சீனியர்னா சும்மாவா? களமிறங்கிய முதல் போட்டியிலேயே அற்புதத்தை நிகழ்த்தி காட்டிய – ஆஞ்சலோ மேத்யூஸ்

Angelo-Mathews
- Advertisement -

தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 13-ஆவது ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் சில போட்டிகள் முடிவடைந்த வேளையிலேயே அந்த அணியின் கேப்டன் ஷனகா தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியிலேயே இந்த தொடரில் இருந்து வெளியேறினார். அதனை தொடர்ந்து தற்போது குசால் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணி இந்த தொடரில் விளையாடி வருகிறது.

அதன்படி இந்த தொடரில் முதல் நான்கு போட்டிகளின் முடிவில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்று மூன்று தோல்விகளை சந்தித்துள்ள இலங்கை அணியானது புள்ளி பட்டியல் ஏழாவது இடத்தில் பின்தங்கி இருக்கும் வேளையில் இன்று இலங்கை அணியானது தங்களது ஐந்தாவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்த போட்டியில் அந்த அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான மதீஷா பதிரானா காயம் காரணமாக விலகியதால் அவருக்கு பதிலாக மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்ட அனுபவ வீரரான மேத்யூஸ் நேரடியாக சேர்க்கப்பட்டார். சமீப காலமாகவே பெரிய அளவில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத மேத்யூஸ் இப்படி நேரடியாக உலகக் கோப்பை போட்டிக்கான பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டது குறித்து பலரது மத்தியிலும் சில பேச்சுகள் எழுந்தன.

ஆனால் இன்று இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற வரும் போட்டியில் ஆஞ்சலோ மேத்யூஸின் செயல்பாடு அனைவரையும் வியக்க வைத்துள்ளது. ஏனெனில் இன்றைய போட்டியில் டாசில் வென்று முதலில் பேட்டிங் செய்த தீர்மானித்த இங்கிலாந்து அணியானது 33.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 156 ரன்கள் மட்டுமே குவித்தது. இப்படி இங்கிலாந்து அணி சரிய மேத்யூஸ் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல.

- Advertisement -

ஏனெனில் இங்கிலாந்து அணி இந்த போட்டியை ஆரம்பித்ததும் முதல் 6 ஓவர்களில் கிட்டத்தட்ட 40-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து அசத்தலாக ஆரம்பித்த வேளையில் முதல் விக்கெட்டாக டேவிட் மலானை மேத்யூஸ் வீழ்த்தினார். அதனை தொடர்ந்து பத்தாவது ஓவரில் ஜோ ரூட்டையும் ரன் அவுட் செய்தார். இப்படி அடுத்தடுத்து இங்கிலாந்துக்கு அவர் அழுத்தத்தை கொடுக்கவே அதன் பின்னர் வரிசையாக இங்கிலாந்து வீரர்கள் நடையை கட்டினர்.

இதையும் படிங்க : 45/0 டூ 156 ஆல் அவுட்.. நடப்பு சாம்பியன் மீது பாய்ந்த இலங்கை.. இந்தியாவை மிஞ்சி இங்கிலாந்து மோசமான சாதனை

ஒரு கட்டத்தில் மொயின் அலி மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோர் அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர். அந்த நேரத்தில் மொயின் அலியை மேத்யூஸ் வீழ்த்தி அந்த அணியின் அச்சாணியையே முறித்து விட்டார் என்று கூறலாம். இந்த போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் 5 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் உட்பட 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட் உட்பட 1 ரன் அவுட்டையும் செய்து இங்கிலாந்து அணியின் சரிவிற்கு முக்கிய காரணமாக அமைந்தார். அதனை தொடர்ந்து தற்போது 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement