ராவிற்கு விளையாட நிறைய வாய்ப்புகள் உள்ளன. எனவே இந்த தொடரில் அவருக்கு ஓய்வு அளித்திருக்கலாம். அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்ட வேளையில் மற்ற பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்து இருக்கும்.
இதையும் படிங்க : இந்திய அணி ரொம்ப ஈஸியா இலங்கை அணியை ஜெயிச்சிருந்தாலும் – தவறை சுட்டிக்காட்டி கடுப்பான ரசிகர்கள்
ஆனால் பும்ரா அணிக்குள் வந்ததால் புவனேஸ்வர் குமார், முகமது சிராஜ், ஆவேஷ் கான் ஆகியோரில் ஒருவருக்கு மட்டுமே ஆட வாய்ப்பு கிடைக்கிறது. இதன் காரணமாக பும்ரா ஆடுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவருக்கு இந்த டி20 தொடரில் ஓய்வு கொடுத்து டெஸ்ட் போட்டிக்கான அணியில் சேர்த்திருக்கலாம் என்று தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.