வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு உலகின் அனைத்து அணிகளும் மும்முரமாக தயாராகி வருகின்றன. அதற்காக இந்தியா போன்ற அணிகள் இன்னும் தரமான வீரர்களை கண்டறிந்து வரும் நிலையில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகள் ஏற்கனவே தங்களது உலகக்கோப்பை அணியை முன்கூட்டியே வெளியிட்டுள்ளன. இதில் கடந்த வருடம் விராட் கோலி தலைமையில் பாகிஸ்தானிடம் தோற்று லீக் சுற்றுடன் வெளியேறிய இந்தியா இம்முறை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற ரோகித் சர்மா தலைமையில் பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்து உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக முன்னேறியது.
ஆனால் 2022 ஆசிய கோப்பையில் வழக்கம்போல அழுத்தமான சூப்பர் 4 சுற்றில் தோற்ற இந்தியா பைனலுக்கு கூட தகுதி பெறவில்லை. உலகக்கோப்பை துவங்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் சந்தித்துள்ள இந்த பெரிய தோல்வி ரசிகர்களை கலக்கமடைய வைக்கிறது. மேலும் இந்த தோல்வியால் விரைவில் வெளியிடப்படவுள்ள உலகக்கோப்பை அணியில் அதிரடியான சில மாற்றங்களும் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகக் கோப்பைக்கு இன்னும் 50 நாட்கள் கூட இல்லாத நிலையில் ஆசிய கோப்பையில் சுமாராக செயல்பட்ட கேஎல் ராகுல் போன்ற நட்சத்திர வீரர்களை கழற்றிவிடும் ரசிகர்கள் தங்களது தரமான டி20 உலகக்கோப்பை அணியை தேர்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.
ஆஷிஷ் நெஹ்ராவின் அணி:
அதேபோல் சில முன்னாள் வீரர்களும் தங்களது டி20 உலகக்கோப்பை இந்திய அணியை தேர்வு செய்ய தொடங்கியுள்ளார்கள். அந்த வரிசையில் இணைந்துள்ள முன்னாள் இந்திய வீரர் ஆசிஸ் நெஹ்ரா தன்னுடைய அணியை தேர்வு செய்து வெளியிட்டுள்ளார். ஆனால் ரசிகர்கள் கடுப்பாகியுள்ள கேஎல் ராகுலை தொடக்க வீரராக தேர்வு செய்துள்ள அவர் விரைவில் சொந்த மண்ணில் நடைபெறும் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா டி20 தொடர்களில் பார்முக்கு திரும்பி விடுவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் காயத்தால் தவிக்கும் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரையும் குணமடைந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தேர்வு செய்துள்ளார். ஐபிஎல் 2022 தொடரின் சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு இவர் ஐபிஎல் வரலாற்றில் கோப்பையை வென்ற முதல் இந்திய தலைமை பயிற்சியாளராக சாதனை படைத்துள்ளார். அப்படிபட்ட அவர் தன்னுடைய அணியை தேர்வு செய்து பேசியது பின்வருமாறு.
“டி20 உலக கோப்பைக்கு இன்னும் வெகு தூரம் உள்ளது. எனவே அடுத்த 6 போட்டிகளுக்குள் கேஎல் ராகுல் பார்முக்கு திரும்புவதை நம்மால் பார்க்க முடியும். சூரியகுமார் யாதவ் விளையாடும் 11 பேர் அணியில் இருக்க வேண்டும். ஏனெனில் ரிஷப் பண்ட்க்கு மாற்றாக அவரால் செயல்பட முடியும். அவரால் 3, 4, 5 ஆகிய இடங்களில் மாற்றியும் விளையாட முடியும்” என்று கூறினார்.
அத்துடன் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா முதல் தொடக்க வீரராகவும் 3வது இடத்தில் ஃபார்முக்கு திரும்பியுள்ள விராட் கோலியையும் தேர்வு செய்துள்ள அவர் ஆல்-ரவுண்டர்களாக நல்ல பார்மில் இருக்கும் ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தேர்வு செய்துள்ளார். மேலும் தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோரையும் தேர்வு செய்துள்ள அவர் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு.
“சஹால் மட்டுமல்ல ஜடேஜாவும் முக்கியமானவர். அஷ்வினும் விளையாடினால் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் என்பதால் முக்கியமானவர். இந்த அணியில் முகமது சமி மட்டும் எனது மனதில் தோன்றினாலும் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் பவுலராக இருக்கும் அவரை தேர்வுக்குழு தேர்வு செய்ய மாட்டார்கள் என்பதால் விடவேண்டியிள்ளது. அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாடினார் என்பதற்காக நான் இதை சொல்லவில்லை” என்று கூறினார்.
இதையும் படிங்க : இங்க கேப்டன் நான்தான். என்கிட்ட ஒரு வார்த்தை கேளுங்க – நேற்றைய போட்டியில் நடைபெற்ற சுவாரசியம்
இருப்பினும் காயத்திலிருந்து குணமடைந்து திரும்பியுள்ள தீபக் சஹரை தேர்வு செய்யாத அவர் பவர்பிளே ஸ்பெஷலிஸ்ட் பவுலராக புவனேஸ்வர் குமாரை தேர்வு செய்துள்ளார். ஆஷிஷ் நெஹ்ராவின் 15 பேர் டி20 உலககோப்பை இந்திய அணி இதோ:
ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வென்ற சஹால், ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் படேல், அர்ஷிதீப் சிங், தீபக் ஹூடா, புவனேஸ்வர் குமார்.