
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது இன்று மெல்போர்ன் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்சல் மார்ஷ் தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது :
ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்களை மட்டுமே குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர் அபிஷேக் சர்மா 68 ரன்களையும், வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா 35 ரன்களையும் குவித்தனர்.
பின்னர் 126 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 13.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி தோல்வியை தழுவினாலும் தனி ஒரு வீரராக அபிஷேக் சர்மா தான் நம்பர் ஒன் டி20 பேட்டர் என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடினார்.
அவரது இந்த சிறப்பான ஆட்டம் அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது. ஏனெனில் இந்திய அணி 32 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் ஒருபுறம் அதிரடியான ஆட்டத்தை கையில் எடுத்து அபிஷேக் சர்மா 37 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 68 ரன்கள் குவித்தார்.
அவரை தவிர்த்து ஹர்ஷித் ராணா மட்டும்தான் 35 ரன்கள் அடித்தார். முன்னணி வீரர்கள் யாரும் 10 ரன்கள் கூட தொடாத நிலையில் அணி சறுக்கலை சந்தித்தபோதும் அதிரடியாக விளையாடி இந்திய அணியின் ரன் குவிப்பிற்கு அபிஷேக் ஷர்மா உதவினார். அவருடன் யாராவது ஒருவர் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தால் நிச்சயம் இந்திய அணி இன்னும் நல்ல ஸ்கோரை நோக்கி நகர்ந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஐ.பி.எல் அணிக்கு பயிற்சியாளராக வரப்போகும் யுவ்ராஜ் சிங்.. எந்த அணிக்கு தெரியுமா? – விவரம் இதோ
ஏற்கனவே இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி மழையால் நடைபெறாத வேளையில் இன்றைய இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளதால் இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.