சுழலால் இங்கிலாந்தை அப்செட் செய்த ஆப்கன்.. வரலாற்றை மாற்றி எழுதி 2 சரித்திர சாதனை வெற்றி

AFg vs ENg
- Advertisement -

இந்தியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 15ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 13வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. அந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தானுக்கு ரஹ்மத்துல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஜாட்ரான் ஆகியோர் 114 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமான துவக்கத்தை கொடுத்தனர்.

இருப்பினும் அதில் சற்று தடுமாற்றமாக விளையாடிய இப்ராஹிம் ஜாட்ரானை 28 ரன்களில் அவுட்டாக்கிய அடில் ரசித் அடுத்ததாக வந்த ராகுல் ஷா’வையும் 3 ரன்களில் அவுட்டாக்கி அசத்தினர். ஆனால் அதே ஓவரில் மறுபுறம் அதிரடியாக விளையாடிய ரஹ்மத்துல்லா குர்பாஸ் 8 பவுண்டரி 4 சிக்சருடன் 80 (57) ரன்களில் ரன் அவுட்டானது திருப்பு முனையாக அமைந்தது.

- Advertisement -

சரித்திர வெற்றி:
ஏனெனில் அடுத்ததாக வந்த கேப்டன் ஷாகிதி 14, ஓமர்சாய் 19, நட்சத்திர வீரர் முகமது நபி 9 ரன்களில் சீரான இடைவெளிகளில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 190/6 என சரிந்த ஆப்கானிஸ்தான் 250 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் மறுபுறம் சிறப்பாக விளையாடிய இக்ரம் கில் முக்கியமான 58 (66) ரன்களும் கடைசி நேரத்தில் ரசித் கான் 23 (22), முஜிப் உர் ரகுமான் 28 (16) ரன்களும் எடுத்தனர்.

அதனால் ஓரளவு தப்பிய ஆப்கானிஸ்தான் 49.5 ஓவரில் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக அடில் ரசித் 3, மார்க் வுட் 2 விக்கெட்களும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 285 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு ஆரம்பத்திலேயே ஜானி பேர்ஸ்டோ 2 ரன்களில் பரூக்கி வேகத்தில் அவுட்டாக அடுத்ததாக வந்த ஜோ ரூட் 11 ரன்களில் முஜீப் சுழலில் சிக்கினார்.

- Advertisement -

அதனால் 33/2 என சரிந்த அந்த அணிக்கு மறுபுறம் நிதானத்தை காட்ட முயற்சித்த டேவிட் மாலன் 32 ரன்களிலும் அடுத்ததாக வந்த கேப்டன் ஜோஸ் பட்லர் 9 ரன்களிலும் சீரான இடைவெளிகளில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர். அந்த சூழ்நிலையில் இளம் வீரர் ஹாரி ப்ரூக் ஒருபுறம் அழுத்தத்தை உடைக்க அதிரடியாக விளையாடினாலும் எதிர்ப்புறம் லியம் லிவிங்ஸ்டன் 10, சாம் கரண் 10 ரன்களில் ரசித் கான், நபி சுழலில் அவுட்டானது போட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த நிலையில் வந்த கிறிஸ் ஓக்ஸை 9 ரன்களில் கிளீன் போல்ட்டாக்கிய முஜீப் மறுபுறம் முடிந்தளவுக்கு போராடிய ஹரி ப்ரூக்கையும் 66 (61) ரன்களில் காலி செய்தார். இறுதியில் அடில் ரசித் 20, மார்க் வுட் 18, ரீஸ் டாப்லி 15* ரன்கள் எடுத்த போதிலும் 40.2 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து 215 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்தளவுக்கு சுழலில் மிரட்டிய ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக முஜீப், ரசித் கான் தலா 3 விக்கெட்டுகளும் முகமது நபி 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

இதையும் படிங்க: 2023 உலககோப்பை அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்ய இன்னும் இந்தியா எத்தனை போட்டிகளில் ஜெயிக்கனும் – விவரம் இதோ

அதனால் 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் உலகக்கோப்பை வரலாற்றில் 14 தொடர் தோல்விகளுக்கு பின் 15வது முயற்சியில் வெற்றியை பதிவு செய்துள்ளது. குறிப்பாக 2015இல் ஸ்காட்லாந்துக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான் முதல் முறையாக இங்கிலாந்து போன்ற ஒரு டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிக்கு எதிராக உலக கோப்பையில் சரித்திர வெற்றியை பெற்றுள்ளது. அதை விட இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக ஆப்கானிஸ்தான் ஒரு வெற்றியை பதிவு செய்து மற்றுமொரு சாதனை படைத்துள்ளது.

Advertisement