இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 30ஆம் தேதி புனேவில் மதியம் 2 மணிக்கு நடைபெற்ற 30வது லீக் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. செமி ஃபைனலுக்கு செல்ல இந்த போட்டியில் இரு அணிகளுமே வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய நிலையில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கைக்கு துவக்க வீரர் கருணரத்னே 15 ரன்களில் அவுட்டானாலும் மற்றொரு துவக்க வீரர் நிசாங்கா சிறப்பாக விளையாடிய 46 ரன்களில் எடுத்தார். அவர்களைத் தொடர்ந்து வந்த கேப்டன் குஷால் மெண்டிஸை 39 ரன்களில் அவுட்டாக்கிய முஜீப் சற்று அதிரடியாக விளையாடிய சமரவிக்கிரமாவையும் 36 ரன்களில் பெவிலியன் அனுப்பி வைத்தார்.
ஆப்கானிஸ்தான் வெற்றி:
அதனால் 139/4 என தடுமாறிய இலங்கைக்கு மிடில் ஆர்டரில் அசத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட அசலங்கா 22, டீ சில்வா 14, ஏஞ்சேலோ மேத்தியூஸ் 23 ரன்களில் அவுட்டாகி பெரிய இன்னிங்ஸ் விளையாடத் தவறினர். இறுதியில் தீக்ஷனா 29 ரன்கள் எடுத்த போதிலும் 49.3 ஓவரில் 241 ரன்களுக்கு இலங்கையை சுருட்டிய ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக பரூக்கி 4 விக்கெட்டுகளும் முஜீப் உர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.
அதைத்தொடர்ந்து 242 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தானுக்கு முதல் ஓவரிலேயே ரஹமனுல்லா குர்பாஸ் டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். இருப்பினும் அடுத்ததாக வந்த ரஹ்மத் ஷா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் அவருடன் 2வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்த மற்றொரு துவக்க வீரர் இப்ராஹிம் ஜாட்ரான் 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அந்த நிலைமையில் வந்த கேப்டன்ஸ் ஷாகிதி தன்னுடைய பங்கிற்கு கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் மறுபுறம் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய ரஹ்மத் ஷா 3வது விக்கெட்டுக்கு 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 62 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அப்போது வந்த ஓமர்சாய் இலங்கை பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு ஆப்கானிஸ்தானை வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார்.
குறிப்பாக கேப்டன் ஷாகிதியை விட அதிரடி காட்டிய அவர் 6 பவுண்டரி 3 சிக்சருடன் 73* (63) ரன்கள் குவித்து அசத்தினார். அவருடன் நிதானமாக விளையாடிய சாகிதி 58* (74) ரன்கள் எடுத்ததால் 45.2 ஓவரிலேயே 242/3 ரன்கள் எடுத்த ஆப்கானிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. அதனால் இலங்கை சார்பில் அதிகபட்சமாக மதுசங்கா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.
இதையும் படிங்க: இங்கிலாந்து, பாகிஸ்தானுக்கு அடுத்து இலங்கை அணிக்கும் டாட்டா காட்டிய ஆப்கானிஸ்தான் – வேறலெவல் சம்பவம்
சொல்லப்போனால் இங்கிலாந்து, பாகிஸ்தான் போன்ற அணிகளை அசால்டாக தோற்கடித்த ஆப்கானிஸ்தான் இப்போட்டியில் 1996 சாம்பியனையும் தோற்கடித்து 3வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. குறிப்பாக 2023 ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற விடாமல் செய்த இலங்கைக்கு அந்த அணி தற்போது பதிலடியும் கொடுத்துள்ளது. மறுபுறம் சுமாராக விளையாடிய இலங்கை 6வது இடத்திற்கு சரிந்துள்ளது.