டெத் ஓவர்களில் தோனி, பாண்டியாவையே திணறடிக்கிறார் – முன்னாள் வீரரின் பாராட்டை அள்ளிய இளம் பவுலர்

- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்று போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் நாக் அவுட் சுற்றுக்கு செல்ல முடியாமல் நடையை கட்டுவது உறுதியாகியுள்ளது. ஏனெனில் நேற்று டெல்லிக்கு எதிராக வாழ்வா – சாவா என்ற நிலைமையில் தனது 13-வது லீக் போட்டியில் களமிறங்கிய அந்த அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. இதனால் பங்கேற்ற 13 போட்டிகளில் 6 வெற்றி 7-வது தோல்வியை பதிவு செய்த பஞ்சாப் கடைசி போட்டியில் வென்றாலும் பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு 99% அசாத்தியமாகியுள்ளது.

pbks

- Advertisement -

நவிமும்பையில் நடைபெற்ற அந்தப் போட்டியில் இத்தனைக்கும் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் சிறப்பாக பந்துவீசி டெல்லியை 20 ஓவர்களில் 159/7 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. டெல்லிக்கு அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 63 (48) ரன்களும் சர்ப்ராஸ் கான் 32 (16) ரன்களும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 160 என்ற இலக்கை துரத்திய பஞ்சாப்புக்கு ஜானி பேர்ஸ்டோ 28 (15) ஷிகர் தவான் 19 (16) ஆகியோர் தொடக்க வீரர்கள் ஓரளவு அதிரடியான ரன்களை எடுத்தாலும் மிடில் ஆர்டரில் ராஜபக்சா 4 (5) நம்பிக்கை நட்சத்திரம் லியம் லிவிங்ஸ்டன் 3 (5) ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக கேப்டன் மயங்க் அகர்வால் டக் அவுட்டாகி சொதப்பினார்.

அசத்தும் அர்ஷிதீப்:
அவர்கள் 10 – 15 போன்ற கணிசமான ரன்களை எடுத்திருந்தால் கூட பஞ்சாப் எளிதாக வெற்றி பெற்றிருக்கும் என்ற நிலையில் இறுதியில் ஜிதேஷ் சர்மா 44 (34) ராகுல் சஹர் 25* (24) ரன்களை எடுத்த போதிலும் 20 ஓவர்களில் 142/9 மட்டுமே எடுத்த அந்த அணி பரிதாபமாக தோற்றது. இதனால் முதல் கோப்பையை வெல்ல வேண்டுமென்ற பஞ்சாப் அணியின் கனவு மீண்டும் கனவாகவே போனது அந்த அணி ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

pbks 1

இத்தனைக்கும் இதர அணிகளை காட்டிலும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற இதர தரமான பவுலர்களை காட்டிலும் இந்த வருட ஐபிஎல் தொடரின் கடைசி கட்ட ஓவர்களில் பஞ்சாப் அணிக்காக இளம் இந்திய வீரர் அர்ஷிதீப் சிங் அட்டகாசமாக பந்து வீசி வருகிறார். நேற்றைய டெல்லிக்கு எதிரான போட்டியில் கூட 4 ஓவர்களை வீசிய அவர் 37 ரன்கள் மட்டும் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். கடந்த 2018 அண்டர்-19 உலக கோப்பையில் கவனத்தை ஈர்த்த அவரை 2019 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் வெறும் 20 லட்சத்திற்கு வளைத்துப் போட்டது.

- Advertisement -

சிறந்த டெத் பவுலர்:
அந்த வகையில் 2019, 2020 ஆகிய தொடர்களில் 10.90, 8.77 என்ற எக்கனாமியில் பந்து வீசத் தொடங்கிய அவர் கடந்த வருடம் 12 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை 8.27 என்ற அற்புதமான எக்கனாமியில் பந்துவீசி நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார். அதன் காரணமாக முகமது சமி போன்ற பவுலர்களை கூட தக்க வைக்காத அந்த அணி நிர்வாகம் இவரை 4 கோடி என்ற பெரிய தொகைக்கு தக்க வைத்தது. அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட்டு வரும் அவர் இந்த வருடம் 13 போட்டிகளில் 10 விக்கெட்களை 7.83 என்ற மேலும் துல்லியமான எக்கனாமியில் எடுத்து பல முன்னாள் வீரர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.

அதிலும் பேட்ஸ்மேன்கள் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு ரன் மழை பொழிய துடிக்கும் 16 – 20 வரையிலான இறுதிகட்ட ஓவர்களில் அவர் 7.14 என்ற கைதட்டி பாராட்டவேண்டிய எக்கனாமியில் அபாரமாக பந்து வீசுகிறார். குறிப்பாக தினேஷ் கார்த்திக் போன்ற பினிஷர்களுக்கு எதிராக யார்கர், மெதுவான பந்துகள் போன்ற நிறைய உத்திகளை கையாளும் அவர் கடைசி கட்ட ஓவர்களில் குறைவான ரன்களை கொடுத்து இந்த வருட ஐபிஎல் தொடரின் சிறந்த டெத் ஓவர் பவுலராக பெயர் பெற்றுள்ளார்.

தோனியாலும் முடியாது:
இந்நிலையில் கடைசி கட்ட ஓவர்களில் எம்எஸ் தோனி, ஹர்திக் பாண்டியா போன்றவர்களால் கூட அடிக்க முடியாத அளவுக்கு அர்ஷிதீப் சிங் அபாரமாக செயல்படுகிறார் என்று முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் பாராட்டியுள்ளார். இதுபற்றி நேற்றைய போட்டி முடிந்த பின் அவர் பேசியது பின்வருமாறு. “அர்ஷிதீப் ஒரு ஸ்பெஷல் வீரர். அவர் இளமையான தன்னம்பிக்கை மிகுந்த துல்லியமானவர். இந்த அனைத்து தகுதிகளும் அவரின் இளம் வயதை மறைக்கின்றது. எம்எஸ் தோனி, ஹர்திக் பாண்டியா அல்லது அதுபோன்ற பேட்ஸ்மேன்களை கூட கடைசிகட்ட ஓவர்களில் அதிரடி காட்ட முடியாத அளவுக்கு சிறப்பாக செயல்படுவது அவரின் திறமையை காட்டுகிறது. அவரின் வளர்ச்சி அபாரமானது”

Irfan-pathan

“இத்தனைக்கும் ரபாடா போன்ற சர்வதேச பவுலர் அந்த அணியில் இருந்த போதிலும் இந்தியாவிற்காக விளையாடாத ஒருவர் இவ்வளவு பாராட்டுகளை பெறுவதே அவரின் திறமைக்கு சான்றாகும். அவர் பஞ்சாப் அணியின் மிகப்பெரிய நட்சத்திரமாக உருவாக உள்ளார்” என்று கூறினார். இப்படி திறமையால் பாராட்டுகளைக் குவிக்கும் அர்ஷிதீப் சிங் ஐபிஎல் முடிந்தவுடன் நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement