
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அவர் 2018 அண்டர்-19 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். அதனால் அடுத்த வருடமே சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் ஆரம்பக் காலங்களில் காயம் மற்றும் சீனியர்கள் இருந்ததால் நிலையான வாய்ப்புகளைப் பெறாமல் தடுமாறிக் கொண்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து 2021 ஆஸ்திரேலிய தொடரில் வாய்ப்பு பெற்ற அவர் காபா போட்டியில் 91 ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அப்போதிலிருந்து ஓரளவு கணிசமான வாய்ப்புகளைப் பெற்ற அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி நிலையான துவக்க வீரராக உருவெடுத்துள்ளார். அதே போல டி20 கிரிக்கெட்டிலும் சதத்தை அடித்து கணிசமாக அசத்தியுள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓரளவு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த வகையில் விராட் கோலிக்கு பின் இந்திய பேட்டிங் துறையின் நம்பிக்கை நட்சத்திரமாக அறியப்படும் அவரை பிசிசிஐ புதிய கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளது. இந்நிலையில் சுப்மன் கில்லுடன் 14 வயதிலிருந்தே விளையாடி வருவதாக அபிஷேக் ஷர்மா தெரிவித்துள்ளார். தற்போது தம்முடைய நண்பன் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக முன்னேறி சாதனை படைத்துள்ளது தமக்கும் பெருமையளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
இது பற்றி ஹைதராபாத் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபிஷேக் பேசியது பின்வருமாறு. “சுப்மன் கில் கேரியரை பார்க்கும் போது அண்டர்-14, அண்டர்-16 அளவிலிருந்தே நாங்கள் பஞ்சாப் அணிக்காக ஒன்றாக விளையாடத் துவங்கினோம். நாங்கள் அனைவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி எங்களுடைய கேரியரை துவங்கினோம்”
“அங்கிருந்து தற்போது அவர் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக முன்னேறியுள்ளது மிகப்பெரிய சாதனை. அவருக்காக நான் மிகவும் பெருமையைக் கொள்கிறேன். நாங்கள் கிரிக்கெட்டை ஒன்றாக பார்த்து ஜூனியர் லெவலில் ஒன்றாக விளையாடியுள்ளோம். சுப்மன் கில் சமீப காலங்களில் 3 கிரிக்கெட்டிலும் இந்தியா உருவாக்கிய சிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். அவர் தன்னுடைய வேலையில் சிறப்பாக செயல்படுவார்”
இதையும் படிங்க: ஒரே ஐபிஎல் சீசனில்.. ஜாம்பவான்கள் சச்சின், ஜெயசூர்யாவின் 18,15 வருட சாதனைகளை உடைத்த சூரியகுமார்
“இந்திய அணிக்காகவும் கேப்டனாகவும் அவர் தன்னுடைய பணியில் சிறப்பாக செயல்படுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” எனக் கூறினார். இதற்கிடையே 2025 ஐபிஎல் தொடரில் சுப்மன் கில் குஜராத் அணியை சிறப்பாக வழி நடத்தி பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அடுத்ததாக வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் அசத்தவில்லை என்ற தன் மீதான விமர்சனங்களுக்கு இங்கிலாந்தில் அவர் பதிலடி கொடுக்கத் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.