
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பவுலிங் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் மோர்னே மோர்க்கல் நியமிக்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 400க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் எடுத்துள்ள அவர் கௌதம் கம்பீர் தலைமையில் கொல்கத்தா 2014 ஐபிஎல் கோப்பையை வெல்ல உதவினார். அதனால் கௌதம் கம்பீர் பரிந்துரைப்படி அவர் இந்திய அணியின் புதிய பவுலிங் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் வங்கதேச டெஸ்ட் தொடரிலிருந்து அவர் இந்திய அணியுடன் இணைந்து செயல்பட உள்ளார். முன்னதாக டேல் ஸ்டைனுடன் சேர்ந்து 2010 கால கட்டங்களில் சச்சின் டெண்டுல்கர் போன்ற ஜாம்பவான் வீரர்களுக்கே சவால் கொடுத்த மோர்க்கெல் வெளிநாடுகளில் பெரிய அனுபவத்தை கொண்டுள்ளார். எனவே வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் அவர் இந்திய பவுலர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணியில் தற்போது நம்பர் ஒன் பவுலராக இருக்கும் ஜஸ்ப்ரித் பும்ராவுடன் இணைந்து செயல்பட மோர்னே மோர்க்கெல் விரும்புவார் என அவருடைய சகோதரர் அல்பி மோர்க்கெல் தெரிவித்துள்ளார். அத்துடன் பும்ரா, ஜாஹீர் கான் ஆகிய இந்திய பவுலர்களை தம்முடைய தம்பிக்கு பிடிக்கும் என்றும் அல்பி மோர்க்கெல் கூறியுள்ளார்.
இது பற்றி மிட்-டே இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “உறுதியாக தெரியாது. ஆனால் அவருக்கு ஜஹீர் கான் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா மிகவும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். ஏற்கனவே சொன்னது போல அவர் என்ன நினைக்கிறார் என்பது துல்லியமாக எனக்குத் தெரியாது. ஆனால் ஜஸ்பிரித் பும்ரா தற்சமயத்தில் உலகின் சிறந்த ஆல் ஃபார்மட் பவுலராக திகழ்கிறார். அவர் மிகவும் ஸ்பெஷலானவர்”
“எனவே அவருடன் இணைந்து வேலை செய்ய மோர்னே மோர்க்கெல் மிகவும் விரும்புவார் என்பதை உறுதியாகச் சொல்வேன்” என்று கூறினார். அந்த வகையில் வித்தியாசமான பவுலிங் ஆக்சனை கொண்ட பும்ரா ஏற்கனவே எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுத்து வருகிறார். குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற அவர் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.
இதையும் படிங்க: திரைப்படமாகப்போகும் இந்திய வீரர் யுவராஜ் சிங்கின் கதை.. பயோபிக் படத்தில் நடிக்கப்போகும் – ஹீரோ யார் தெரியுமா?
மறுபுறம் மோர்க்கெல் வெற்றிகரமான வேகப்பந்து வீச்சாளராக அறியப்படுகிறார். எனவே அவரிடம் பயிற்சி எடுக்கும் போது பும்ரா நிறைய அனுபவங்களை கற்றுக்கொண்டு இன்னும் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக உருவெடுப்பார் என்பதில் சந்தேகமில்லை. அதே போலவே ஷமி, சிராஜ் ஆகியோரும் அவருடைய பயிற்சியில் 2024 – 25 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அசத்துவார்கள் என்று நம்பலாம்.