விரைவில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. அதற்காக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் அதிரடியான மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டது. குறிப்பாக ஓய்வு பெற்ற ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா டி20 கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவரை துணை கேப்டனாக கூட அறிவிக்காத தேர்வுக்குழு சூரியகுமார் யாதவை புதிய கேப்டனாக அறிவித்துள்ளது. புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் பரிந்துரையை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ள தேர்வுக்குழு துணை கேப்டனாக சுப்மன் கில்லை தேர்ந்தெடுத்துள்ளது. அதே போல ஒருநாள் அணியில் ரவீந்திர ஜடேஜா கழற்றி விடப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
காரணம் என்ன:
ஏனெனில் 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் 20 ஓவர் போட்டிகளில் மட்டும் ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன் என்று தெரிவித்திருந்தார். இருப்பினும் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கௌதம் கம்பீர் தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் படேல் ஆகியோரை 2025 சாம்பியன்ஸ் டிராபியில் சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டராக பயன்படுத்த முடிவெடுத்துள்ளார்.
எனவே ரவீந்திர ஜடேஜாவின் ஒருநாள் கேரியர் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா இந்திய ஒருநாள் அணியில் நீக்கப்படவில்லை என தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெளிவுபடுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “3 போட்டிகள் கொண்ட தொடருக்கு ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் ஆகிய இருவரையும் அழைத்துச் செல்வது அர்த்தமற்றது”
“ஏனெனில் இருவரில் ஒருவர் கண்டிப்பாக பெஞ்சில் அமர்ந்தாக வேண்டும். ஜடேஜா டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டார். எனவே அவர் நீக்கப்படவில்லை. ஆனால் நாங்கள் இலங்கைத் தொடருக்கு அவரை எடுத்துச் செல்லவில்லை. ஏனெனில் அடுத்ததாக மிகப்பெரிய டெஸ்ட் தொடர் வர உள்ளது. இதை நாங்கள் தொடர் அறிவித்த போதே சொல்லி விட்டோம் என்று நினைக்கிறேன்”
இதையும் படிங்க: இலங்கை தொடரில் ருதுராஜ், அபிஷேக் சர்மா, சாம்சன் கழற்றி விடப்பட்டது ஏன்? அஜித் அகர்கர் விளக்கம்
“அதாவது இப்போதும் ஜடேஜா ஒருநாள் அணியின் ஒரு அங்கமாகவே இருக்கிறார். அவர் எங்களுடைய முக்கிய வீரர்” என்று கூறினார். இருப்பினும் 35 வயதை கடந்து விட்ட ஜடேஜா சமீப காலங்களில் பேட்டிங்கில் அதிரடியாக விளையாட தடுமாறுகிறார். எனவே 2025 சாம்பியன்ஸ் ட்ராபி உட்பட வருங்காலங்களில் இந்திய ஒருநாள் அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்றே சொல்லலாம்.



