தோனி கடவுளின் பரிசு.. 20 கிலோ குறைஞ்சா எடுத்துக்குறேன்ன்னு சொன்னாரு.. 2018 பின்னணியை பகிர்ந்த ஆப்கன் வீரர்

Ashgar Afghan
- Advertisement -

நட்சத்திர முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் 3 விதமான வெள்ளைப்பந்து ஐசிசி உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ளார். மேலும் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் ஃபினிஷராகவும் செயல்பட்டு இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் பல இளம் வீரர்களுக்கு ரோல் மாடலாக திகழ்கிறார்.

அதனால் 2019 உலகக் கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வரும் அவரிடம் ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் நிறைய வெளிநாட்டு வீரர்களும் எதிரணி வீரர்களும் ஆலோசனைகளை பெறுவது வழக்கமாகும். அதே போல 2018 ஆசிய கோப்பையில் துபாயில் நடைபெற்ற போட்டியின் முடிவில் தோனியிடம் நிகழ்த்திய உரையாடல்களை பற்றி ஆப்கானிஸ்தான் வீரர் அஸ்கர் ஆப்கன் நினைவு கூர்ந்துள்ளார்.

- Advertisement -

20 கிலோ எடை அதிகம்:
அதாவது இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய அந்த போட்டி சமனில் முடிந்தது. அதைத் தொடர்ந்து போட்டியின் முடிவில் தோனியிடம் நிகழ்த்திய உரையாடல்கள் பற்றி அவர் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்து பேசியது பின்வருமாறு. “சமனில் முடிந்த அந்த போட்டியின் முடிவில் நான் எம்எஸ் தோனியிடம் நீண்ட நேரம் பேசினேன். மிகவும் சிறப்பான கேப்டனான அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு கடவுள் கொடுத்த பரிசாவார்”

“அவர் நல்ல மனம் கொண்ட மனிதர். அந்த சமயத்தில் நாங்கள் முகமது சேசாத் பற்றி அதிகமாக பேசினோம். குறிப்பாக சேஷாத் மிகப்பெரிய ரசிகனாக இருப்பதால் உங்களுடைய தலைமையில் விளையாட விரும்புவதாக தோனியிடம் நான் சொன்னேன். அதற்கு சேஷாத் பெரிய தொப்பையை கொண்டுள்ளார். எனவே 20 கிலோ குறைத்துக் கொண்டு வந்தால் அவரை நான் ஐபிஎல் தொடரில் தேர்வு செய்வேன் என்று தோனி என்னிடம் சொன்னார்”

- Advertisement -

“ஆனால் அந்த தொடருக்கு பின் ஆப்கானிஸ்தான் அணியில் இணைவதற்காக சேஷாத் வந்த போது எக்ஸ்ட்ராவாக 5 கிலோ எடை அதிகரித்திருந்தார். 2018 ஆசிய கோப்பையில் சமனில் முடிந்த அந்த போட்டி என்னால் மறக்க முடியாத ஒன்றாகும். அதை வெல்வதற்கு இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 2 அணிகளும் கடுமையாக போட்டியிட்டன” என்று கூறினார்.

இதையும் படிங்க: தெ.ஆ டெஸ்ட் தொடரில் இந்தியா சாதிக்க அவர் தான் கீப்பரா இருக்கணும்.. ஹர்பஜன் சிங் கருத்து

முன்னதாக 2017இல் 199 ஒருநாள் போட்டிகளுடன் கேப்டன்ஷிப் பதிவிலிருந்து விலகியிருந்த தோனி அந்த போட்டியில் ரோகித் சர்மா காயமடைந்ததால் மீண்டும் இந்தியாவை வழி நடத்தும் வாய்ப்பை பெற்றார். அந்த வாய்ப்பால் ஒருநாள் கிரிக்கெட்டில் 200 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனையையும் அன்றைய நாளில் எம்.எஸ். தோனி படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement