
ரோஹித் சர்மாவுக்கு பின் இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். உண்மையில் 2022க்குப்பின் ரோஹித் ஓய்வெடுத்த பெரும்பாலான டி20 தொடர்களில் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக செயல்பட்டார். மேலும் 2024 டி20 உலகக் கோப்பையிலும் ஹர்திக் பாண்டியா தான் துணை கேப்டனாக சிறப்பாக விளையாடி இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார்.
அதனால் ரோஹித்துக்குப் பின் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ஹர்திக் பாண்டியா காயத்தால் இந்தியா விளையாடும் அனைத்து தொடர்களிலும் விளையாடுவாரா என்பது உறுதியாக தெரியவில்லை. எனவே புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற கௌதம் கம்பீர் அவரை கழற்றி விட்டு சூரியகுமார் யாதவை புதிய கேப்டனாகவும் சுப்மன் கில்லை துணை கேப்டனாகவும் தேர்ந்தெடுத்துள்ளார்.
அடுத்த கேப்டன்:
ஆனால் ஹர்திக் பாண்டியா ஏற்கனவே 2022 ஐபிஎல் கோப்பையை குஜராத்துக்கு கேப்டனாக வென்று கொடுத்த அனுபவம் கொண்டவர். மறுபுறம் 2024 சீசனில் அதே குஜராத் அணி சுப்மன் கில் தலைமையில் லீக் சுற்றுடன் வெளியேறியது. அத்துடன் சமீபத்திய ஜிம்பாப்வே தொடரில் சுப்மன் கில் கேப்டனாக சுயநலமாக செயல்பட்டதாக ரசிகர்கள் ஆதாரத்துடன் விமர்சித்தனர்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் துணை கேப்டனாக நியமிக்கும் அளவுக்கு சுப்மன் கில்லிடம் என்ன இருக்கு? என்பதே பல ரசிகர்கள் கேள்வியாக இருக்கிறது. இந்நிலையில் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கான காரணம் பற்றி தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெளிவுபடுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட் காயத்தால் நீண்ட காலம் விளையாடவில்லை. எனவே மீண்டும் வந்துள்ள அவரிடம் கேப்டன்ஷிப் சுமையை நாங்கள் கொடுக்க விரும்பவில்லை”
“கேஎல் ராகுல் தற்போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதில்லை. எனவே நாங்கள் புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளோம். ஹர்திக் பாண்டியா காயங்களை சந்தித்த போது நல்லவேளையாக ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட்டார். ஆனால் நாங்கள் மீண்டும் அது போன்ற நிலைமையை விரும்பவில்லை. சுப்மன் கில் 3 ஃபார்மட்டிலும் விளையாடக்கூடிய வீரராக நாங்கள் கருதுகிறோம்”
இதையும் படிங்க: ஜடேஜாவின் ஒன்டே கேரியர் முடிந்ததா? ஒருநாள் அணியில் வாய்ப்பு கிடைக்காதா? அஜித் அகர்கர் விளக்கம்
“சில வருடங்களாக அவர் நல்ல தரத்தை காண்பித்துள்ளார். எனவே கேப்டன்ஷிப் பற்றி சூரியகுமார், ரோஹித் போன்றவர்களிடம் அடுத்த 2 வருடங்களில் கற்றுக்கொள்ள அவரைப் போன்றவரை நாங்கள் விரும்புகிறோம். ஏனெனில் திடீரென ஒருவர் காயம் அல்லது ஃபார்மை இழக்கும் போது நாங்கள் புதிய கேப்டனை சோதிக்க விரும்பவில்லை. சுப்மன் கில்லிடம் ஓரளவு தலைமை பண்புகள் இருக்கிறது. வாழ்க்கையில் எதுவும் உறுதியானது கிடையாது. ஆனால் வருங்கால கேப்டனாக வளர்வதற்கு தேவையான அனுபவத்தை பெறுவதற்காகவே அவருக்கு இந்த பொறுப்பை நாங்கள் கொடுத்துள்ளோம்” என்று கூறினார்.