
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டி செப்டம்பர் 19ஆம் தேதி அபுதாபியில் நடைபெற்றது. அதில் ஏற்கனவே சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதிப் பெற்ற இந்தியா ஏற்கனவே லீக் சுற்றுடன் வெளியேறிய ஓமனை எதிர்கொண்டது. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 20 ஓவரில் 188/8 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 56, அபிஷேக் சர்மா 38, அக்சர் படேல் 26, திலக் வர்மா 29 ரன்கள் எடுத்தனர். ஓமன் அணிக்கு அதிகபட்சமாக ஜிதன் ரமனண்டி, ஷா பைசல், அமைர் கலீம் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்து விளையாடிய ஓமன் அணிக்கு 56 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்த கேப்டன் ஜட்டிண்டர் சிங் 32 (33) ரன்கள் அடித்து அவுட்டானார்.
அடுத்து வந்த ஹமத் மிர்ஸா அதிரடியாக விளையாடினார். அவருடன் சேர்ந்து மறுபுறம் நிதானம் கலந்த அதிரடி காட்டிய அமைர் கலீம் அபாரமாக விளையாடி அரை சதத்தை அடித்து 64 (45) ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். அடுத்த சில ஓவரில் மறுபுறம் போராடிய மிர்சா அரை சதத்தை அடித்து 51 (33) ரன்னில் பாண்டியாவின் அபார கேட்ச்சில் அவுட்டானார்.
கடைசியில் ஜிதன் ரமனண்டி 12* (5) ரன்கள் எடுத்து 20 ஓவரில் ஓமன் 167/4 ரன்களை மட்டுமே எடுத்து போராடித் தோல்வியை சந்தித்தது. மறுபுறம் இந்திய அணி எதிர்பார்த்ததைப் போலவே 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, ஹர்டிக் பாண்டியா, குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
இந்தப் போட்டியில் எடுத்து விக்கெட்டையும் சேர்த்து அர்ஷ்தீப் சிங் 64 போட்டிகளில் 100 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய பவுலர் என்ற வரலாற்று சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். இத்தனைக்கும் 2022இல் அறிமுகமான அவர் 3 வருடத்தில் 100 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
இதையும் படிங்க: 188 ரன்ஸ்.. ஓமன் போட்டியில் சூரியகுமார் செய்த தியாகம்.. தோனி, பண்ட் கூட செய்யாத சாதனை படைத்த சாம்சன்
2016இல் அறிமுகமான ஹர்திக் பாண்டியா, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோரை 3 வருடத்திற்குள் முந்திய அவர் இந்தியாவுக்காக வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த அவர் இந்தியா கோப்பையை வெல்ல உதவியதை மறக்க முடியாது. ஆனால் அப்படிப்பட்ட அவருக்கு இந்திய அணியில் நிலையான வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதே பரிதாபமான விஷயமாக பார்க்கப்படுகிறது.