ஹேக்கர் வேலையா ! ஐபிஎல் 2022 தொடருடன் ஓய்வை அறிவித்த சிஎஸ்கே வீரர் – சிறிது நேரத்தில் வாபஸ்

CSK MS Dhoni Ravindra Jadeja
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரின் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று உச்சகட்ட பரபரப்பில் மும்பை நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆரம்பத்திலிருந்தே பல குளறுபடியான முடிவுகளால் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. முதலில் துரதிர்ஷ்டவசமாக 14 கோடிக்கு வாங்கப்பட்ட தீபக் சஹர் விலகிய நிலையில் தேவையில்லாமல் கேப்டன்சிப் பதவியை எம்எஸ் தோனி ரவீந்திர ஜடேஜாவிடம் கொடுத்து திரும்ப வாங்கி முடிப்பதற்குள் சென்னையின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு 90% பறிபோனது.

CSK Ms DHoni

- Advertisement -

அந்த நிலைமையில் ஏற்கனவே ஆடம் மில்னே போன்ற முக்கிய பவுலர்கள் காயத்தால் விலகிய நிலையில் நம்பிக்கை நட்சத்திரம் ரவீந்திர ஜடேஜாவும் காயத்தால் விலகியது மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது. அதன்பின் பரம எதிரியான மும்பைக்கு எதிராக பங்கேற்ற 12-வது லீக் போட்டியில் பவர்கட் சர்ச்சையுடன் வெறும் 97 ரன்களுக்கு ஆல் அவுட்டான சென்னை 5 விக்கெட் வித்தியாசத்தில் படு மோசமாக தோற்று 2020க்கு பின்பு வரலாற்றில் மீண்டும் 2-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு அதிகாரபூர்வமாக தகுதி பெற முடியாமல் அவமானத்தைச் சந்தித்தது.

ராயுடு ஓய்வு:
இப்படி அடுத்தடுத்த தோல்விகளால் 5-வது முறையாக கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் வாய்ப்பையும் சென்னை இழந்து நிற்பது அந்த அணி ரசிகர்களிடம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் 2022 தொடருடன் ஒட்டுமொத்த கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக சென்னை அணிக்காக விளையாடி வரும் நட்சத்திர அனுபவ வீரர் அம்பத்தி ராயுடு தனது ட்விட்டரில் இன்று மதியம் பதிவிட்டிருந்தார். ஆந்திராவைச் சேர்ந்த அவர் தனது இளம் வயதிலேயே உள்ளூர் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டு 2010 முதல் மும்பை இந்தியன்ஸ் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அசத்தினார்.

அதன் காரணமாக இந்தியாவிற்காக அறிமுகமாகி நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் தவித்து வந்த அவர் ஒரு வழியாக 2018இல் தனது அபாரமான பேட்டிங்கால் ஒரு நிலையான இடத்தை பிடிக்க தொடங்கினார். அதிலும் 2018 ஐபிஎல் தொடரில் 602 ரன்களை தெறிக்கவிட்ட அவர் சென்னை 3-வது முறையாக கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றி 2019 உலக கோப்பையில் இந்தியாவிற்காக விளையாட தனது இடத்தை உறுதி செய்தார். ஆனால் 4-வது இடத்தில் விளையாடும் பேட்ஸ்மேன் பேட்டிங் பவுலிங் ஃபீல்டிங் என முப்பரிமாணவராக இருக்க வேண்டும் என நினைத்த அப்போதைய தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் ராயுடுவை கழற்றி விட்டு ஒருசில போட்டிகளில் மட்டுமே விளையாடிய விஜய் சங்கரை கண்மூடித்தனமாக தேர்வு செய்தார்.

- Advertisement -

ஓய்வு வாபஸ்:
அதனால் மனமுடைந்த அவர் தனது 34 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சியைக் கொடுத்தார். இருப்பினும் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வந்த அவர் ஐபிஎல் தொடரில் சென்னையின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்ததால் இந்த வருடம் அவரை மீண்டும் அந்த அணி நிர்வாகம் 6.5 கோடி என்ற தொகைக்கு வாங்கியது. இருப்பினும் இந்த வருடம் 10 இன்னிங்சில் 212 ரன்களை மட்டுமே எடுத்து சுமாராக செயல்பட்டு வரும் அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

அதன் காரணமாக நிறைய முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் இந்த செய்திகள் உடனடியாக வைரலானது. ஆனால் அடுத்த அரை மணி நேரத்திற்குள் அந்த ட்வீட்டை அம்பத்தி ராயுடு டெலிட் செய்தது அனைவரையும் மீண்டும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுபற்றி சென்னை நிர்வாக இயக்குனர் காசி விசுவநாதன் தெரிவித்தது பின்வருமாறு. “அம்பத்தி ராயுடு ஓய்வு பெறவில்லை. ஒருவேளை இம்முறை தனது பேட்டிங் சுமாராக இருப்பதால் அதை அவர் அறிவித்திருக்கலாம். அது வெறும் மனரீதியான ஒன்றாக இருக்கலாம். அவர் தொடர்ந்து சென்னையுடன் இருப்பார்” என்று ராயுடுவின் ஓய்வை அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளார்.

இதையும் படிங்க : தோனியும் அந்த முடிவை எடுத்துட்டா சி.எஸ்.கே அணியின் நிலைமை அதோ கதிதான் – சோயிப் அக்தர் ஓபன்டாக்

ஹேக்கர் வேலையா:
இருப்பினும் சமீபகாலங்களில் நிறைய நட்சத்திரங்களின் ட்விட்டர் கணக்கை பல ஹேக்கர்கள் உள்ளே நுழைந்து இதுபோன்ற குளறுபடியான வேலைகளை செய்தனர். சமீபத்தில் கூட இந்திய வீரர் க்ருனால் பாண்டியாவின் ட்விட்டர் பக்கத்தில் ஏடாகூடமான பதிவுகள் வந்து பின்னர் அழிக்கப்பட்டது. எனவே இதுவும் ஹேக்கர் வேலையாக இருக்கலாமோ என்று ரசிகர்கள் பேசுகின்றனர். எது எப்படி இருந்தாலும் இது பற்றிய முழு விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

Advertisement