
இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் களமிறங்க உள்ளது. அத்தொடரில் விளையாடுவதற்காக சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் 8 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்த கருண் நாயர் கடந்த இங்கிலாந்து தொடரில் பெரிய ரன்கள் குவிக்காததால் கழற்றி விடப்பட்டார்.
அவருக்கு பதில் சாய் சுதர்சன், தேவ்தூத் படிக்கல் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் கருண் நாயரின் இந்திய கேரியர் முடிந்ததாகவே பார்க்கப்படுகிறது. அதே போல அனுபவ வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கழற்றி விடப்பட்டுள்ளார். 2013 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார்.
2023 உலகக் கோப்பையில் நெருப்பாக பவுலிங் செய்த ஷமி இந்தியா இறுதிப் போட்டிக்கு செல்வதற்கு முக்கிய பங்காற்றினார். அத்தொடரில் சந்தித்த காயத்துக்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் அதிலிருந்து குணமடைய ஒரு வருடத்திற்கு மேல் எடுத்துக் கொண்டார். அதனால் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் விளையாடாத ஷமி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் விளையாடி இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார்.
இருப்பினும் அடுத்து நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் முகமது ஷமி ஃபிட்டாக இல்லை என்று சொல்லி தேர்வுக்குழு கழற்றி விட்டது. தற்போது சொந்த மண்ணில் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரிலும் கழற்றி விடப்பட்டுள்ளதால் கருண் நாயர் போல ஷமியின் கேரியரும் முடிவடைகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அது பற்றி கேட்டதற்கு காயத்திலிருந்து குணமடைந்த பின் ஷமி நிறைய பவுலிங் செய்து அசத்தவில்லை என்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.
எனவே ஷமி அசத்தினால் பின்னர் பார்க்கலாம் என்று கூறும் அவர் புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவெடுத்துள்ளது பற்றி பேசியது பின்வருமாறு. “ஷமி பற்றி எனக்கு அப்டேட் இல்லை. கடைசியாக அவர் துலீப் கோப்பையில் விளையாடினார். ஆனால் கடந்த 2 – 3 வருடங்களில் அவர் நிறைய கிரிக்கெட்டை விளையாடவில்லை. பெங்கால் அணிக்காகவும் துலீப் கோப்பையிலும் அவர் ஒரு போட்டியில் விளையாடினார்”
இதையும் படிங்க: 412 ரன்ஸ் சேஸிங்.. துரத்தும் கேஎல் ராகுல், சுதர்சன்.. கடைசி நாளில் ஆஸியை இந்தியா ஏ த்ரில்லாக சாய்க்குமா?
“அவர் எப்படிப்பட்ட தரமான வீரர் என்பது நமக்குத் தெரியும் ஆனால் அவர் கிரிக்கெட்டை விளையாட வேண்டும். இந்தியா ஏ அணிக்காக குர்நூர் சிங் நம்பிக்கை அளிக்கும் வகையில் அசத்தினார். அவர் மட்டுமின்றி 3 – 4 பவுலர்கள் விளையாடுகின்றனர். எனவே நாங்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் குழுவை உருவாக்க விரும்புகிறோம். ஏனெனில் அந்தத் துறையில் அதிக காயங்கள் ஏற்படுவதால் உங்களுக்கு பேக்-அப் வீரர்கள் தேவை” என்று கூறினார்.