சஞ்சு சாம்சன் மேல தப்பில்ல, ஒன்னு ரிங்குவை யூஸ் பண்ணுங்க இல்ல அவரை கழற்றி விடுங்க – முன்னாள் வீரர் கோபமான பேட்டி

Sanju Samson Rinku Singh
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் உலகின் நம்பர் ஒன் அணியாக திகழும் இந்தியா 3 – 2 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. அதனால் 2016க்குப்பின் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஒரு டி20 தொடரிலும் ஒட்டுமொத்தமாக 5 போட்டிகள் கொண்ட ஒரு டி20 தொடரிலும் முதல் முறையாக இந்தியா தலைகுனியும் தோல்வியை சந்தித்து நாடு திரும்பியுள்ளது. இந்தத் தொடரில் பவுலிங் ஓரளவு சிறப்பாக இருந்தும் பேட்டிங்கில் சுப்மன் கில் போன்ற இளம் வீரர்கள் சுமாராக செயல்பட்டதே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

அதிலும் குறிப்பாக இத்தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் முழுமையான 5 போட்டிகளில் வாய்ப்பு பெற்று அதில் 3 போட்டிகளில் இக்கட்டான சமயங்களில் களமிறங்கி 12, 7, 13 என சொற்ப ரன்களில் அவுட்டாகி இந்தியாவை கைவிட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. கேரளாவை சேர்ந்த அவர் கடந்த 2015இல் அறிமுகமாகி 2019இல் 2வது போட்டியில் விளையாடிய கொடுமையை சந்தித்து 2021 வரை குப்பையை போலவே பயன்படுத்தப்பட்டு வந்தார். இருப்பினும் மனம் தளராமல் ஐபிஎல் தொடரில் போராடி வந்த அவர் கடந்த வருடம் கிடைத்த வாய்ப்புகளில் அயர்லாந்து டி20 தொடரில் அரை சதமடித்து ஜிம்பாப்வே ஒருநாள் தொடரில் ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார்.

- Advertisement -

சஞ்சு மீது தப்பில்ல:
இருப்பினும் கழற்றி விடப்பட்ட அவர் தற்போது ரிஷப் பண்ட், ராகுல் ஆகியோர் காயமடைந்துள்ளதால் இத்தொடரில் பெற்ற வாய்ப்பை சரியாக பயன்படுத்த தவறியுள்ளார். சொல்லப்போனால் ஏற்கனவே வாய்ப்பு கிடைக்காத நிலைமையில் ஆரம்பகாலம் முதலே கிடைக்கும் குறைவான வாய்ப்புகளிலும் அவர் தொடர்ந்து அசத்துவதில்லை என்ற விமர்சனத்தை ஒரு தரப்பினர் வைக்கின்றனர். அதற்கேற்றார் போல் இதுவரை 19 டி20 போட்டிகளில் 333 ரன்களை 18.5 என்ற சராசரியில் எடுத்துள்ள சஞ்சு சாம்சன் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தாமல் ஏமாற்றத்தை கொடுப்பதாக நிறைய ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பொதுவாகவே டாப் ஆர்டரில் விளையாடக்கூடிய சஞ்சு சாம்சனை சோதனைக்காக 5, 6 ஆகிய இடங்களில் பயன்படுத்தினால் எப்படி அசத்துவார் என முன்னாள் வீரர் அபிஷேக் நாயர் இந்திய அணி நிர்வாகத்தை விமர்சித்துள்ளார். எனவே ஒன்று சாம்சனுக்கு டாப் ஆர்டரில் வாய்ப்பு கொடுத்து மிடில் ஆர்டரில் ரிங்கு சிங் போன்றவரை விளையாட வையுங்கள் இல்லையால் மொத்தமாக கழற்றி விடுங்கள் என்று கோபத்துடன் விமர்சிக்கும் அபிஷேக் நாயர் இது பற்றி ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவர் வாய்ப்புகளை தவற விட்டார் என்று எனக்கு உறுதியாக தோன்றவில்லை. நிச்சயமாக அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் ஏனெனில் அவர் சஞ்சு சாம்சன். ஒருவேளை சஞ்சுவின் இடத்தில் இருந்தால் நீங்கள் இருந்தால் நிச்சயமாக ஒரு கேள்வியை கேட்பீர்கள். அதாவது அவர் நம்பர் 6வது இடத்தில் விளையாடக்கூடிய பேட்ஸ்மேனா அல்லது இதற்கு முன் அவர் அதிகமாக 6வது இடத்தில் விளையாடியுள்ளாரா என்று கேட்பீர்கள். அவர் அங்கே எப்போதும் அதிகம் விளையாடியதில்லை. அதனால் அது அவருக்கு புதிய வேலையாக இருக்கிறது என்று நினைக்கிறேன்”

“அந்த இடத்தில் 3 போட்டிகளில் விளையாடிய அவர் சிறப்பாக செயல்படவில்லை. ஒருவேளை வாய்ப்புகள் கிடைத்தால் ரன் அடிக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். இன்று அவர் 5வது இடத்தில் பேட்டிங் செய்ய வைக்கப்பட்டார். இந்த சமயத்தில் நீங்கள் சஞ்சுவை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவரை 3வது இடத்தில் விளையாட வையுங்கள். அதுவே அவருடைய இடமாகும். அங்கே தான் அவர் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளார். இல்லையேல் விளையாட வைக்காதீர்கள்”

இதையும் படிங்க:அவர சரியாவே யூஸ் பண்ணல, 10 பிளேயரோட ஆடுனா எப்டி ஜெயிக்க முடியும்? பாண்டியா கேப்டன்ஷிப் தவறை விளாசும் ஆகாஷ் சோப்ரா

“ஒருவேளை 5, 6 இடங்களில் அவரை நீங்கள் விளையாட வைக்க விரும்பினால் தயவுசெய்து அதை செய்யாமல் ரிங்கு சிங்கை விளையாட வையுங்கள். ஒருவேளை சாம்சன் டாப் 3 இடங்களுக்குள் விளையாடினால் சிறப்பாக செயல்படுவார். ஏனெனில் பவர் பிளேவை பயன்படுத்தி அதிரடியாக விளையாடக்கூடிய அவர் ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்வார். எனவே இது அவருக்கான சரியான இடம் கிடையாது என்று நான் நம்புகிறேன்” என கூறினார்.

Advertisement