இந்திய ரசிகர்களுக்கு நன்றி.. அவர் சொன்ன ஒரு வார்த்தை தான் எங்க வெற்றிக்கு காரணம்.. ஆப்கன் கேப்டன் பேட்டி

Shahidhi Jonathan Trott
Advertisement

இந்தியாவில் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 30ஆம் தேதி புனே நகரில் நடைபெற்ற லீக் போட்டியில் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் எளிதாக தோற்கடித்தது. அப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை சுமாராக விளையாடி 49.3 ஓவரில் 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக நிசாங்கா 46, கேப்டன் குசால் மெண்டிஸ் 39 ரன்கள் எடுக்க ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக பரூக்கி 4 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத் தொடர்ந்து 242 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தானுக்கு ரஹமனுல்லா குர்பாஸ் டக் அவுட்டான போதிலும் மற்றொரு துவக்க வீரர் இப்ராஹிம் ஜாட்ரான் 39 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

வெற்றியின் பின்னணியில்:
அதை பயன்படுத்தி மிடில் ஆர்டரில் ரஹ்மத் ஷா 62, கேப்டன் ஷாஹிதி 58*, ஓமர்சாய் 73* ரன்களை விளாசி 45.2 ஓவரிலேயே ஆப்கானிஸ்தானை வெற்றி பெற வைத்தனர். அதன் காரணமாக இலங்கை சார்பில் அதிகபட்சமாக மதுசங்கா 2 விக்கெட்டுகள் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை. மேலும் இங்கிலாந்து, பாகிஸ்தான் போன்ற வலுவான அணிகளை தோற்கடித்த ஆப்கானிஸ்தான் தற்போது இலங்கையையும் தோற்கடித்து 3வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.

இந்நிலையில் தங்களுடைய இந்த அடுத்தடுத்த வெற்றிகளுக்கு பயிற்சியாளராக இருக்கும் முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜொனதன் ட்ராட் முக்கிய பங்காற்றுவதாக ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் சொன்ன ஒரு வார்த்தை தான் தங்களுடைய அணுகுமுறையை மாற்ற உதவியதாக தெரிவிக்கும் சாகிதி அனைத்து போட்டிகளிலும் ஆதரவு கொடுக்கும் இந்திய ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“3 துறைகளிலும் அசத்திய எங்களுடைய அணியால் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். கடந்த போட்டியில் வென்றது எவ்விதமான இலக்கையும் எங்களால் சேசிங் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையை கொடுத்தது. குறிப்பாக எங்களுடைய பவுலர்கள் தரமாக செயல்பட்டனர். இந்த வெற்றியில் அனைத்து பயிற்சியாளர்களும் கடினமாக உழைத்து எங்களுக்கு அதிக தன்னம்பிக்கை கொடுத்து வருகின்றனர்”

இதையும் படிங்க: இங்கிலாந்து, பாகிஸ்தானுக்கு அடுத்து இலங்கை அணிக்கும் டாட்டா காட்டிய ஆப்கானிஸ்தான் – வேறலெவல் சம்பவம்

“குறிப்பாக ஜொனதன் ட்ராட் எப்போதும் நேர்மறையாக இருக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு முன் அவர் சொன்ன ஒரு வார்த்தை என்னுடைய மனதை பெரிய அளவில் மாற்றியது. ஒரு கேப்டனாக அணியை முன்னின்று வழி நடத்துவதை இத்தொடர் முழுவதும் நான் விரும்புகிறேன். மேலும் சிறந்த வீரரான ரசித் கான் எப்போதும் எங்களுடைய அணியை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார். இந்த சமயத்தில் ஆப்கானிஸ்தான் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அதிலும் குறிப்பாக நேரடியாக ஆதரவு கொடுத்து வரும் இந்திய ரசிகர்களுக்கும் நான் நன்றியை தெரிவிக்கிறேன்” என்று கூறினார்.

Advertisement