ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 12ஆம் தேதியில் நடைபெற்ற 27வது போட்டியில் ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை தோற்கடித்தது. ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் 246 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 82, பிரியான்ஸ் ஆர்யா 36, ஸ்டோய்னிஸ் 34* ரன்கள் அடித்தார்கள்.
அடுத்ததாக விளையாடிய ஹைதராபாத் உங்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்ற வகையில் பஞ்சாப்பை அடித்து நொறுக்கி 18.3 ஓவரில் 247/2 ரன்கள் விளாசி வெற்றி பெற்றது. அதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் இரண்டாவது அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக துரத்தி ஹைதராபாத் சாதனை படைத்தது. மேலும் புள்ளிப்பட்டியலில் பத்தாவது இடத்தில் சென்னையை தள்ளி விட்டு ஹைதராபாத் 8வது இடத்திற்கு முன்னேறியது.
ஆட்டநாயகன் அபிஷேக்:
அந்த வெற்றிக்கு பஞ்சாப் பவுலர்களை காட்டுத்தனமாக அடித்து 14 பவுண்டரி 10 சிக்ஸருடன் 141 (55) ரன்கள் குவித்த அபிஷேக் சர்மா முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். அவருடன் டிராவிஸ் ஹெட் 66, க்ளாஸென் 21* ரன்கள் எடுத்து வெற்றியில் பங்காற்றினர். இந்நிலையில் இதற்கு முன் சுமாரான ஃபார்மில் இருந்தும் இந்தப் போட்டியில் சதத்தை அடிக்க வித்தியாசமான ஷாட்டுகளை முயற்சித்ததாக அபிஷேக் கூறியுள்ளார்.
மேலும் தம்முடைய குரு யுவராஜ் சிங் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் கொடுத்த ஆதரவு பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த ஃபார்மில் செல்லும் எந்த வீரருக்கும் இது போல விளையாடுவது கடினமாக இருக்கும். இங்கே எனது கேப்டன் அணி நிர்வாகம் ஆகியோருக்கு ஸ்பெஷல் பாராட்டு கொடுக்க வேண்டும். சிறப்பாக விளையாடவில்லை என்றாலும் அவர்கள் எங்களுக்கு எளிதான மெசேஜ் கொடுத்துள்ளார்கள்”
குருவுக்கு நன்றி:
“டிராவிஸ் ஹெட்டுடன் பேச வேண்டும். எங்களுக்கு இன்று ஸ்பெஷல் நாளாக அமைந்தது. பிட்ச்சுக்கு பின்புறத்தில் நான் எதையும் விளையாடவில்லை. அதனால் அங்கே நான் சில வித்தியாசமான ஷாட்டுகளை முயற்சித்தேன். குறிப்பாக பவுண்டரி அளவு மற்றும் பிட்ச்சில் இருந்த பவுன்ஸ் காரணமாக நான் சில புதிய ஷாட்டுகளை உருவாக்க முயற்சித்தேன். மொத்த ஹைதராபாத் அணியும் எனது பெற்றோருக்காக காத்திருந்தார்கள்”
இதையும் படிங்க: 18.3 ஓவரிலேயே 247.. பஞ்சாப்பை பதிலுக்கு ஓடவிட்ட ஹைதராபாத்.. சிஎஸ்கேவுக்கு நிகராக 2வது சேசிங் சாதனை வெற்றி
“அவர்கள் ஹைதராபாத் அணி மற்றும் ஆரஞ்சு ரசிகர்களுக்கு அதிர்ஷ்டமிக்கவர்கள். நாங்கள் எங்களுடைய இயற்கையான ஆட்டத்தை விளையாட விரும்பினோம். நாங்கள் தொடர்ச்சியாக சந்தித்த தோல்விகளை உடைக்க விரும்பினேன். ஒரு இளம் வீரராக அது மிகவும் கடினமானது. ஆனால் அந்த வெற்றியைப் பெற்றதால் நன்றாக இருக்கிறது. இங்கே யுவ்ராஜ் பாஜிக்கு ஸ்பெஷல் பாராட்டு கொடுக்க வேண்டும். அவருடன் தொடர்ச்சியாக பேசி வந்தேன். ஒரு பெரிய இன்னிங்ஸ் தொலைவிலையே உனது ஃபார்ம் இருப்பதாக சொன்ன சூரியகுமார் யாதவுக்கும் நன்றி” என்று கூறினார்.



