வீடியோ : தல தோனி பெயருடன் மேஜிக் விக்கெட் கீப்பிங் ஃபினிஷிங் செய்த இளம் ஆர்சிபி வீரர் – ரசிகர்கள் பாராட்டு

Anuj Rawat
- Advertisement -

கோலாகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 14ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெற்ற 60வது லீக் போட்டியில் ராஜஸ்தானை 112 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த பெங்களூரு தங்களுடைய 6வது வெற்றியை பதிவு செய்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 171/5 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் டு பிளேஸிஸ் 55 (43) ரன்களும் கிளன் மேக்ஸ்வெல் 54 (33) ரன்களும் எடுக்க ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா மற்றும் கேஎம் ஆசிப் தலா 2 விக்கெட்களை எடுத்தனர்.

அதை ராஜஸ்தான் அனலாக பந்து வீசிய பெங்களூருவுக்கு பதில் சொல்ல முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து வெறும் 59 ரன்களுக்கு சுருண்டு வரலாற்றின் 3வது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்த மோசமான சாதனையுடன் தோற்றது. சிம்ரோன் ஹெட்மயர் அதிகபட்சமாக 35 (19) ரன்கள் எடுத்து மோசமான 49 ஆல் அவுட் சாதனையிலிருந்து ஓரளவு காப்பாற்றிய நிலையில் நெருப்பாக பந்து வீசிய பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக வேன் பர்ணல் 3 விக்கெட்டுகளையும் மைக்கேல் பிரேஸ்வல் மற்றும் கரண் சர்மா ஆகியோர் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

- Advertisement -

தோனி போல அசத்தல்:
அப்படி ஒரு தலைப்பட்சமாக நடைபெற்று முடிந்த அந்த போட்டியில் இதர பேட்ஸ்மேன்கள் திணறிய போது அதிரடியாக செயல்பட்ட சிம்ரோன் ஹெட்மையர் 8வது ஓவரின் கடைசி பந்தில் பவுண்டரியை அடிக்க முயற்சித்து சிங்கிள் எடுக்க ஓடினார். அப்போது எதிர்புறம் இருந்த தமிழக வீரர் அஸ்வின் வழக்கம் போல சற்று மெதுவாக ஓடி வந்தார். அந்த சமயத்தில் சிராஜ் எடுத்து போட்ட பந்தை பிடித்த பெங்களூரு விக்கெட் கீப்பர் அனுஜ் ராவத் திரும்பி பார்க்காமலேயே அதை தனது கால்களுக்கு நடுவே குனிந்தவாறு ஸ்டம்புகளை நோக்கி திருப்பி விட்டு அடித்தார்.

அதை பெங்களூரு அணியினர் அவுட் கேட்டதால் 3வது நடுவர் சோதித்த போது மெதுவாக ஓடி வந்த அஸ்வின் வெள்ளைக்கோட்டை தொடுவதற்கு ஒரு இன்ச் முன்பாக அனுஜ் ராவத் திரும்பி பார்க்காமலேயே ஸ்டம்பை அடித்தது தெளிவாக தெரிந்தது. அதனால் நடுவர் அவுட் கொடுத்ததால் அவருடைய மேஜிக் நிறைந்த ரன் அவுட்டை அனைவரும் வியந்து பாராட்டினர். சொல்லப்போனால் அதைப் பார்த்த பெரும்பாலான ரசிகர்களுக்கு வரலாற்றில் இதற்கு முன் சில தருணங்களில் முன்னாள் இந்திய கேப்டன் மற்றும் ஜாம்பவான் விக்கெட் கீப்பர் தோனி இதே போல ரன் அவுட் செய்தது நினைவுக்கு வந்தது.

- Advertisement -

அப்படி தோனியை போலவே ரன் அவுட் செய்த அனுஜ் ராவத் தனது ரோல் மாடலாக கருதும் தோனி கையொப்பமிட்ட கிளவுஸை பயன்படுத்தி விக்கெட் கீப்பிங் செய்தது ரசிகர்களுக்கு மற்றுமொரு ஆச்சரியமாக அமைந்தது. அதே போல முதலில் பேட்டிங் செய்த பெங்களூருவுக்கு டு பிளேஸிஸ் – மேக்ஸ்வெல் ஆகியோர் அதிரடிக்கு பின் மிடில் ஆர்டரில் மஹிபால் லோம்ரர் 1 (2), தினேஷ் கார்த்திக் 0 (2) என முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தனர். அதனால் பினிஷிங் செய்யப்போவது யார் என்ற கவலை அந்த அணி ரசிகர்களிடம் ஏற்பட்ட போது களமிறங்கிய அனுஜ் ராவத் யாருமே எதிர்பார வகையில் கடைசி நேரத்தில் 3 பவுண்டரி 2 சிக்சரை பறக்க விட்டு 29* (11) ரன்களை 263.64 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார்.

இதையும் படிங்க:வீடியோ : எப்போதுமே நான் சிஎஸ்கே பிளேயர் தான், ஜெர்ஸியை மாற்றிய லார்ட் தாகூர் – தோனியிடம் ஆட்டோகிராப் வாங்கிய ரிங்கு

மொத்தத்தில் அந்தப் போட்டியில் தோனியை போலவே அவருடைய கையொப்பமிட்ட கையுறையுடன் விக்கெட் கீப்பிங்கில் மேஜிக் செய்து அவரைப் போலவே பேட்டிங்கிலும் அற்புதமான ஃபினிஷிங் கொடுத்த அனுஜ் ராவத் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.

Advertisement