
அண்மையில் நடைபெற்று முடிந்த 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரினை சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இந்த தொடருக்கு முன்னதாக டி20 போட்டிகளில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கும் அபிஷேக் ஷர்மாவே இந்த தொடரில் அதிக ரன்கள் குவிக்கப்போகும் வீரராக இருப்பார் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் கணித்திருந்தனர். ஆனால் இந்த தொடரில் அபிஷேக் சர்மாவின் ஆட்டம் ஏற்றத்தாழ்வாகவே அமைந்தது.
குறிப்பாக இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகளில் முதல் மூன்று ஆட்டங்களிலும் டக் அவுட்டான அவர் சூப்பர் 8 சுற்றின் போது ஒரு அரை சதத்தையும் கடைசியாக நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஒரு அரை சதத்தையும் அடித்து இந்த தொடரினை ஓரளவு சிறப்பாக நிறைவு செய்திருந்தார். முன்னதாக அவர் இந்த தொடரின் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து டக் அவுட்டாகும்போது அவரது மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
அது மட்டும் இன்றி அவர் அணியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்ற பேச்செல்லாம் இருந்து வந்தது. இருந்தாலும் அணியின் நிர்வாகம் அவரின் திறமை மீது நம்பிக்கை வைத்து தொடர் வாய்ப்புகளை வழங்கி வந்தது. இந்நிலையில் இந்த உலக கோப்பை தொடரில் தான் தடுமாறும் போதும் யுவராஜ் சிங் எந்த அளவு தன்னை பாதுகாத்தார் என்பது குறித்தும் அவர் கொடுத்த அறிவுரைகள் குறித்தும் சில கருத்துக்களை அபிஷேக்சர்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் யுவி பாயுடன் தொடர்ந்து பேசினேன். நேர்மையான ஆலோசனைகளுக்காக நான் எப்போதும் அணுகக்கூடிய வீரர் அவர்தான். அவர் என்னிடம் கூறும் போது நீங்கள் யார் என்பதை எப்போதும் மாற்றிக் கொள்ளக்கூடாது. ஆக்ரோஷமான ஆட்டக்காரர்களுக்கு இப்படிப்பட்ட சரிவு ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். எனவே உங்களுடைய பலத்தை நம்பி விளையாடுங்கள்.
இதையும் படிங்க : கவுதம் கம்பீர் கிடையாது.. நான் டி20 அணியின் கேப்டனாக இந்த 4 பேர் தான் காரணம் – சூரியகுமார் யாதவ் வெளிப்படை
அப்படி உங்களுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நிச்சயம் ரன்கள் வரும் என்று என்னுடைய திறமையை ஆதரித்தார். அவர் கூறியது போன்று நான் இந்த இடத்திற்கு வருவதற்கான காரணமே என்னுடைய அதிரடியா பேட்டிங் தான். எனவே அதிலிருந்து மாறவேண்டாம் என முடிவு செய்தேன். நான் முடிவு செய்தது போலவே சிறப்பாக விளையாட வேண்டும் என்றே தான் விளையாடியதாக அபிஷேக் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.