
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களது முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வருகிறது. இந்த வருடம் புதிய கேப்டன் ரஜத் படிதார் தலைமையில் விளையாடி வரும் அந்த அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ளது. அந்த 8 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்றுள்ள அந்த அணி 3 தோல்விகளை சந்தித்துள்ளது.
ஆச்சரியப்படும் வகையில் அந்த 3 தோல்விகளையும் பெங்களூரு அணி தங்களது சொந்த ஊரில் இருக்கும் எம் சின்னசாமி மைதானத்தில் பதிவு செய்துள்ளது. அதனால் எப்படியாவது சின்னசாமி மைதானத்தில் வெற்றி பெறும் முனைப்புடன் பெங்களூரு அணி தயாராகி வருகிறது. இருப்பினும் சிறிய பவுண்டரிகளைக் கொண்ட சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணியை எதிரணிகள் பந்தாடி வெற்றியை பறித்துச் செல்வது வழக்கமாக இருக்கிறது.
மேலும் அங்குள்ள பிட்ச் அனைத்து நேரங்களிலும் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருக்கும் என்று கருதுவதும் ஆர்சிபி அணிக்கு ஏமாற்றத் தோல்விகளை பரிசாக்குகிறது. இதைத்தொடர்ந்து ஏப்ரல் 24ஆம் தேதி ஆர்சிபி அணி அந்த மைதானத்தில் அடுத்ததாக ராஜஸ்தானை சந்திக்கிறது. அதில் வெற்றி பெறுவதற்கு பிட்ச்சை சரியாகப் படியுங்கள் என்று ஜாம்பவான் அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.
குறிப்பாக பிட்ச் பற்றி சரியான உணர்ந்து அதற்கு தகுந்தாற்போல் விராட் கோலி, படிக்கல் ஆகியோர் நங்கூரமாக விளையாட வேண்டும் என்றும் கும்ப்ளே அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி ஜியோ ஸ்டார் சேனலில் பேசியது பின்வருமாறு. “சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்யும் போது எது பாதுகாப்பான ஸ்கோர் என்பதைக் கணிக்க முடியாதது பெரிய சவாலாகும்”
“200க்கும் குறைவாக அடிக்கும் எந்த ரன்களும் அங்கே பாதுகாப்பானது கிடையாது. இந்த வருடம் பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இல்லை. அங்கு இதுவரை விளையாடிய போட்டிகளில் பெங்களூரு அணி தடுமாற்றமாக பேட்டிங் செய்தது. எனவே விராட் கோலி, படிக்கல் ஆகியோர் நீண்ட நேரம் பேட்டிங் செய்து பில் சால்ட், ரஜத் படிதார் ஆகியோருக்கு சுதந்திரமாக விளையாடும் வழியை கொடுக்க வேண்டும்”
இதையும் படிங்க: கைரன் பொல்லார்டின் சாதனையை முறியடித்து வரலாறு படைத்த ஹிட்மேன் ரோஹித் சர்மா – விவரம் இதோ
“ராஜஸ்தானுக்கு எதிராக ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்தால் விராட் கோலி பெரிய ரன்கள் குவிப்பதற்காக தன்னை அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பிட்ச்சை புரிந்து அதற்கு உங்களை உட்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியம். முதலில் பேட்டிங் செய்யும் போதெல்லாம் அவர்களால் அதைச் சரியாக செய்ய முடியவில்லை” என்று கூறினார்.