- Advertisement -
உலக கிரிக்கெட்

கில்கிறிஸ்ட், ரிச்சர்ட்ஸ் சாதனையை அசால்ட்டாக உடைத்த ஆஸி சிங்கப்பெண் – உலகசாதனை (குவியும் வாழ்த்துக்கள்)

நியூஸிலாந்து நாட்டில் கடந்த மார்ச் 4-ஆம் தேதியன்று ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் கோலாகலமாகத் துவங்கியது. வரலாற்றில் 12-வது முறையாக நடைபெற்ற இந்த உலக கோப்பையில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட உலகின் டாப் 8 அணிகள் 31 போட்டிகளில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தின. அதில் முதலாவதாக நடந்த லீக் சுற்றில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 4 அணிகள் புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.

இந்த உலகக் கோப்பை மித்தாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி 3 வெற்றிகளை மட்டுமே பெற்றதால் லீக் சுற்றுடன் பரிதாபமாக வெளியேறியது. அதைத் தொடர்ந்து நடந்த நாக்-அவுட் சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 157 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஸ்திரேலியாவும் தென்ஆப்பிரிக்காவை 137 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இங்கிலாந்தும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

- Advertisement -

விஸ்வரூபம் எடுத்த அலிசா ஹீலி:
இதை அடுத்து இந்திய நேரப்படி இன்று அதிகாலை 6.30 மணிக்கு நியூசிலாந்தில் உள்ள கிறைஸ்ட்சர்ச் நகரில் துவங்கிய மாபெரும் இறுதிப் போட்டியில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவின் தொடக்க வீராங்கனைகள் அலிசா ஹீலி மற்றும் ரிச்சல் ஹய்ன்ஸ் ஆகியோர் ஆரம்பம் முதலே இங்கிலாந்து பவுலர்களை சரமாரியாக அடித்து முதல் விக்கெட்டுக்கு 160 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்தனர்.

ஆரம்பத்திலேயே இங்கிலாந்துக்கு மிகப் பெரிய தொல்லையாக மாறிய இந்த ஜோடியில் 93 பந்துகளில் 7 பவுண்டரிகள் உட்பட 68 ரன்கள் எடுத்த ஹய்ன்ஸ் ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து வீராங்கனைகள் நிம்மதி அடைவதற்குள் அடுத்து வந்த பெத் மூனியுடன் ஜோடி சேர்ந்த அலிசா ஹீலி மீண்டும் இங்கிலாந்து பவுலர்களை கதற கதற அடித்து 2-வது விக்கெட்டுக்கு 156 ரன்கள் ஜோடி சேர்த்து ஆஸ்திரேலியாவின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்தார். இந்த ஜோடியில் 47 பந்துகளில் 8 பவுண்டரிகள் உட்பட 62 ரன்கள் எடுத்திருந்த போது பெத் மூனி அவுட்டானார்.

- Advertisement -

மறுபுறம் ஆரம்பம் முதல் நங்கூரமாக நின்று விஸ்வரூபம் எடுத்து தொடர்ந்து விளையாடிய அலிசா ஹீலி சதம் அடித்தும் ஓயாமல் 138 பந்துகளில் 26 பவுண்டரி உட்பட 170 ரன்களை விளாசி 45 ஓவர்கள் வரை இங்கிலாந்து பவுலர்களை புரட்டி எடுத்து ஒருவழியாக ஆட்டமிழந்தார். இவரின் பட்டைய கிளப்பும் ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழந்த ஆஸ்திரேலியா 356/5 ரன்கள் எடுத்தது.

போராடிய ஸ்கீவர், ஆஸ்திரேலியா சாம்பியன்:
இதை தொடர்ந்து 357 என்ற மெகா இலக்கை துரத்திய இங்கிலாந்து ஆரம்பத்திலேயே தடுமாறியது. அந்த அணியின் தொடக்க வீராங்கனைகள் டேனியல் வைட் 4 ரன்களிலும் பியூமௌன்ட் 27 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமான தொடக்கத்தை கொடுத்தனர். இதனால் 38/2 எனக்கு தடுமாற்றமான தொடக்கத்தைப் பெற்ற இங்கிலாந்தை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஹீதர் நைட் 26 (25) ரன்களில் அவுட்டாக அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீராங்கனை நட் ஸ்கீவர் அதிரடியாக விளையாடி தனது அணிக்கு வெற்றியை தேடித்தர போராடினார்.

- Advertisement -

ஆனால் ஒருபுறம் அவர் மட்டும் சிறப்பாக விளையாட மறுபுறம் வந்த ஜோன்ஸ் 20 (18), டங்க்லி 22 (22) போன்ற முக்கிய மிடில் ஆடர் வீராங்கனைகள் அவருக்கு சப்போர்ட் கொடுக்காமல் ஆஸ்திரேலியாவின் அதிரடியான பந்துவீச்சில் சீரான இடைவெளிகளில் ஆட்டமிழந்தனர். இதனால் 43.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழந்த இங்கிலாந்து 285 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக 121 பந்துகளில் 15 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட சதமடித்து 148* ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நாட் ஸ்கீவர் போராடியது காண்பவர்களின் நெஞ்சை பிளந்தது.

இருப்பினும் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 71 ரன்கள் வித்யாசத்தில் தோற்கடித்தது ஐசிசி மகளிர் உலககோப்பை 2022 தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. இதற்கு முன் ஏற்கனவே 6 உலக கோப்பைகளை வென்ற ஆஸ்திரேலியா 7வது முறையாக கோப்பையை வென்று மகளிர் கிரிக்கெட்டில் வெற்றிகரமான அணி என தன்னை மீண்டும் நிரூபித்துள்ளது. ஏனெனில் அந்த அணியை தவிர்த்து இங்கிலாந்து 4 சாம்பியன் பட்டங்களையும், நியூசிலாந்து 1 சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளன. இந்தியா போன்ற அணிகள் ஒருமுறைகூட கோப்பையை வென்றது கிடையாது.

- Advertisement -

சிங்கப்பெண் அலிசா ஹீலி உலகசாதனை:
இந்த மாபெரும் வெற்றிக்கு 170 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய அலிசா ஹீலி ஆட்டநாயகி விருதை வென்றார். இது மட்டுமல்லாமல் இந்த தொடரில் பைனல் உட்பட மொத்தம் 9 போட்டிகளில் விளையாடிய அவர் 509 ரன்களை 56.55 என்ற மிகச் சிறப்பான சராசரியில் 103.66 என்ற அற்புதமான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் குவித்துள்ளார். இதில் 2 அரை சதங்களும் 2 சதங்களும் அடங்கும். இதன் வாயிலாக ஐசிசி மகளிர் உலககோப்பை 2022 தொடரில் அதிக ரன்கள் அடித்த வீராங்கனையாக சாதனை படைத்த அவர் இந்த உலக கோப்பையின் தொடர்நாயகி விருதையும் வென்று சாதனை படைத்தார். இந்த அதிரடியான இன்னிங்ஸ் வாயிலாக அவர் ஒருசில பிரம்மாண்ட உலக சாதனைகளை படைத்துள்ளார். அதைப்பற்றி பார்ப்போம்.

1. இந்த உலக கோப்பை இறுதி போட்டியில் 170 ரன்கள் அடித்த அவர் ஆடவர் அல்லது மகளிர் என ஒட்டுமொத்த உலக கோப்பை வரலாற்றின் ஒரு இறுதிப் போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த பேட்டர் என்ற ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் உலக சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். உலக கோப்பை வரலாற்றில் ஒரு இறுதிப் போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த பேட்டர்களின் பட்டியல் இதோ:
1. அலிசா ஹீலி : 170 ரன்கள் – இங்கிலாந்துக்கு எதிராக, 2022*
2. ஆடம் கில்கிறிஸ்ட் : 149 ரன்கள் – இலங்கைக்கு எதிராக, 2007
3. நட் ஸ்கீவர் : 148* ரன்கள் – ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2022*
4. ரிக்கி பாண்டிங் : 140* ரன்கள் – இந்தியாவுக்கு எதிராக, 2003.
5. சர் விவியன் ரிச்சர்ட்ஸ் : 138* ரன்கள் – இங்கிலாந்துக்கு எதிராக, 1979.

2. மேலும் மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த பேட்டர் என்ற புதிய சாதனையையும் அவர் படைத்தார். மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு இறுதிப் போட்டியில் அதிக ஸ்கோர் பதிவு செய்த பேட்டர்கள்:
1. அலிஷா ஹீலி : 170 ரன்கள், இங்கிலாந்துக்கு எதிராக, 2022*
2. கரேன் ரோல்டன் : 107* ரன்கள், இந்தியாவுக்கு எதிராக, 2007.

3. முன்னதாக இந்த உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியிலும் அலிசா ஹீலி சதம் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதன் வாயிலாக மகளிர் உலக கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட உலக கோப்பையின் அரையிறுதி மற்றும் பைனல் என அடுத்தடுத்த னாக்-அவுட் போட்டிகளில் சதங்கள் அடித்த முதல் வீராங்கனை என்ற புதிய சரித்திர சாதனையை அவர் படைத்தார். அத்துடன் ஒட்டு மொத்த உலக கோப்பை வரலாற்றில் இதுபோல அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் சதம் அடித்த பேட்டர் என்ற சாதனையை ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் உடன் பகிர்ந்து கொண்டார். கடந்த 2007-ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் ட்ராபியில் ஷேன் வாட்சன் இதேபோல அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் சதம் அடித்திருந்தார்.

4. மேலும் இந்த உலக கோப்பையில் 509 ரன்களை குவித்த அவர் மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட உலக கோப்பையில் அதிக ரன்களை குவித்த வீராங்கனை என்ற புதிய வரலாற்று சாதனையை படைத்தார். அவருடன் இதே உலக கோப்பையில் 497 ரன்கள் குவித்த மற்றொரு ஆஸ்திரேலிய வீராங்கனை ரிச்சல் ஹய்ன்ஸ் இந்தப் பட்டியலில் 2வது இடம் பிடித்தார்.

இதையும் படிங்க : சி.எஸ்.கே வெற்றிப்பாதைக்கு திரும்பணுனா அவரு ஒழுங்கா ஆடனும் – ரவி சாஸ்திரி ஓபன்டாக்

மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகளின் பட்டியல்:
1. அலிசா ஹீலி : 509 ரன்கள், 2022*
2. ரிச்சல் ஹய்ன்ஸ் : 497 ரன்கள், 2022*
3. டெப்பி காக்லி : 456 ரன்கள், 1997

- Advertisement -