
இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 38 வயதில் ஓய்வு பெறுவதாக அறிவித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. 2010 – 2024 வரை 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடிய அவர் இந்தியாவுக்காக அனில் கும்ப்ளேவுக்கு பின் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராக சாதனை படைத்துள்ளார். 2012 – 2024 வரை சொந்த மண்ணில் இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் இருக்கவும் அஸ்வின் முக்கிய பங்காற்றினார்.
முத்தையா முரளிதரனுக்கு நிகராக அதிக டெஸ்ட் தொடர்நாயகன் விருதுகளை வென்ற வீரராகவும் அஸ்வின் உலக சாதனை படைத்துள்ளார். ஆனாலும் அவருக்கு இந்திய அணி வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கவில்லை. அதனால் வருங்கால வீரர்களுக்கு வழி விட்டு ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார்.
இந்நிலையில் அஸ்வின் வெளிநாடுகளுக்கு செட்டாக மாட்டார் என்று முத்திரை குத்தி இந்திய அணி இப்படி ஆஸ்திரேலிய தொடரின் பாதியிலேயே ஓய்வு பெற வைத்தது தமக்கு ஏமாற்றமாக அமைந்ததாக ஜாம்பவான் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்போர்ட்ஸ்டார் இணையத்தில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “ரவிச்சந்திரன் அஸ்வின் மேட்ச் வின்னர். அவர் தன்னுடைய கேரியர் முழுவதும் நெறிமுறைகளுடன் அசத்தியவர். ஒவ்வொரு முறையும் அவர் தன்னைத்தானே மெருகேற்றி இந்த சூழ்நிலையிலும் பேட்ஸ்மேன்களை திணறடிக்க முயற்சித்ததை பார்த்திருப்பீர்கள்”
“14 – 15 வருடங்கள் விளையாடிய எந்த வீரரிடமும் நீங்கள் அதை பார்ப்பீர்கள். துரதிஷ்டவசமாக இந்திய அணி நிர்வாகம் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்காதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஜடேஜாவும் அவரும் வெளிநாடுகளில் ஜோடியாக ஒவ்வொரு போட்டியிலும் விளையாடியிருக்க வேண்டும். அஸ்வின் தாம் விளையாடிய எந்த வகையான மைதானங்களிலும் விக்கெட்டுகளை எடுத்தார்”
“அவர் இந்திய துணை கண்டத்தில் மட்டுமே அசத்தக்கூடியவர் என்று கருதப்பட்டது நியாயமற்றது. அப்படி நீண்ட காலம் விளையாடியவர்கள் வெற்றிகரமாக வழி அனுப்புவதற்கு தகுதியானவர்கள். அவர்கள் உட்கார்ந்து பேசி எனக்கு வழி அனுப்பும் போட்டியை நடத்துங்கள் என்று கேட்பது அவசியமற்றது”
இதையும் படிங்க: பும்ரா ரொம்ப கஷ்டத்தை கொடுக்குறாரு.. ஆனா அந்த நேரத்தில் நானே ஈஸியா அடிப்பேன்.. கமின்ஸ் பேட்டி
“ஆனால் அதைப் பெறாமல் அஸ்வின் வெளியேறிய விதம் எனக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. கடந்த காலங்களில் நிறைய வீரர்கள் இப்படி வெளியேறியுள்ளார்கள். அஸ்வின் போன்றவர் உருவாக்கியுள்ள வரைமுறைகளில் மற்றவர்கள் விளையாடுவது அவ்வளவு எளிதல்ல. அவர் இந்திய அணிக்காக வேறுபாடு இல்லாமல் சேவை செய்தவர்” என்று கூறினார். முன்னதாக வழி அனுப்பும் போட்டியை விரும்பாததாலேயே தாமாக இப்படி ஓய்வு பெற்றதாக அஸ்வின் சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.